திங்கள், 10 ஜூன், 2019

திருக்குறள் -சிறப்புரை :1311


                                       திருக்குறள் -சிறப்புரை :1311

132. புலவி நுணுக்கம்

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொது உண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு. --- ௩கக

பரத்தையரைத் தழுவுதல் உடையாய்..! பெண் இயல்புடையார் எல்லாரும், தம் கண்களால் பார்த்த அளவிலே , பொதுவாக  நின்னை நுகர்வதால் அவர்கள் துய்த்த நின் மார்பினை யான் தீண்டமாட்டேன்.

பொய்கைப் பள்ளிப் புலவு நாறு நீர்நாய்
வாளை நாள் இரை பெறூஉம் ஊர
எம் நலம் தொலைவதாயினும்
துன்னலம் பெரும பிறர்த் தோய்ந்த மார்பே.” –ஐங்குறுநூறு.

இயற்கையாய் அமைந்த நீர்நிலையை வாழிடமாய்க்கொண்ட, புலால் நாற்றம் வீசும் நீர் நாய், வாளை மீனை நாட்காலத்தே இரையாகக் கொள்ளும் ஊரனே..! எம்முடைய அழகு முற்றும் அழிந்து ஒழியுமாயினும். பெருமானே, பிற பெண்டிரைத் தழுவி மகிழ்ந்த நின் மார்பை, யான் தீண்டமாட்டேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக