புதன், 5 ஜூன், 2019

திருக்குறள் -சிறப்புரை :1302


திருக்குறள் -சிறப்புரை :1302

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல். ---- 0

 காதல் வாழ்வில் இனிமை சேர்ப்பது ஊடல் (புலவி) ; அஃது உணவுக்குச் சுவை அளிக்கும் உப்பைப் போன்றது;  உப்பு மிகுந்தால் சுவை கெடுமாறு போல  ஊடலும் அளவு கடந்து நீடித்தால் காதல் வாழ்வும் கசந்து போகும்.

கண்ணும் தோளும் தண்நறுங் கதுப்பும்
பழநலம் இழந்து பசலை பாய
இன்னுயிர் பெரும்பிறிது ஆயினும்
புலவேன் வாழி தோழி ……..
………………………………
கானலம் பெருந்துறைச் சேர்ப்பன்
தானே யானே புணர்ந்த மாறே.” ---- நற்றிணை.

தோழி வாழி..! என்னுடைய கண்களும் தோள்களும் மெல்லிய நறுங் கூந்தலும் பழைய அழகு இழந்து, பசலை பாய, இனிய என் உயிர் இறந்துபடுவதாயினும்……….. கடற்கரைச்சோலையும் பெரிய கடலின் துறையையும் உடைய நம் காதலன், தமியனாய் வந்து, யான் மகிழுமாறு முன்பு புணர்ந்து அன்பு செய்தமையால், இனியும் அங்ஙனம் வருவான் என்னும் கருத்தோடு, சிறிதும் அவன்மீது புலத்தல் செய்யேன் காண்பாயாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக