செவ்வாய், 10 ஜூலை, 2018

திருக்குறள் -சிறப்புரை :932


திருக்குறள் -சிறப்புரை :932
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.----- ௯௩௨
சூதட்டத்தில் முன்பு ஒருமுறை வென்று, சிறிது பொருள் பெற்ற ஆசையால் மீண்டும் மீண்டும் சூதாடிப் பெரும் பொருளை இழப்பர். அத்தகைய சூதாடிகள் நல்ல முறையில் வாழ வழியும் உண்டோ..? இல்லை என்பதாம்.
“ அடியும் ஆண்மையும் வலிமையும் சேனையும்
       அழகும் வெற்றியும் தத்தம்
குடியும் மானமும் செல்வமும் பெருமையும்
       குலமும் இன்பமும் தேசும்
படியு மாமறை ஒழுக்கமும் புகழுமுன்
       பயின்றகல் வியுஞ் சேர
மடியு மான்மதி யுணர்ந்தவர் சூதின்மேல்
       வைப்பாரோ மனம் வையார்.” –வில்லிபாரதம்.
அறிவுடையோர் சூதாடுவதை விரும்புவாரோ..? தலைமையும் ஆண்மையும் படைகளும் அழகும் வெற்றியும் குடிப்பெருமையும் மானமும் செல்வமும் பெருமையும் குலமும் இன்பமும் புகழும் நான்மறை ஒழுக்கமும் கல்வியும் ஆகிய பலவும் சூதினால் அழியும்.


1 கருத்து: