வியாழன், 18 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1207


திருக்குறள் -சிறப்புரை :1207

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.----0

என் காதலரைக் கூடிமகிழ்ந்த இன்பத்தை  மறக்க இயலாது நெடிது நினைத்துக் கொண்டிருக்கும் போதே, நைந்து என் உள்ளம் என்னைத் துன்பத்தால் சுட்டு வருத்துகின்றது ; அவரை நினைக்காமல் மறக்க நேர்ந்தால் நான் என்னாவேன்..?

கண்ணும் காட்சி தெளவின என் நீத்து
அறிவும் மயங்கிப் பிறிதாகின்றே
நோயும் பெருகும் மாலையும் வந்தன்று
யாங்கு ஆகுவென்கொல் யானே ஈங்கோ
சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின்
பிறப்பு  பிறிது ஆகுவது ஆயின்
மறக்குவேன்கொல் என் காதலன் எனவே.”---நற்றிணை.

தோழி…! என் கண்களும் காணுதற்குரிய அழகை இழந்தன; எனது அறிவும் வேறுபட்டுத் திரிந்து நின்றது ; காமநோயும் பெருகிற்று ; இவற்றை மிகுவிப்பதுபோல் மாலைப்பொழுதும் வந்தது ; இனி யான் என்ன ஆகுவேனோ...? இவ்வுலகத்தில் இறப்புக்கு அஞ்சேன் ; இறந்தபின் அடுத்த பிறப்பில் வேறுபட்டுப் போனால் என் காதலனை மறந்துவிட நேருமோ என்றே அஞ்சுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக