செவ்வாய், 28 ஏப்ரல், 2015

கப்பல் போக்குவரத்து

கப்பல்-பன்னாடு
வேறு பன்னாட்டிற் கால் தர வந்த
பலவுறு பண்ணியம் இழிதரு நிலவு மணல்
                 நக்கீரனார், நற். 31: 8,9
வேறாகிய பல நாட்டினின்றும் கலங்களைக் காற்றுச் செலுத்துதலாலே வந்திறுத்த பலவகைப் பண்டங்கள் இறக்கியிட்ட நிலவை ஒத்த மணற்பரப்பில்.
பாண்டியர் துறைமுகம்-
வென்வேற் கவுரியர் தொன்முது கோடி
முழங்கிரும் பெளவம் இரங்கும் முன்றுறை
வெல்போர் இராமன் அருமறைக் கவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலியவியந் தன்றிவ் வழுங்கல் ஊரே
         மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார், அகநா. 70: 13-17
வெற்றி வேலினையுடைய பாண்டியரது மிக்க பழைமையுடைய திருவணைக் கரையின் (தனுஷ்கோடி) அருகில், முழங்கும் இயல்பினதான பெரிய கடலின் ஒலிக்கின்ற துறைமுகத்தில் வெல்லும் போரில் வல்ல இராமன் அரிய மறையினை ஆராய்தற் பொருட்டு.....
கலங்கரை விளக்கம்
உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்
புலவுத்திரைப் பெருங்கடல் நீர் இடைப் போழ
இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி
விரைசெலல் இயற்கை வங்கூழ் ஆட்ட                                   
 கோடு உயர் திணி மணல் அகந்துறை நீகான்
மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய
   மதுரை மருதன் இளநாகனார், அகம். 255 : 1-6
உலகமே கிளர்ந்து எழுந்தாற்போன்ற அச்சம் பொருந்திய நாவாயானது, வேகமான வீசும் இயல்புனதாய காற்று அசைத்துச் செலுத்த, இரவு பகலாக ஓரிட்த்தும் தங்காது புலால் நாறும் அலைகளையுடைய பெரிய கடலின் நீர்ப் பரப்பைக் கிழித்துக் கொண்டு சென்றது.நாவாய் ஓட்டியும் கரை உயர்ந்த மணல் செறிந்த துறையிடத்தே, ஒளி பொருந்திய விளக்கினால் செல்லும் இடம் அறிந்து செலுத்த .....
பொன் சுமந்த கலம்
சினம் மிகு தானை வானவன் குட கடல்
பொலம் தரு நாவாய் ஓட்டிய அவ்வழி
பிற கலம் செல்கலாது அனையேம் அத்தை
                    மாறோக்கத்து நப்பசலையார், புறநா.126 : 14 – 16

சினம் மிக்க படையுடைய சேரன் மேலைக் கடலில் பொன்னைத் தரும் மரக்கலம் (கப்பலை) செலுத்துமிடத்து இடையில் வேறு சிலர் மரக்கலம் செலுத்த முடியுமோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக