வியாழன், 6 ஜூன், 2019

திருக்குறள் -சிறப்புரை :1303


திருக்குறள் -சிறப்புரை :1303

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லாவிடல். ------ 0

தம்முடன் புலந்து நிற்பாரை, ஊடல் தணித்துத் தழுவாது விலகுவாராயின், கூடல் கைகூடாது வருந்தி நிற்பார்க்கு மேலும் துன்பம் தரும் நோயைச் செய்வது போன்றதாம்.

உதுக்காண் அதுவே இதுவென மொழிகோ
நோன்சினை இருந்த இருந்தோட்டுப் புள்ளினம்
தாம் புணர்ந்தமையின் பிரிந்தோர் உள்ளத்
தீம்குரல் அகவக் கேட்டும் நீங்கிய
ஏதிலாளர் இவண் வரின் போதின்
பொம்மல் ஓதியும் புனையல்
எம்மும் தொடாஅல் என்குவம் மன்னே.” ----குறுந்தொகை.

  தோழி….! இதனை என்னவென்று கூறுவேன்..! தம்மைத் தாங்கக்கூடிய மரக்கிளைகளில் அமர்ந்திருந்த பெரிய தொகுதியை உடைய பறவைக் கூட்டங்கள், தாம் தம் துணையொடு புணர்ந்து வாழ்வதால், பிரிந்தோர் தம் துணையை நினையும் வண்ணம், இனிய குரலால் தம்முள் அழைக்கும். அதனை, நம்மைப் பிரிந்து சென்ற தலைவர் கேட்டு, இங்கே வரின், அவரைப் பெருமை உடைய எம் கூந்தலை மலர்களால் புனைய வாராதே  என்றும் எம்மையும் தொடாதே  என்றும் கூறுவேன். அங்ஙனம், யான் செய்வதனை நீ உவ்விடத்துக் காண்பாயாக.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக