திருக்குறள் -சிறப்புரை
:949
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.--- ௯௪௯
மருத்துவ நூல்களை (சித்தர் மருத்துவம், ஓமியோபதி, அலோபதி முதலான எதுவாயினும்)
நுணுகிக் கற்ற மருத்துவன் நோயுற்றவன் நிலைமையையும் நோயின் தன்மையையும் காலத்தையும்
(அஃதாவது பருவமாற்றங்களால் ஏற்படும் மாற்றங்களை, விளைவுகளை) ஆராய்ந்து மருத்துவம் செய்தல்
வேண்டும்.
“ தீங்கனி யிரவமொடு வேம்புமனைச்
செரீஇ
வாங்குபருப் பியாழொடு பல்லியங் கறங்கக்
கைபயப் பெயர்த்து மையிழு திழுகி
ஐயவி சிதறி யாம்ப லூதி
இசைமணி யெறிந்து காஞ்சி
பாடி
நெடுநகர் வரைப்பிற் கடிநறை
புகைஇ…” –புறநானூறு.
போரில் பெரும் புண்பட்டு வீழ்ந்த மறவர்க்கு மருத்துவம் செய்வோர், மனையைத்
தூய்மை செய்து இனிய கனிகளைத் தரும் இரவமரத்தின் தழையுடனே வேப்பிலையையும் மனையிறைப்பில்
செருகி, யாழுடன் பல இசைக் கருவிகள் ஒலிக்க, இனிய இசை பாடுதலும் நறிய மணப்பொருள்களைப் புகைத்து
எங்கும் நறுமணம் கமழுமாறு செய்வதும் பண்டைய தமிழ் மக்கள் மரபு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக