திருக்குறள்
-சிறப்புரை
:1315
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள். ---- க ௩க ௪
அன்புடையவளே..! இப்பிறப்பில் நின்னைப் பியமாட்டோம் என்று சொன்ன அளவிலே,
மறுபிறப்பில் எம்மைப் பிரிந்துவிடுவீரோ? என நினைந்து
கண்ணிறைய நீர்வடியக் கலங்கி நின்றனளே..!
“தோளும் அழியும் நாளும் சென்றென
நீளிடை அத்தம் நோக்கி வாளற்றுக்
கண்ணும் காட்சி தெளவின என் நீத்து
அறிவு மயங்கிப் பிறிதாகின்றே
நோயும் பேரும் மாலையும் வந்தன்று
யாங்காகுவென் கொல் யானே ஈங்கோ
சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின்
பிறப்புப் பிறிதாகுவது ஆயின்
மரக்குவேன் கொல் என் காதலன் எனவே.” ---நற்றிணை.
காதலர் வருவதாகக் கூறிச் சென்ற பருவமும் வந்தொழிந்தது, என் தோள் வாட்டமுறவும், அவர் சென்ற வழியை நோக்கிக் கண்களும் ஒளியற்றுப் பொலிவிழந்தன; எனது அறிவும் மயங்கி வேறாகி நின்றது ; நோயை வைத்து உயிர் நீங்காதாகலின்
அந்நோயும் காடேறிச் சென்று ஒழிய ; உயிரைப் போக்கும் மாலைப்பொழுதும்
வந்துவிட்டது; இனி நான் எந்நிலை அடைவேனோ? அறிந்திலன் ;இவ்வுலகத்தில் பிறந்தோர் இறப்பது உண்மையான்,
அந்த இறப்பு வந்ததே என்று யான் அஞ்சவில்லை ; இறந்துவிட்டால்
இனிவரும் எனது பிறப்பு மக்கட்பிறப்பன்றி வேறொரு பிறப்பாகிவிட்டால் என் காதலனை அப்பொழுது
மறந்துவிடுவேனோ என்ற ஒன்றினுக்கே யான் அஞ்சுகின்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக