திருக்குறள்
-சிறப்புரை
:1326
உணலினும் உண்டது அறலினிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.------- க ௩உ ௬
பசித்தபின் புசி – உண்ட உணவு செரித்து, மேலும் உண்ணும் அவா தோன்றியபின் உண்ணுதல் உயிர்க்கு இன்பம் அளிப்பதாகும்
; அதுபோலக் காமம் மேலும் மேலும் வறிதே கூடிமுயங்குவதைவிட ,ஊடியபின் கூடுதல் இன்பமளிக்கும் . ஊடல். காமவேட்கையை மிகுவிக்கும் என்றாராக.
“வேம்பின் பைங்காய் என் தோழி தரினே
தேம்பூங்கட்டி என்றனிர் இனியே
பாரி பறம்பில் பனிச் சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்
ஐய அற்றால் அன்பின் பாலே.” –குறுந்தொகை.
வேம்பினது பசிய காயை, என்னுடைய தோழியாகிய தலைவி, கையால் தரின் அதனை இனிய பூமணமுள்ள, கருப்புக்கட்டி என்று
இளமைப்பருவத்தில் கூறினீர் ; என் தோழி பெருமுது பெண்டாகிய இப்பொழுது,
பாரி வள்ளலின் பறம்பு மலையிடத்துள்ள, தைத் திங்களில்
குளிர்ந்த சுனையில் உள்ள தெளிந்த நீரைத் தந்தாலும் வெம்மையாய் உவர்த்தலைச் செய்கிறது
என்று கூறுகின்றீர். இது வியப்பைத் தருவதாக உள்ளது ; அன்பின் திறம் அத்தகையது போலும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக