திருக்குறள் -சிறப்புரை :833
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில். – ௮௩௩
தவறுகள் செய்வதற்கு வெட்கப்படாமை; நல்லவற்றை நாடிச்செல்லாமை ;யாரிடத்தும்
அன்பு கொள்ளாமை ; மனிதனுக்குரிய கல்வி அறிவு ஒழுக்கம் ஈகை உவகை இன்னபிற எந்த ஒன்றையும்
பேணாமை ஆகியவை பேதையரின் தொழில்களாம்.
“நல்லவை நாடொறும் எய்தார்
அறம் செய்யார்
இல்லாதார்க்கு யாது ஒன்றும்
ஈகலார் –எல்லாம்
இனியார் தோள் சேரார் இசைபட
வாழார்
முனியார்கொல் தாம் வாழும்
நாள்.” – நாலடியார்.
பேதையர் - நாளும் நன்மைகள் அடையார்
; அறம் செய்யார் ; இல்லாதவர்க்கு ஒன்றும் கொடுக்கார் ; இனிய மனைவியின் தோள் நலம் சேரார்
; பிறர் போற்றுமாறு வாழார்; ஆயினும் தாம் வாழுங்காலத்தை வெறுக்கமாட்டார்.