மடகாசுகர் – சல்லிக்கட்டு--3
ஏறுதழுவல்
ஏறுதழுவல்
என்பது காளையை அடக்குவதோ வீழ்த்துவதோ இல்லை…! காட்டாற்று வெள்ளமெனச் சீறிப்பாய்ந்துவரும்
காளையைத் தழுவி அதன் கொம்பில். மஞ்சள் துணியில் முடிந்து வைக்கப்பட்ட சல்லிக்காசுகளை
(பொற்காசுகள்) இளமையும் ஆண்மையும் பொருந்திய வீரன் ஒருவன் காற்றெனக் கடுகிச் சல்லிக்காசு
முடிச்சை பறித்தெடுப்பது மட்டுமே. இஃது ஒரு வீரவிளையாட்டு..!.
சல்லிக்கட்டுத் திரைப்படக் குழுவினர் சல்லிக்கட்டுக்
காளை இனம் குறித்து அரிய ஆய்வு ஒன்றை நிகழ்த்தியுள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்காவின் கென்யா
நாட்டுப் பழங்குடியனர் வளர்த்துவரும் காளையினம் தமிழ் நாட்டின் காங்கேயம் காளை இன வழித்
தோன்றல்களே என்பதை அறிவியல் ஆய்வின்படி (டிஎன் ஏ – சோதனை) உறுதி செய்துள்ளதை அறிந்து
வெளிப்படுத்தியுள்ளனர். மக்கள் இடம் பெயரும்பொழுது தம்முடன் கால்நடைகளையும் கொண்டு
செல்வர்; தொல்பழந்தமிழ் நாட்டிலிருந்து இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் இன்று கென்யா நாட்டில்
பழங்குடியினராக வாழ்ந்து வருகின்றனர்.
சங்க இலக்கியச் சான்று
”கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆயமகள்”
சோழன்
நல்லுருத்திரன். கலித். 103:63 ~ 64
……………………………………………………
கொல்லும்
இயல்புடைய காளையின் கொம்புக்கு அஞ்சுகின்றவனை இப்பிறப்பில் மட்டுமன்று மறு பிறப்பிலும்
தழுவமாட்டாள் ஆயமகள்…
”கொல் ஏறு கொண்டான் இவள் கேள்வன் என்று
ஊரார்
சொல்லும் சொல் கேளா அளைமாறி யாம்வரும்
செல்வம் எம் கேள்வன் தருமோ எம் கேளே”
சோழன் நல்லுருத்திரன். கலித். 106:43 ~ 45
தோழி……!
இவள் கணவன் கொல் ஏறு தழுவி இவளைக் கொண்டான் என்று ஊரார் சொல்லும் சொல்லைக் கேட்டவாறே
யான் மோர் விற்று வருகின்ற இன்பத்தை என் காதலன் எனக்குத் தருவானோ…?
மேற்குறித்துள்ள
சான்றுகள் சல்லிக்கட்டு என்னும் வீர விளையாட்டு தமிழர்க்கே உரியது என்பது தெற்றென விளங்கக்
காணலாம். இன்றும் உலகின் பல இடங்களில் தென் தமிழ்நாட்டைக் கடல்கொண்ட காலத்தில் இடம்பெயர்ந்து, பழங்குடி இனத்தவராக வாழ்ந்துவரும் மக்களிடையே இவ்விளையாட்டு
பல்வேறு வடிவங்களை, மாற்றங்களைப் பெற்றுவழக்கில் இருந்துவருவதை அறியலாம். இவ்வகையில்
மடகாசுகர் பழங்குடியினரிடமும் சல்லிக்கட்டு உயிர்ப்புடன் இருந்து வருகிறது.
…… தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக