பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க
சீத்தலைச் சாத்தனார், மணி.1 : 70, 71
நாட்டில் பசியும் நோயும் பகையும் நீங்கி
மழையும் வளமும் பெருகட்டும்.
-நாடு
காணா உயிர்க்கும் கையற்று ஏங்கி
சீத்தலைச் சாத்தனார், மணி. 3 : 89
கண்ணில் தெரியாத உயிர்களின் துன்பத்திற்கும் வருத்தமுற்று இரங்குக.
-இரங்கல்
பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிழைத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்றது
சீத்தலைச் சாத்தனார், மணி. 16 : 86, 87
பிறத்தலும் இறத்தலும் தூங்குதலும் விழித்தலும்
போன்றது.
-இயற்கை
மண் திணிந்த ஞாலத்து மழை வளம் தரூஉம்
பெண்டிராயின் பிறர் நெஞ்சு புகாஅர்
சீத்தலைச் சாத்தனார், மணி. 22 : 45, 46
இந்நிலவுலகத்திலே மழை வளத்தினைத் தருகின்ற கற்புடைய மகளிராயின் அவர், பிறரது நெஞ்சில்
புகுந்து இச்சை விளைவிக்க மாட்டார்.
-ஒழுக்கம்
பத்தினியில்லோர் பல அறம் செய்யினும்
புத்தேள் உலகம் புகாஅர் ...
சீத்தலைச் சாத்தனார், மணி. 22 : 117,
118
கற்பொழுக்கம் இல்லாதார் பலதிறப்பட்ட அறங்களைச் செய்தாலும் துறக்க உலகம் புகமாட்டார்.
-ஒழுக்கம்
இளமையும் நில்லா யாக்கையும் நில்லா
வளவிய வான் பெரும் செல்வமும் நில்லா
புத்தேள் உலகமும் புதல்வரும் தாரார்
மிக்க அறமே விழுத்துணையாவது
சீத்தலைச் சாத்தனார், மணி. 22 : 135 – 138
இளமையும் யாக்கையும் நிலையில்லாதது ; வள மிக்க பெருஞ்செல்வமும் நிலைத்து நிற்காது;
துறக்க உலகினைப் புதல்வர்களும் கொண்டுவந்து தந்துவிட மாட்டார்கள்
ஆதலின் அறம் ஒன்றே உயிருக்குச் சிறந்ததோர் துணயாகும்.
-அறம்
எவ்வுயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும்
சீத்தலைச் சாத்தனார், மணி. 23 : 78
எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டல் வேண்டும்.
-அன்பு
கற்ற கல்வி அன்றால் காரிகை
செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர்
சீத்தலைச்
சாத்தனார், மணி. 23 :
129, 130
காரிகையே ! கற்ற கல்வி ஒன்றே மெய்யுணர்வு ஆகாது ; உள்ளத்தில் வெகுளி தோன்றாமல்
அடக்கியவர் எவரோ அவரே முற்றவும் அறிவுடையோர் ஆவர்.
-அறிவுடைமை
பொய்யாற்று ஒழுக்கும் பொருள் எனக் கொண்டோர்
கையாற்று அவலம் கடந்ததும் உண்டோ
சீத்தலைச் சாத்தனார், மணி. 23 : 124, 125
பொய்யான நெறிநின்று ஒழுகும் ஒழுக்கமே செயலாகக் கொண்டவர்கள் வாழ்வில் துன்பத்தினின்றும் நீங்கி உய்ந்தனர் என்பதும்
இவ்வுலகில் உண்டோ ?
-ஒழுக்கம்
கள்ளும் பொய்யும் காமமும் கொலையும்
உள்ளக் களவும் என்று உரவோர் துறந்தவை
சீத்தலைச் சாத்தனார், மணி. 24 : 77, 78
கள் உண்ணல், பொய்யுரை, இழிகாமம், கொலை, களவு ஆகிய ஐவகைக் குற்றங்களும் அறிவுடையோரால்
நீக்கப்பட்டவை.
-அறிவுரை
பிறந்தார் மூத்தார் பிணி நோய் உற்றார்
இறந்தார் என்கை இயல்பே
சீத்தலைச் சாத்தனார், மணி. 25 : 103, 104
இவ்வுலகில் பிறந்தார் அனைவரும் மூப்புற்றார், நோயுற்றார்,
இறந்தார் என்று சொல்லப்படுவது இயல்பே.
-இயற்கை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக