புதன், 5 ஜூன், 2019

திருக்குறள் -சிறப்புரை :1301


திருக்குறள் -சிறப்புரை :1301
131.புலவி

புல்லா திராஅப் புலத்தை அவருறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது. ----0

தலைவர் அடையும் காமவேட்கையின் துன்பத்தை அவர் உணருமாறு சிறிது காண்போம், அதனால் விரைந்து அவரைத் தழுவாது பிணங்கி நின்று காண்போம்.

கடல்பாடு அழிந்து கானல் மயங்கித்
துறைநீர் இருங்கழி புல்லென்றன்றே
மன்றலம் பெண்ணை மடல்சேர் வாழ்க்கை
அன்றிலும் பையென நரலும் இன்று அவர்
வருவார்கொல் வாழி தோழி நாம் நகப்
புலப்பினும் பிரிவுஆங்கு அஞ்சித்
தணப்பறுங் காமம் தண்டியோரே.” ---குறுந்தொகை.

 தோழி வாழி. ..…! கடலின் ஓசை அடங்கிற்று ; கடற்கரைச்சோலை இருளினால் இருப்பு அறியப்படாது மயக்கத்தைத் தருவதாயிற்று ;  துறையையும் நீரையும்  உடைய பெரிய உப்பங்கழிகள் பொலிவற்றுக் காணப்பட்டன; ஊர் மன்றத்தின்கண் உள்ள பனை மடங்களில் மடலின்கண் பொருந்தி வாழ்கின்ற அன்றில் பறவைகளும் மெல்லெனக் கூவின ; இங்ஙனம் இடமும் ஆளற்றுக் காலமும் இருண்டு காணப்படுவதால், முன்பு நாம் அவரை நகையாடிப் புலந்த போதிலும், அப்பொழுது பிரிதலை அஞ்சி, நீங்குவதற்கு அரிய காம இன்பத்தை விடாது பணிந்து, கெஞ்சி பெற்றவர், இப்பொழுது வருவர் போல் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக