வெள்ளி, 14 ஜூன், 2019

திருக்குறள் -சிறப்புரை :1320


திருக்குறள் -சிறப்புரை :1320

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று. ---- ௩உ0

எனது இயல்பான செயல்களைக்கண்டே  சினம் கொள்கிறாளே என்று அமைதியாக இருந்து அவளையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன், அவளோ என்னுடைய உடல் அழகையெல்லாம் எவளை நினைத்து உற்றுப்பார்க்கின்றீர் என்று புலந்துகொள்கிறாளே..!

இலங்குவளை செறியா இகுத்த நோக்கமொடு
நிலங்கிளை நினைவினை நின்ற நிற்கண்டு
இன்னகை இனையமாகவும் எம்வயின்
ஊடல் யாங்கு வந்தன்று என யாழநின்
கோடேந்து புருவமொடு குவவு நுதல் நீவி
நறுங்கதுப்பு உளரிய நன்னர் அமையத்து
வறுங்கை காட்டிய வாயல் கனவின்
ஏற்று ஏக்கற்ற உலமரல்
போற்றா யாகலின் புலத்தியால் எம்மே.”----அகநானூறு.

 விளங்குகின்ற வளை கழன்று விழுவதனை மேலே ஏற்றுச்செரித்து, தாழ்ந்த நோக்கத்தோடு, நிலத்தைக் காலால் கீறும் வருத்தம் உடையாய்..! நின்னைக் (கனவில்) கண்டு, இனிய நகையினை உடையாய், யாம் இங்ஙனம் வருந்தி இருக்கவும் எம்மிடத்து நீ ஊடல் செய்தல் எங்ஙனம் எனச் சொல்லி, நினது பக்கம் உயர்ந்த புருவத்துடன் திரண்டு சிறுகிய நெற்றியினைத் துடைத்து, மணம் பொருந்திய கூந்தலைக் கோதிய நல்ல பொழுதிலே, வெறுங்கையாக்கிய அப்பொய்க் கனவிடத்தே,  துயிலை ஏற்று நின்னைக் காணாது எங்கிய வருத்தத்தினை, நீ அறிவில் கொள்ளாய் ஆகலின் எம்மைப் புலக்கின்றாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக