கார்த்திகைத்
திருநாள் திருவிழா
உலகுதொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி
மழைகால் நீங்கிய மாக விசும்பில்
குறுமுயல் மறுநிறம்கிளர மதிநிறைந்து
அறுமீன் சேரும் அகல் இருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர வருகதில் அம்ம
நக்கீரர், அகநா.141: 5-11
கலப்பைகள்
மடிந்து கிடந்தன, உழுதலைச் செய்யவில்லை; மழை ஓய்ந்தது; வானில் சிறு முயலாகிய
மறுவின் நிறம் விளங்க; மதி நிறைந்த கார்த்திகை நன்னாளில் இருள் அகன்ற நள்ளிரவில்,
வீதிகளில் திருவிளக்குகள் ஏற்றப்பட்டன; மாலைகள் தொங்கவிடப்பட்டன; முதுமையான
ஊரின்கண் ஊர் மக்கள் ஒன்றுகூட; கார்த்திகைத் திருவிழாவை நம்மோடு களித்துக் கொண்டாட
நம் தலைவர் விரைந்து வருவாராக.
கார்த்திகைத் திங்கள் கார்த்திகை
நாளில் தெருக்களில் விளக்குகளை நிரல்பட ஏற்றிக் கார்த்திகை விழாவைக் கொண்டாடும் வழக்கம்
தொன்றுதொட்டு இருந்து வருவதை இலக்கியங்கள் வழி அறியலாம். அகநா. 11 :
உரை.
அண்மைக்காலம்
வரை கார்த்திகை விழா ஊர்ப்புறங்களில் கொண்டாடப்பட்டது. பனம்பூ சேகரித்து உமிக் கரியோடு
கலந்து நன்றாகக் காயவைத்து கையளவு துணிப்பை தைத்து அதனுள் அந்தக் கலவையைத் திணித்து
ஒரு ஓரத்தில் நெருப்பிட்டு ஒரு கயிற்றில் அந்தத் துணிப்பையைக் கட்டித் தலைக்குமேல்
தூக்கிச் சுழற்ற கம்பி மத்தாப்பில் நெருப்புப் பூ உதிர்வதைப் போலப் பூ உதிரும்..
கோயில்களில் சொக்கப்பானை கொளுத்தப்படும். வீடுகளில்
கார் நெல் வறுத்து உரலில் போட்டு இடித்து அவல் எடுத்து அதனைப் பொரித்து முற்றிய தேங்காய்ப்பல்லுடன்
வெல்லப்பாகு இட்டுக் கிளறித் தின்று மகிழ்வோம்…. இன்று எல்லாம் கனவாகிப்போனது… தூய்மையான
கார்த்திகைத் திருவிழா …
இன்று தூய்மைக் கேடான தீபாவளி..
மக்களிடையே எத்தனை ஏற்றத் தாழ்வுகள்; எத்தனை மூடநம்பிக்கைகள்; எத்தனை வணிகக் கொள்ளைகள்
---இயற்கையோடியைந்து கொண்டாடிய கார்த்திகைத் திருவிழா ; இன்று இயற்கைக்குக் கேடு விளைவிக்கும்
திருவிழாவாகிவிட்டதே; இது கலப்பினக் காலக் கேடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக