செவ்வாய், 31 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -38

மெய்ப்பொருள் காண்பது அறிவு -38
ஆரியப் புரோகிதம் -2
”தமிழ்நாட்டில் நிலவிவந்த திருமணமுறையைப் புரோகிதர்கள் அப்படியே வைத்துக்கொண்டு, மூன்று புதிய நிகழ்ச்சிகளைச் சேர்த்துச் செய்யலாயினர்.
 வடமொழி மந்திரங்களைப் பிராமணர் அல்லாதார்க்குச் சொல்வது தவறு ; அவர்கள் அதைக் கேட்பதும் கெடுதி என்னும் தடையைக் கடக்கும் நோக்கத்துடன், மணமகனுக்குப் பூணூல் அணிவது மட்டும் போதாது…..
வேதம் ஓத வேண்டும் என்னும் தடையை வெல்லும் வகையில், மணமகன் காசிக்குச் சென்று வேதம் ஓதித் திரும்புவதாக,’காசி யாத்திரை’ என்ற ஒரு நிகழ்ச்சியைச் சேர்த்துக்கொண்டனர்.
மூன்றாவதாக, மணமகளைத் தாரைவார்த்துத் தத்தம் செய்வதாக ஒரு நிகழ்ச்சியும் நுழைந்தது.

திருக்குறள் -சிறப்புரை :952


திருக்குறள் -சிறப்புரை :952
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார். --- ௯௫௨
நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் நல்லொழுக்கம், சொன்னசொல் தவறாத வாய்மை, பழிக்கு அஞ்சும் இயல்பாகிய நாணம் ஆகிய இம்மூன்றிலும் எந்நிலையிலும் தவறி நடக்க மாட்டார்கள்.
”அறனும் பொருளும் வழாமை நாடி
தற்தகவு உடைமை நோக்கி மற்றதன்
பின்னாகும்மே முன்னியது முடித்தல்
 அனைய பெரியோர் ஒழுக்கம்…” –அகநானூறு.
அறமும் பொருளும் வழுவாத வகையை ஆராய்ந்து, தனது தகுதியை உணர்ந்து, அதன் பின்னரே தான் கருதியதை முடித்தல் அறிவுடையோர் செயலாகும்.

திங்கள், 30 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -37

மெய்ப்பொருள் காண்பது அறிவு -37
ஆரியப் புரோகிதம் -1
“வடமொழி மறையே தமிழ் மறைகட்கு ஒப்பாகாத பொழுது, வடமொழியில் உள்ள சாமான்ய நூல்களின் உரைகள் கொண்டும், வடமொழிநூல் வழக்காறுமின்றி வடமொழியில் வழங்கும் வெற்றுரைகள் கொண்டும் ஆரியப் புரோகிதரால் செய்யப்பெறும் திருமணங்களில் நிலைமையை என்னென்று எடுத்தியம்புவது…! “ இந்த உண்மைகளை உண்ராத தமிழ் மக்களுக்கு-  அதினும் தமிழ்ப் பெண் மக்களுக்கு – தமிழ்த் தெய்வத்தின் திருவருள் அவர்கள் அனைவர் மனத்திலும் விரைவில் தமிழ் மெய்யுணர்ச்சி ததும்பி எழுமாறு செய்வதாக எனத் தமிழ்த் தெய்வத்தின் திருவடித் தாமரைகளை முப்போதும் முடிக்கணிந்து வழுத்தி வருவோமாக.”,, பண்டைத் தண்டமிழ் மக்களது ஒழுகலாற்றினைப் பழந்தமிழ் நூற்களின் வழி ஆராய்ந்துகாணினும் திருவருட் சிறப்பே முதலெனக் கொண்டு அவ்வழி நின்று ஆராய்ந்து காணினும் ‘ செந்தமிழ் மாமறை கொண்டு திருமணஞ் செய்தலே’ உலகின் அறத்தாற்றின் இல்வாழ்க்கைஆற்றப்புகும் மக்கட்கு இயல்பினால் இல்வாழ்க்கை வாழும் நெறி இஃதெனக் காட்டி, அனபும் அறனும் உடைய பெருவாழ்விலே திளைக்கச் செய்யும் பெருஞ் சிறப்பு உடையதாம் என்பது காணப்படுகின்றது,”
 “ தாயை நீக்கி ஒருவன் மணஞ்செய்து கொள்வானாயின் அவனை எங்ஙனம் உலகம் பழிக்குமோ அங்ஙனமே தாய்மொழியை நீக்கி, மணஞ் செய்து கொள்வோர்களைத் தமிழ்த் தெய்வமும் – தமிழ்ச் சான்றோர்களும் பழிப்பர் என்று தமிழர்கள் அறிதல் வேண்டும்.” – பேராசிரியர் கண்ணப்ப முதலியார். 

திருக்குறள் -சிறப்புரை :951


96. குடிமை
திருக்குறள் -சிறப்புரை :951
இற்பிறந்தார் கண்ணல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.--- ௯௫௧
ஏழையோ செல்வந்தனோ யாவரேயாயினும் நற்குடியில் பிறந்தவர்க்கு அல்லாமல் மற்றையோர்க்கு நேர்வழி நடத்தலும் பழிக்கு நாணுதலும் ஆகிய குணங்கள் ஒருங்கே அமைவதில்லை.

” உடுக்கை உலறி உடம்பு அழிந்தக் கண்ணும்
குடிப்பிறப்பாளர் தம் கொள்கையிற் குன்றார்.
இடுக்கண் தலை வந்தக் கண்ணும் அரிமா
கொடிப்புல்  கறிக்குமோ மற்று.”---நாலடியார்.
சிங்கம், கடும் பசியால் வருந்தினாலும் கொடிப்புல்லைத் தின்னாது அதுபோல,  உடுக்கும் உடை  நைந்து கிழிந்திருந்தாலும் உடல் மெலிந்து அழிய நேர்ந்தாலும் நற்குடியில் பிறந்தவர்கள் தமக்குரிய ஒழுக்கங்களில் குறைய மாட்டார்கள் ;

ஞாயிறு, 29 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -36

மெய்ப்பொருள் காண்பது அறிவு -36
“ மக்களும் மக்கள் அல்லாரும் என இரண்டு
 குப்பைத்தே குண்டு நீர் வையகம் – மக்கள்
 அளக்கும் கருவி மற்று ஒண்பொருள் ஒன்றோ
 துளக்கறு வெள்வளையார் தோள்.” –அறநெறிச்சாரம்..
இவ்வுலகத்தில் மக்களாகிய குப்பைகள் நிறைந்திருக்கின்றன. இவற்றுள் மாணிக்கமணிகள் போல் அருமையாயுள்ள மகான்களைத் தெரிந்து எடுத்தற்கு இரண்டு அறிகருவிகள் உள்ளன; ஒன்று பொன், மற்றொன்று பெண். பொன், பெண் ஆசைகளில் இழியாமல் எவன் புனிதமாக இருக்கிறானோ அவனே அரிய பெரிய மகான்.”
“ Gold is tested by  fire ; Man by Gold.”—

திருக்குறள் -சிறப்புரை :950


திருக்குறள் -சிறப்புரை :950
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால்நாற் கூற்றே மருந்து.--- ௯௫0
(மருந்து உழை)
நோய் உற்றவன், மருத்துவன், தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்து, மருந்தின் அளவறிந்து இயற்றுவான்  ஆகிய நான்கும் நன்கு அமைந்ததே மருந்து ஆகும்.
“ஆர்கலி வானம் தலைஇ நடுநாள்
கனைபெயல் பொழிந்தெனக் கானக் கல்யாற்று
முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும்
விருந்தின் தீம்நீர் மருந்தும் ஆகும்
தண்ணென உண்டு கண்ணின் நோக்கி
முனியாது ஆடப்பெறின் இவள்
பனியும் தீர்குவள் செல்க..” ---நற்றிணை.
வானுயர்ந்த பெரிய மலைப்பக்கத்தே, மிக்க இடியுடன் மேகம் மழை பெய்யத் தொடங்கிற்று, நள்ளிரவில் செறிந்து பெய்யும் மழையினால் கற்கள் நிரம்பிய காட்டுவழியே பெருகி ஓடும் ஆற்றிலே மரங்களிலிருந்து உதிரும் சருகுகளும் பூக்களும் அடித்து வரப்பெறுகின்றன. அவ்வாறு பெருகிவரும் புத்தம் புதிய நீரானது இவளுடைய நோயைத் தீர்ப்பதாகும். அதனைக் குளிர்ச்சி பெறப் பருகி ஆண்டு இயற்கைக் காட்சிகளைக் கண்டு வெறுப்பின்றி நீராடினால் மேனி நடுக்கம் தீரும் ஆதலால் அங்குச் செல்வீராக.


சனி, 28 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -35

மெய்ப்பொருள் காண்பது அறிவு -35
” எவ்வுயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும்.” –மணிமேகலை.
எல்லா உயிர்களிடத்தும் அன்புகாட்டல் வேண்டும்.
“ எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்  தம் உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவருளந்தான்
சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடமென நான் தேர்ந்தேன்…” –அருட்பிரகாச வள்ளலார்.
“எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி இரங்கவும் நின்
 தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே.” –தாயுமானவர்.
“ சீவகாருண்ய ஒழுக்கத்தினால் மக்கள் உள்ளத்துள் தோன்றும் இரக்கத்தின் விளக்கமே கடவுள் விளக்கம். அவ்வொழுக்கத்தினால் வரும் இன்பமே கடவுள் இன்பம். இவ்விளக்கத்தையும் இன்பத்தையும் பலகால் கண்டு, நுகர்ந்து நிறைவு பெற்றவர்களே சீவன் முத்தர்கள் ஆவர்; அவர்களே கடவுளை அறிவால் அறிந்து கடவுள் மயமானவர்கள். உயிர்களுக்கு உயிர்களின் தொடர்பாக உண்டாகின்ற ஆன்ம உருக்கத்தைக்கொண்டு தெய்வ வழிபாடு செய்து வாழ்தலே சீவகாருண்ய ஒழுக்கம் எனப்படும்.
 “ அனபே சிவம் “ என்பார், திருமூலர்.

திருக்குறள் -சிறப்புரை :949


திருக்குறள் -சிறப்புரை :949
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.--- ௯௪௯
மருத்துவ நூல்களை (சித்தர் மருத்துவம், ஓமியோபதி, அலோபதி முதலான எதுவாயினும்) நுணுகிக் கற்ற மருத்துவன் நோயுற்றவன் நிலைமையையும் நோயின் தன்மையையும் காலத்தையும் (அஃதாவது பருவமாற்றங்களால் ஏற்படும் மாற்றங்களை, விளைவுகளை) ஆராய்ந்து மருத்துவம் செய்தல் வேண்டும்.
“ தீங்கனி யிரவமொடு வேம்புமனைச் செரீஇ
 வாங்குபருப் பியாழொடு பல்லியங் கறங்கக்
 கைபயப் பெயர்த்து மையிழு திழுகி
ஐயவி சிதறி யாம்ப லூதி
இசைமணி யெறிந்து காஞ்சி பாடி
நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇ…” –புறநானூறு.
போரில் பெரும் புண்பட்டு வீழ்ந்த மறவர்க்கு மருத்துவம் செய்வோர், மனையைத் தூய்மை செய்து இனிய கனிகளைத் தரும் இரவமரத்தின் தழையுடனே வேப்பிலையையும் மனையிறைப்பில் செருகி, யாழுடன் பல இசைக் கருவிகள் ஒலிக்க,  இனிய இசை பாடுதலும் நறிய மணப்பொருள்களைப் புகைத்து எங்கும் நறுமணம் கமழுமாறு செய்வதும் பண்டைய தமிழ் மக்கள் மரபு.

வெள்ளி, 27 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -34

மெய்ப்பொருள் காண்பது அறிவு -34
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. –திருக்குறள்.
 “ காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கண்
ஆய்தல் அறிவுடையார் கண்ணதே – காய்வதன்கண்
உற்ற குணம் தோன்றாதாகும் உவப்பதன்கண்
குற்றமும் தோன்றாக் கெடும். –அறநெறிச் சாரம்.
 எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து அறிதல் அறிவின் பயனாம்.
 ஒரு பொருளின் உண்மைத்தன்மைய ஆராய முற்படுவோர் காய்தல், உவத்தல் இன்றி ஆராய்தல் வேண்டும். வெறுப்புற்று ஆராயின் அதன்கண் உள்ள ‘ உண்மைத்தன்மை’, தோன்றாது ஒழியும் ; விருப்புற்று ஆராயப்புகின் அதன்கண் உள்ள குற்றம் தோன்றாது ஒழியும்.    ஒரு பொருட்கண் விருப்பு, வெறுப்பற்று ஆராய்தல் ஆன்ற அறிவுடையார்க்கே இயலும் என்பதாம்.
“ கடவுளைப்போல் எங்கும் காணப்படாத ஒன்று எங்கும் நிறைந்திருப்பதைப்போன்று, படைப்பில் எங்கும் தான் தோன்றாது, தான் படைக்கும் பாத்திரத்தைச் தோன்றச் செய்து, படைப்பு முழுவதும் காணப்படாது நீக்கமற நிறைந்திருக்கும்  படைப்பாளன் ஆற்றலால் படைப்பு முழுமை அடைகிறது.” – சான்று : கம்பன் காவியம். 

திருக்குறள் -சிறப்புரை :948


திருக்குறள் -சிறப்புரை :948
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.--- ௯௪௮
உணவுமுறையான் உடலைப் பேணாது ஒழியின் நோயில் நலிதல் உண்டாம்.  நோய் நீக்கும் மருத்துவர்,நோயின் தன்மை அறிந்து, நோயின் வேர் இதுவெனக் கண்டறிந்து,  அந்நோயைத் தணிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து உடலுக்குப் பொருந்துமாறு மருந்தைத் தேர்ந்து  செயல்பட வேண்டும்.
”அரும்பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅது
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல..” ---நற்றிணை.
கொடிய நோய் உற்றவர்க்கு அவர் விரும்பியதைக் கொடுக்காது, தகுந்த மருந்தை ஆராய்ந்து கொடுக்கும் மருத்துவன்போல.
“குடலேத்தம் தெரியாம கோடி வைத்தியம் பண்ணினானாம்” என்றொரு பழமொழியும் வழக்கில் உண்டு.


வியாழன், 26 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -33

மெய்ப்பொருள் காண்பது அறிவு -33
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
 எய்துவர் எய்தாப் பழி. –திருக்குறள்.
“ குழந்தைகள் தம் உடைமைகளாகிய  துணி, பை, புத்தகம் முதலிய உபகரணங்களை ஒழுங்காகக் காக்கப் பழகினால் வருங்காலத்தில் பொதுச் சொத்தை உடைத்து அழித்து நாசம் செய்யும் அசுரப் புத்தி வளராது.
தாயின் பக்தி, சேயின் சத்திய வாழ்வு. சலனமில்லாத, சந்தேகமில்லாத நட்பே கற்பின் நெறியாம்.
 அன்பும் அடக்கமும் கட்டுப்பாடும் இல்லாத மனைவியைவிட விரோதி உலகில் இல்லை. ஒத்துழையாத மனைவி இல்லத்தின் வைரி.
மனைவியைக் கணவனே சந்தேகித்தால் அவளைக் கொல்ல இதைவிடக் கொடிய ஆயுதம் வேறொன்றும் தேவையில்லை.” –பூண்டி ஐயா.
”அருளம்மை சத்தி தந்தருளிய ஒரு மனையாகிய ஓருடம்பிலேயே பிறப்பற முயலுதல் வேண்டும். வேறு பிறப்பெடுக்கும் நோக்கங் கொண்டார் பிறன்மனை நோக்கும் பேதையராவர்.”
அவர் பிறன்மனை நோக்காத பேராண்மையர் ஆகாமை பெரிதும் வருந்தத் தக்கதொன்றாகும். –திருமந்திரம்.
ஒழுக்கம் பிழையாதவர் அடையும் நன்மைகள்
பிறப்பு நெடுவாழ்க்கை செல்வம் வனப்பு
நிலக்கிழமை மீக்கூற்றம் கல்வி நோயின்மை
இலக்கணத்தால் இவ் எட்டும் எய்துப என்றும்.
ஒழுக்கம் பிழையா தவர்.–ஆசாரக்கோவை.

திருக்குறள் -சிறப்புரை :947

திருக்குறள் -சிறப்புரை :947
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும். --- ௯௪௭
(தீ அளவு அன்றி ;பெரிது உண்ணின் ; நோய் அளவு இன்றி)
வயிற்றின் செரிக்கும் அளவு அறிந்து உண்ணாது, அளவுகடந்து உண்டால் உடலில் நோயும் அளவின்றிப் பெருகும்.
“இரைசுடும் இன்புறா யாக்கையுள் பட்டால்
உரைசுடும் ஒண்மை இலாரை …” –நான்மணிக்கடிகை.
நோயுள்ள உடம்பில் சேரும் உணவு செரிக்காமல் துன்புறுத்தும் ; அறிவு இல்லாதவரை அவர்தம் வாய்மொழியே துன்புறுத்தும்

புதன், 25 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -32

மெய்ப்பொருள் காண்பது அறிவு -32
”எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.”—திருக்குறள்.
முடிவேந்தனும் சான்றோரும் பாராட்டும் சிறப்புடைய பண்ணனை (சிறுகுடி கிழான் பண்ணன், பண்ணனது சிறுகுடி சோழநாட்டில், திருவீழிமிழலைக்கு அண்மையில், திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடப்பெற்ற ஊராகும்.)
ஆசிரியர் மதுரை அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார்  (புறநானூறு: 388.) இப்பாட்டின்கண் பாடுவாராய் “ இவனை யான் நாள்தோறும் பாடேனாயின் நன்றி கொன்றேன் என்னும் குற்றம்பற்றி என் பெருஞ் சுற்றத்தாரைப் பாண்டியன் அருள் செய்யாமல் ஒழிவானாக என்று பொருநன் கூறுவதாகக் கூறுகின்றார். 

திருக்குறள் -சிறப்புரை :946


திருக்குறள் -சிறப்புரை :946
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபே ரிரையான்கண் நோய்.---- ௯௪௬
(இழிவு அறிந்து ; கழிபேர் இரையான்.)
அளவுக்கு மிகாமல் உண்பவனிடத்து உடல் நலமாகிய இன்பம் நிலைத்து இருப்பதைப்போல அளவு கடந்து உண்பவனிடத்து உடலை வருத்தும் நோய் நிலைத்து நிற்கும்.
“விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலங்கெட்ட
 புல்லறிவாளர் வயிறு.” –நாலடியார்.
அறிவு கெட்டவர்களின் வயிறு, விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் சுடுகாடாகும்.


செவ்வாய், 24 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -31

மெய்ப்பொருள் காண்பது அறிவு -31
”கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாஞ் சொல். –திருக்குறள்.
“மனிதன் இறைவனுடன் வாழும்போது அவனது குரல் அருவியின் ஒழுக்கினைப் போல் இனிமையாக உள்ளது. தானியக் கதிர்களின் சலசலப்பைப் போல் மென்மையாக இருக்கிறது. சுயநலமிக்க எண்ணங்களை மனத்தில் நிரப்பிக்கொண்டு உங்கள் குரல்  மென்மையாக இருக்க வேண்டுமென்று விரும்புவது நடக்காத காரியம். குரலில் இனிமையும் கவர்ச்சியும் வேண்டுமென்றால் மனித இனத்தின் மீது அன்பையும் அனுதாப உணர்வையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.” ----டேல் கார்னகி. 

திங்கள், 23 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -30

மெய்ப்பொருள் காண்பது அறிவு -30
“மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும்
கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய் .”  மணிமேகலை.
நல்லறிவினை மயக்கும் கள்ளினையும் நிலைஉயிர்களைக் கொல்லுதலையும் அறிவுடையோர் தீயவை என விலக்கினர்.
“ நல்லறம் செய்வோர் நல் உலகு அடைதலும்
அல்லறம் செய்வோர் அருநரகு அடைதலும்
உண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர்.”
 நல்லறம் செய்வோர் இன்ப உலகம் அடைதலும் தீமை செய்வோர் அருநரகம் அடைதலும் உண்டு என்று அறிந்ததால் மனவலிமை உடையோர் அவற்றை நீக்கினர்.

திருக்குறள் -சிறப்புரை :945


திருக்குறள் -சிறப்புரை :945
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு. ---- ௯௪௫
(மறுத்து உண்ணின்)
உடலுக்கு ஒவ்வாத  உணவை மறுத்து,  அளவோடு உண்டு வந்தால் உடல் வலிவும் பொலிவும் பெற்று நோயில்லா வாழ்க்கை நிலையாகும்.
“இரு மருந்து விளைக்கும் நல்நாட்டுப் பொருநன்.”—புறநானூறு.
தண்ணீரும் உணவுமாகிய  இரு மருந்தை பசிப்பிணிக்குத்தரும் நல்ல நாட்டிற்குத் தலைவன் கிள்ளிவளவன்.

ஞாயிறு, 22 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -29

மெய்ப்பொருள் காண்பது அறிவு -29
”கல்வி தறுகண் இசைமை கொடையெனச்
சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே.” –தொல்காப்பியம்.
“பேசும் மொழி பதினெட்டும் வளரவேண்டுமானால், இந்தியா முழுமைக்கும் பாலர் வகுப்பு முதல் பட்டப்படிப்பு ஈறாக, முறையான ஒழுங்கான நெறியான பாடமுறை அமைய வேண்டும்.
ஒரு பல்கலைக் கழகத்துக்கும் மற்றொரு பல்கலைக்கழகத்துக்கும் உயர்வு, தரம், பாடமுறை வேறுபாடு இல்லாமல் இருத்தல் வேண்டும். அப்படி வித்தியாசம் இல்லாமல் இருந்தால் மாநிலத்துக்கு மாநிலம் வேற்றுமை வளராமல், தரம் குறையாமல் கல்வி வளரும்.”
“ பாலர் வகுப்பிலிருந்து பத்தாவதுவரை சீரான பாடங்களை வகுக்க வேண்டும். இந்தக்கல்வி தாய்மொழி மூலமே புகட்டப்பட வேண்டும். பொதுமொழியைக் குழந்தைகள் தவறாமல் கற்க வேண்டும்.”---- பூண்டி ஐயா.

திருக்குறள் -சிறப்புரை :944


திருக்குறள் -சிறப்புரை :944
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.--- ௯௪௪
 முன் உண்ட உணவு செரித்தது அறிந்து, வயிற்றுக்கு ஒவ்வாதவற்றை ஒருபொழுதும் உண்ணக்கூடாது என்ற உறுதியுடன், நன்றாகப் பசி எடுத்தபின் உணவைச் சுவைத்து உண்க.
“பசி ருசி அறியாது”- பழமொழியை நினைவில் கொள்க.
 “அருக்குக யார் மாட்டும் உண்டி சுருக்குக
செல்லா இடத்துச் சினம். –நான்மணிக்கடிகை.
அடுத்தவர் வீட்டில் உண்ணுதலைக் குறைத்துக் கொள்க; செல்லத் தகுதி இல்லாவிடத்துச் சினத்தைத் தணித்துக்கொள்க


சனி, 21 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -28

மெய்ப்பொருள் காண்பது அறிவு -28
“ Truth is the most valuable  thing we have . Let us economize  it.” -----Mark Twain
சத்தியம் அரிய விலையுடைய பொருள், அதனை நாம் கவனமாகப் பேண வேண்டும்.
“The lip of truth shall be established for ever ; but  lying tongue is but for a moment”  (Bible)
 சத்திய வாயன் என்றும் நித்தியமாய் நிலைத்திருப்பான் ; பொய் நாவன் அப்பொழுதே அழிந்து ஒழிவான்.
 சத்தியத்தைத் தழுவிவரும் அளவே மனித சமுதாயம் புனிதமாய் உயர்ந்து வருகிறது ; அதனை நழுவின் பழியும் துயரும் பாவமும் படிந்து எவ்வழியும் இழிவாய் அழிந்து ஒழிகிறது.” –ஜெகவீர பாண்டியனார்.

திருக்குறள் -சிறப்புரை :943


திருக்குறள் -சிறப்புரை :943
அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு.---- ௯௪௩
(அளவு அறிந்து ; அஃது உடம்பு ; நெடிது உய்க்கும் ஆறு.)
முன்பு உண்ட உணவு செரித்தபின் அடுத்த வேளை உணவை அளவு அறிந்து உண்ண வேண்டும். அங்ஙனம் செரிக்கும் அளவும் அதற்கேற்றாற்போல உணவும் உண்டு வருவது  உடம்பை நீண்டகாலம் நோய் நொடியின்றி  நிலைத்து நிற்குமாறு செய்யும் வழிமுறையாகும்.
“கைப்பன எல்லாம் கடைதலை தித்திப்ப
மெச்சும் வகையால் ஒழிந்த இடை ஆகத்
துய்க்க முறை வகையால் ஊண்.” –ஆசாரக்கோவை.
உணவு உண்ணும்போது இனிப்பான கறிகளை முதலிலும் கசப்பான கறிகளை இறுதியிலும் ஏனைய கறிகளை இடையிலும் உண்க.


வெள்ளி, 20 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -27

மெய்ப்பொருள் காண்பது அறிவு -27
“சர்க்காரே வேலியை மேய்கிறது . அரசே சட்டத்தைத் தண்டிக்கிறது. குற்றமே நீதியை அச்சுறுத்துகிறது என்றால் அந்த நாடு எப்படி இருக்கும்..?”
” அரசியல்வாதிகள் கொட்டும் குப்பையில் புதைந்து போகிறது சுத்தம்.”—பூண்டி ஐயா.

திருக்குறள் -சிறப்புரை :942


திருக்குறள் -சிறப்புரை :942
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.--- ௯௪௨
உண்ட உணவு நன்றாகச் செரித்தபின் பசி எடுக்கும் அந்நிலையில் அடுத்தவேளை உணவை உண்டால்  நோய்வாராது ; மருந்து என்ற ஒன்றும் தேவைப்படாது.
“ காத்து உண்பான் காணான் பிணி.” –சிறுபஞ்சமூலம்.
உடலுக்குப் பொருந்தாத உணவுகளை மறுத்து, நல்லன தெரிந்து உண்பவன் நோய்வாய்ப்பட மாட்டான்.

வியாழன், 19 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -26

மெய்ப்பொருள் காண்பது அறிவு -26
” எதற்காகப் பெயர் வைக்க வேண்டும்..? குடும்பத்தில் அரை டஜன் இருந்தால் ஒன்று, இரண்டு, மூன்று என்று அழைத்தால் யார் ஆட்சேபிக்கப் போகிறார்கள்..?
 பேரில் அன்பு ; கூப்பிட்டல் நிம்மதி; நினைத்தால் இன்பம் அந்தப் பெயர், பேர் எடுக்க உதவும். –பூண்டி ஐயா.

95. மருந்து
திருக்குறள் சிறப்புரை : 941
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று. ---- ௯௪௧
 காற்று முதலாக எண்ணிய (வாதம் , பித்தம்,சிலேத்துமம்) மூன்றனுள் எது ஒன்று மிகினும் குறையினும் உடலுக்கு நோய் செய்யும் என்று மருத்துவ அறிஞர்கள் கூறுவர்.
“அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.—பழமொழி.
(Too much of anything is good for nothing)
                           ’வளி முதலா எண்ணிய மூன்று, மருத்துவ நூலார் ஊதை( வாதம்) பித்தம் கோழை (சிலேட்டுமம்) என்பன. ஐ அல்லது ஐயம் என்பதும் கோழக்கொரு பெயர். இம் மூன்றும் உடம்பிலிருந்து வெவ்வேறு நற்றொழில் செய்யும் இன்றியமையாத கூறுகளேயன்றி, நோய்களல்ல. மூச்சும் பேச்சும் உட்பொருளிடமாற்றமும் வெளியேற்றமும் தனித்தும் பிற தாதுக்களோடு கூடியும் நிகழ்த்துவது ஊதையின் தொழில்கள் ; உண்டதன் செரிமானத்திற்கு உதவுவது பித்த நீர் ; தசைநார்களின் மழமழப்பான இயக்கத்திற்கு உயவு நெய்போற் பயன்படுவது கோழை.  இவை உணவுடை செயல்களின் ஒவ்வாமையாலும் இயற்கை வேறுபாட்டாலும் மிகுதலுங் குறைத்தலும் நேரும் பொழுதே, அவற்றின் விளைவாக நோய்கள் உண்டாகும் என அறிக.” --பாவாணர்    

புதன், 18 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -25

மெய்ப்பொருள் காண்பது அறிவு -25
வேண்டுவன்
”கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி
வீணாத் தண்டூடே வெளியுறத் தான் நோக்கிக்
காணாக் கண் கேளாச் செவியென்று இருப்பார்க்கு
வாணாள் அடைக்கும் வழியதுவாமே.” –திருமந்திரம்.
 பெருமானே..! புலன்வழி ஓடும் மனத்தைத் தடுத்துத் தேவை இல்லாதவற்றைக் கண்ணால் பார்க்காமலும் தேவை இல்லாதவற்றைக் காதால் கேட்காமலும் வாழ்ந்து, உலக மக்கள் யாவரும் நீடூழி வாழ வேண்டும் என்பதே இன்றைய எனது பிரார்த்தனை ஆகும். 

திருக்குறள் -சிறப்புரை :940


திருக்குறள் -சிறப்புரை :940
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.--- ௯௪0
நோயால் உடல் நலியுந்தொறும் இன்னும் கொஞ்சகாலம் வாழவேண்டும் என்ற எண்ணம்கொண்ட  உயிருக்கு, உடல் மீதுள்ள  ஆசை அதிகரிப்பதைப்போல, சூதாட்டத்தில் பொருளை இழக்குந்தொறும் எப்படியும் வென்றுவிடலாம் என்ற ஆசை அதிகரிக்கும்.
“அனைத்தையுந் தோற்றனை அருவிபாய்  கவுள்
சினக் களி மால் களிறனைய சீற்றத்தோய்
மனத்திடை நினைக்குவது என்னை வல்லைநின்
புனக்கொடிக்கு இயைந்து இனிப் பொருதும் யாம் என்றான்.---நைடதம்.
 நளனே…! அனைத்தையும் சூதாடித்  தோற்றுவிட்டாய், மலையருவியானது பாயும் கபோசலத்தை உடையவனே, சினம் கொண்ட பெருமை பொருந்திய  யானையை ஒத்த தோற்றத்தினை உடையோய்,  இனியும் நீ மனத்தில் நினைக்குவது என்னை  ?  விரைந்து வா ..உன் மனையாளைப் பணையமாக வைத்து  சூதாடுக என்றான் புட்கரன்.

செவ்வாய், 17 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -24

மெய்ப்பொருள் காண்பது அறிவு -24
தியானம்
” நெறிவழியே சென்று நேர்மை உள் ஒன்றித்
 தறி இருந்தாற் போல் தம்மை இருத்திச்
சொறியினும் தாக்கினும் துண்ணென்று உணராக்
குறி அறிவாளர்க்குக் கூடலும் ஆமே.” –திருமந்திரம்.
மூலாதாரம் முதலான ஆறு ஆதாரங்கள் வழியாகப் பிராணனை மேலே செலுத்தி, நெற்றிக்கு நேர் புருவ மத்தியில் மனத்தை ஒன்றி நிற்க, அடித்த கட்டுத்தறி போல ஒரே இடத்தில் அசைவற்றுத் தம் உடலை இருக்கச் செய்து, பிறர் வந்து உடலைச் சொறிந்தாலும் அடித்துத் துன்புறுத்தினாலும் இவை எதையும் உணராது அடைய வேண்டிய இலட்சியமே குறியாக இருந்து தியானம் செய்பவருக்கு யோகம் எளிதாகக் கைகூடும். 

திருக்குறள் -சிறப்புரை :939


திருக்குறள் -சிறப்புரை :939
உடைசெல்வம் ஊணொளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயம் கொளின். --- ௯௩௯
(ஊண் ஒளி)
சூது பலசெய்யும் சூதாட்டத்தை விரும்பி ஒருவன் மேற்கொள்வானாயின் அவனிடத்து, உடுத்தும் உடையும் ; தேடும் செல்வமும் ;  வயிறார உணவும் ; விரும்பும் புகழும் ; வேண்டும் கல்வியும் என்னும் இவ்வைந்தும் சேராது ஒழியும்.
“ தான் படைத்த பொருளனைத்தும் தம்பியர்கள்
       உடன் தோற்றுத் தனையும் தோற்றான்
மீன்படைத்த மதிமுகத்தாள் இவன்படைத்த
       தனமன்றி வேறே கொல்லோ.” –வில்லிபாரதம்.
  சூதில் தருமன், தான் படைத்த பொருள் அனைத்தும் தம்பியர்களோடு தோற்றுத் தானும் தோற்றான்.  அவ்வாறாக, மீன் படைத்த விழியினை உடைய  இத் திரெளபதி அவன் படைத்த பொருளே அல்லாது வேறாகுமோ..?

திங்கள், 16 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -23

மெய்ப்பொருள் காண்பது அறிவு -23
மூச்சுப் பயிற்சி
” தலைவன் இடம்வலம் சாதிப்பார் இல்லை
 தலைவன் இடம்வலம் ஆயிடில் தையல்
 தலைவன் இடம்வலம் தன்வழி அஞ்சில்
தலைவன் இடம்வலம் தன்வழி நூறே.” –திருமந்திரம்.
உயிர்த்தலைவன் பிராணன் (உயிர்வளி) இடமாகவும் வலமாகவும் சென்றுவரச் செய்பவர்கள், பிராணனை இடப்பக்கம் வலப்பக்கமாக உள்ளிழுத்து, நிறுத்தி வெளியிடும் மூச்சுப் பயிற்சியைச் செய்பவர்கள் அதிகம் பேர் இல்லை. காற்றை இடமாக இழுத்து, வலமாக விடப் பழகிக் கொண்டால் சக்தி, ஞானஒளி வெளிப்படும். இடம் வலமாகப் பிராணாயாமப் பயிற்சி செய்பவருக்கு, ஐம்புலன்களும் தம் இச்சைக்கு ஒடுங்கித் தன் இயல்பு அடங்கியிருக்கும். இப்படிப் பிராணாயாமப் பயிற்சி செய்வோர்தம் வாழ்நாள் நூறு ஆகும். (இர. வாசுதேவன்.) 

திருக்குறள் -சிறப்புரை :938


திருக்குறள் -சிறப்புரை :938
பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது. --- ௯௩௮
சூது, சேர்த்து வைத்த பொருளை அழிக்கும் பொருள் வேண்டிப் பொய் உரைக்கத் தூண்டும் மனத்தில் இரக்கமே இல்லாது ஒழிக்கும் இன்னபிற  பலவகையான துன்பங்களில் உழலச் செய்யும்.
“கழை சுளிபுகர் முகக் களிறு தேர் பரி
இழை தவழ் இள முலை மகளிர் ஈட்டிய
விழு நிதிக் குப்பைகள் வேலை சூழ் புவி
முழுவதும் தோற்றனன் முழவுத் தோளினான்.” –நைடதம்.
 சூதாடிய நளன், கரும்பை முறிக்கின்ற புள்ளி பொருந்திய முகத்தை உடைய யானையும் தேரினையும் குதிரையும் அழகிய அணிகலன்கள் தவழ்கின்ற  இள முலைகளை உடைய மாதர்களும் ஈட்டிய பெரும் பொருளாகிய செல்வத்தையும் கடல் சூழ்ந்த நிலப் பரப்பையும் மத்தளத்தை ஒத்த தோள்களை உடைய  மன்னன் அனைத்தையும் தோற்றுவிட்டான்.


ஞாயிறு, 15 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -22

மெய்ப்பொருள் காண்பது அறிவு -22
“ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே” ---திருமந்திரம்.
காற்றைப் பிடிக்கும் கணக்கை அறிந்துகொண்டால் எமனையே எட்டி உதக்கலாம்.
காற்றை இடப்புற மூக்கின் வழியாக உள்ளுக்குள் இழுத்து, உள்ளே அடக்கி வைத்திருந்து பின்னர் வலப்புற மூக்கின் வழியாக வெளியிட வேண்டும்.   ஓம் – கொப்பூழுக்குப் பன்னிரண்டு விரல் அளவின் கீழுள்ளது மூலாதாரம் , அந்த மூலாதாரத்தைத் தூண்டித் தொழிற்படுத்தும் மந்திரம் இயற்கைச் செந்தமிழ் மறையாகிய “ஓம்.” ( வல்லுநர் வழிநின்று செய்முறை அறிக.) 

திருக்குறள் -சிறப்புரை :937


திருக்குறள் -சிறப்புரை :937
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.--- ௯௩௭
சூதாடுவதையே தொழிலாகக் கொண்டு, பொழுதைக் கழிப்பவன் தன் குடும்பச் சொத்தை இழந்து கெடுவதோடு, பேணிக் காத்த நற்பண்புகளையும் இழப்பான்.
“ எள்ளுக சூதினை இகலி வென்றதூஉம்
கள்ள மேற்கொடுவலை காந்து வேட்டுவர்
உள்ளுற அமைத்திடும் உணவை ஓர்கிலாப்
புள்ளினம் அருந்தின போலும் என்பவே.” ---நைடதம்.
அரசனே..! சூதாட்டத்தைப் பகைத்து இகழக்கடவாயாக.   வேட்டையில் வெல்லும் வேடர்கள் கள்ளத்தனமாக வலையை மறைத்து அதன் உள்ளே வைத்திருக்கின்ற இரையை, அறியாது பறவைகள் உண்டதை ஒக்கும் சூதாட்டம்.

சனி, 14 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -21

மெய்ப்பொருள் காண்பது அறிவு -21
”முகத்தின் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்தின் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய
சுகத்தைச் சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙனம்.” –திருமந்திரம்.
உங்கள் கண் பார்வையை, புருவத்தின் நடுவில் வைத்திருங்கள் ; கேசரி முத்திரை என்று இதனைக் குறிப்பிடுவர். வெளியெலாம் அடங்கியிருக்கும் புருவ நடுவில் எண்ணத்தையும் உயிர் மூச்சையும் ஒடுங்கியிருக்கச் செய்யும் வன்மையுடையது - தியானம்.
அகக் கண்ணால் காணும் ஆனந்தத்தை விவரிக்க இயலாது. முகக் கண்கொண்டு பார்ப்பது மூடத்தனம். அகக் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம் என்பதே திருமந்திரத்தின் கருத்தாகும். 

திருக்குறள் -சிறப்புரை :936


திருக்குறள் -சிறப்புரை :936
அகடாரார் அல்லல் உழப்பர் சூதென்னும்
முகடியால் மூடப்பட் டார். --- ௯௩௬
(அகடு ஆரார் )
சூது என்னும் முகடி (மூதேவி) யால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் வயிறு நிறைய உண்பதற்கு வழியின்றி, எந்நேரமும் துன்பத்தில் உழன்று தவிப்பர்.
“ உனது கணவனான தருமன், தானே சூதாடி அனைத்தையும் பணையமாக வைத்துத் தோற்றான். பின்னர்த் தன்னையும் தம்பியரையும் உன்னையும் (திரெளபதி) பணையமாக வைத்துத் தோற்றான். முறையாக நாங்கள் சூதில் வென்றோம் “ என்று கூறித் துச்சாதனன் செண்டு என்ற ஆயுதத்தினால் அவளது கூந்தலைப் பற்றி இழுத்துச் சென்றான்.
“வண்டார் குழலும் உடன் குலைய
       மானம் குலைய மனம் குலையக்
கொண்டார் இருப்பர் என்று நெறிக்
       கொண்டாள் அந்தோ கொடியாளே. –வில்லிபாரதம்.
 வண்டுகள் நிறைந்த கூந்தல் குலையவும் மானம் குலையவும் மனம் குலையவும் பாஞ்சாலி அவன் பின் சென்றாள். தன்னை மணந்த கணவர்கள் அங்கு உள்ளனர் என்ற துணிவில் அங்கே சென்றாள். அந்தோ.. கொடிய பாவம் செய்தவள்.