சனி, 20 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1210


திருக்குறள் -சிறப்புரை :1210

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.------0

மதியே வாழ்வாயாக..! எம் நெஞ்சைவிட்டு நீங்காது நிலைத்திருக்கின்ற தலைவர் பிரிந்து சென்றார் , அவரை எம் கண்களால் காணும்வரையேனும்  நீ மறையாமல் இருப்பாயாக.

பளிங்கு செறிந்தன்ன பல்கதிர் இடையிடை
பால்முகந்தன்ன பசுவெண் நிலவின்
மால்பு இடரறியா நிறையுறு மதியம்
சால்பும் செம்மையும் உடைய ஆதலின்
நிற்கரந்து உறையும் உலகம் இன்மையின்
எற்கரந்து உறைவோர் உள்வழி காட்டாய்.”-----நற்றிணை.

பல பகுதிகள் ஒன்றாக இணைந்தது போன்ற பல கதிர்களின் இடை இடையே பாலை மொண்டு வைத்தாற்போலக் குளிர்ச்சியைக் கொண்ட வெண்மையான நிலா ஒளியை உடையை, தேனை எடுக்க அமைந்த கண் ஏணியால் இடர்ப்பட்டறியாத பல கலைகளும்  நிறைவுற விளங்கும் திங்களே..!
 நீ, சான்றாண்மையும் செம்மைக்குணங்களும் உடையை யாதலால் உனக்குத் தெரியாது உறையும் உலகம் ஒன்றும் இல்லையாகலானும் எனக்குத் தெரியாதவாறு மறைந்து ஒழுகும் என்னுடைய காதலர் இருக்கும் இடத்தை எனக்கு நீ, காட்டுவாயாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக