சனி, 13 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1196


திருக்குறள் -சிறப்புரை :1196

ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது. ----- கக௯௬

ஆண், பெண் ஆகிய இருதிறத்தாருள், காமவேட்கையானது ஒருதலையாக எழுமானால் அஃது துன்பம் தருவதாகும். தோளில் சுமந்துசெல்லும் காவடி இருபக்கமும் உயர்வு, தாழ்வின்றி இயங்குவதைப்போல, காமவேட்கை  ஆண்,பெண் இருவரிடத்தும் ஒத்த விருப்பினால் நிகழுமானால் காம இன்பம் இனிமையுடையதாம்.

புல்லென் மாலையும் இனிது மன்றம்ம
நல்லக வனமுலை அடையப் புல்லுதொறும்
உயிர் குழைப்பன்ன சாயல்
செயிர்தீர் இந்துணைப் புணர்ந்திசி னோர்க்கே.” -----அகநானூறு.

வாடிய உயிர் இன்பத்தால் தளிர்க்குமாறு, முலை பொலிந்த நல்ல மார்பகத்தைத் தீண்டித் தழுவும் மாசற்ற மென்மைத் தன்மை வாய்ந்த துணைவரைக் கூடி மகிழ்வார்க்கு இந்த மாலைக்காலம் உறுதியாக இனிமைதரும் காலமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக