சனி, 8 ஜூன், 2019


சில சொல்லல்.......” – கேளீர்.
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.—குறள்.649.
அவையில், குற்றமற்ற சில சொற்களில் சொல்ல வேண்டிய செய்தியைச் சுருக்கமாகப் பேசத் தெரியாதவர்களே அவையோர்நெகிழநெடுநேரம் பல பல சொல்ல ஆசைப் படுவார்கள்.
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லில்ன்கண் சோர்வு. –குறள்.642.
நன்மையும் தீமையும் சொல்லும் சொல்லைப் பொறுத்தே வருதலால், சொற்குற்றம் தோன்றாதபடி நாக்கை அடக்கிக் காத்துக்கொள்ள வேண்டும்.
வள்ளுயிர்த் தண்ணுமை போல
உள்யாதும் இல்லாது ஓர்போர்வையம் சொல்லே.” –நற்றிணை.
அடித்து முழக்கும்போது பேரொலி எழுப்பும் தண்ணுமை (மத்தளம்) என்னும் இசைக் கருவியைப்போல, உள்ளீடு ஒன்றுமில்லாத கூடு போல் பயனற்ற சொற்கள்.  மத்தள ஒலி போல் விடிய விடிய வெற்றுரை,  பயனற்ற வீண் பேச்சு இன்றும் காணமுடிகிறதே..!
சில சொற்களையே பேசும் இயல்புடைய கண்ணகியை இளங்கோவடிகள்சின் மொழி அரிவை  என்பார்.
கல்லாத கலைகள் எல்லாம் அனுமன் சொல்லாலே தோன்றிய அழகை வியந்து போற்றும் கம்பன், அனுமனைச்சொல்லின் செல்வன்என்று போற்றி உரைப்பார்.
ஆய்ந்து அமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
 காய்ந்து அமைந்த சொல்லார் கறுத்து.” –நாலடியார்.
பல நூல்களையும் ஆராய்ந்து, அந்நூல்கள் கூறும் வழியில் நின்று, உயர்ந்தோர்களிடம் பல உண்மைகளைக் கேட்டறிந்து வாழ்கின்ற அறிவுடையார், எந்நாளும் சினந்து, கடுஞ் சொற்களைக் கூறமாட்டார்கள்.
விரைந்துரையார் மேன்மேல் உரையார்பொய் யாய
பரந்துரையார் பாரித் துரையார்ஒருங்கெனைத்தும்
சில்லெழுத்தி னாலே பொருளடங்கக் கலத்தாற்
சொல்லுப செவ்வி யறிந்து.” –ஆசாரக் கோவை.
கடுகி உரையார், மேன்மேலும் உரையார், பொய்யாய சொற்களைப் பரக்க உரையார், தாம் உரைக்கத்தக்க சொற்களைப் பரப்பி உரையார், கூற வேண்டிய எனைத்தினையும் ஒருமிக்க சில எழுத்தினாலே பொருள் விளங்கும் வகையால் காலத்தோடு பொருந்திக் கேட்போர் இயல்பறிந்து சொல்வர்.
”சொற்சோர் வுடைமையின் எச்சோர்வு மறிப.” –முதுமொழிக்காஞ்சி.
சொல்லில் சோர்வுபட ச் சொல்லுதலான் அவனுடைய எல்லாச் சோர்வையும் அறிவர்.
வெற்றுச்சொல் வீசுவார், ’வய்ச்சொல் வீரராவார்’.மண்மணம் மாறா நம் மக்களும் ‘குரைக்கிற நாய் கடிக்காது’ என்பர்.
பேராசிரியர் வ.அய். சுப்பிரமணியம் அவர்கள் மூன்று அல்லது ஐந்து நிமிடங்களே உரையாற்றுவார்.சில சொற்களால் பல பொருள்களை அள்ளித் தரும் ஆற்றல் வாய்ந்தவர். நாமும் சான்றோர் வழி நடப்போமே..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக