திங்கள், 13 ஏப்ரல், 2015

    ஐங்குறு நூறு - தொடர்ச்சி

எம் நலம் தொலைவது ஆயினும்
துன்னலம் பெரும பிறர்த் தோய்ந்த நின் மார்பே
                                                                        ஓரம்போகியார், ஐங்குறு. 63 : 3, 4
தலைவனே!  என்னுடைய அழகு முற்றிலும் அழிந்து ஒழிவதாயினும் பிற பெண்டிரைத் தழுவிய நின் மார்பை நான் விரும்பேன்.
                                                                                                      -வெறுப்பு

தூயர் நறியர் நின் பெண்டிர்
பேஎய் அனையம் யாம் சேய் பயந்தனமே
                                                                         ஓரம்போகியார், ஐங்குறு. 70 : 4, 5
தலைவனே !  நின் பரத்தையர் தூய்மையானவர், மணமுடையவர். நான் உனக்குக் குழந்தை பெற்றதால் உனக்குப் பேய் போன்றவளாகிவிட்டேன்.
                                                                                            -பழித்தல்

...அலரே
மறைத்தல் ஒல்லுமோ மகிழ்ந
புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்றது ஒளியே
                                                                       ஓரம்போகியார், ஐங்குறு. 71 : 3 – 5
 தலைவனே ! ஊரில் எழுந்த பழிச் சொற்களை  மறைக்க இயலுமோ; ஞாயிற்றின் ஒளியை மறைத்தல் இயலுமோ ?
                                                                                     -அலர்


பாணர் நரம்பினும் இன்கிளவியளே
                                                                          ஓரம்போகியார், ஐங்குறு. 100 : 4
அவள் வாய்ச் சொற்கள் பாணர் யாழினும் மிக்க இனிமையுடையன.
                                                                                               -காதல்

பாய் பரி நெடுந்தேர் கொண்கனொடு
தான் வந்தன்று என் மாமைக் கவினே
                                                                          அம்மூவனார், ஐங்குறு. 134 : 2, 3
பாணனே ! பாய்ந்து செல்லும் குதிரைகள் பூட்டிய நெடிய தேரில் என் தலைவன் வந்தான், அவனொடு சென்ற என் மாந்தளிர் மேனியழகும் வந்தது காண்பாயாக.
                                                                                                -மகிழ்ச்சி

கடல் அணிந்தன்று அவர் ஊரே
கடலினும் பெரிது எமக்கு அவருடை நட்பே
                                                                           அம்மூவனார், ஐங்குறு. 184 : 3, 4
கடலால் அணி பெற்றுச் சிறந்த ஊரை உடையவர் எம் தலைவர்,  அவர்க்கும் எமக்கும் உள்ள நட்போ அக்கடலினும் பெரியது ஆகும்.
                                                                                                  -காதல்

தேன் மயங்கு பாலினும் இனிய அவர் நாட்டு
உவலைக் கூவல் கீழ்
மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே
                                                                                  கபிலர், ஐங்குறு. 203 : 3 – 5
அன்னையே ! எம் காதலர் நாட்டில்   தழையால் மூடப்பட்ட கிணறுகளின் அடியில் விலங்குகளால் உண்ணப்பட்டு எஞ்சி நிற்கும் கலங்கிய சின்னீரும் நம்முடைய தோட்டத்தில் கிடைக்கும் இனிய தேனொடு கலந்த ஆவின் பாலினும் மிக்க இனிமை உடையதாகும்.
                                                                                                     -காதல்


அறவற்கு எவனோ நாம் அகல்வு அன்னாய்
                                                                                கபிலர், ஐங்குறு. 212 : 3
அன்னையே ! தலைவியின் அன்பிற்குரிய தலைவன் அறப்பண்புகள் நிறைந்த சான்றோனாக  இருக்கவும் அவனை நாம் விலக்குவதற்குக் காரணம் என்ன ?
                                                                                                     -இரங்கல்

இனிது செய்தனையால் நுந்தை வாழியர்
நல் மனை வதுவை அயர இவள்
பின் இருங் கூந்தல் மலர் அணிந்தோயே
                                                                         கபிலர், ஐங்குறு. 294 : 3 – 5
தலைவனே !  இன்று யானும் பிறரும் கண்டு மகிழும் வண்ணம் இவ்வதுவைச் சடங்கிலும் தலைவியின் பின்னப்பட்ட கரிய கூந்தலில் மலர் சூட்டி இனியன செய்தனை, நின் தந்தையார் நீடு வாழ்க.  
                                                                                           -மகிழ்ச்சி

நின் நயந்து உறைவி கடுஞ்சூல் சிறுவன்
முறுவல் காண்டலின் இனிதோ
இறுவரை நாட நீ இறந்து செய் பொருளே
                                                                  ஓதலாந்தையார், ஐங்குறு. 309 : 3 – 5
   பெரிய மலை நாடனே ! கொடிய காட்டு வழியைக் கடந்து சென்று ஈட்டக் கருதும் பொருள் நின்னையே பெரிதும் விரும்பி வாழும் நின் காதலியின் முதற் சூலில் பிறந்த மகனுடைய புன்சிரிப்பைக் கண்டு மகிழ்வதைக் காட்டிலும் இனிதோ ?
                                                                                          -பொருள்

ஒள் நுதல் அரிவையை உள்ளுதொறும்
தண்ணிய ஆயின சுரத்திடை ஆறே
                                                                    ஓதலாந்தையார், ஐங்குறு. 322 : 4, 5
 ஒளி பொருந்திய நெற்றியை உடைய என்  காதலியை நினைக்கும் பொழுதெல்லாம் வெம்மை மிகுந்த காட்டு வழிகள் குளிர்ச்சி உடையனவாகத் தோன்றுகின்றன.
                                                                                                         -காதல்  

பேதை நெஞ்சம் பின்செல சென்றோர்
கல்லினும் வலியர் மன்ற
பல்லிதழ் உண்கண் அழப் பிரிந்தோரே
                                                                    ஓதலாந்தையார், ஐங்குறு. 334 : 4, 5
  தோழியே ! அறியாமைமிக்க என் நெஞ்சம் கொடிய காட்டு வழியே சென்ற எம் தலைவரைப் பின் தொடர, நீல மலர் போலும் மையுண்ட என் கண்கள் அழுமாறு  பிரிந்து சென்றவர் மெய்யாகவே கல்லைக் காட்டிலும் வலிய உள்ளம் கொண்டவராவார்.

                                                                                                    -ஆற்றாமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக