செவ்வாய், 16 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1201


திருக்குறள் -சிறப்புரை :1201
121. நினைந்தவர் புலம்பல்

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது. -------0

உண்டபோது மட்டுமே மகிழ்ச்சியைத் தருகின்ற கள்ளைவிட, நினைத்த அளவிலே தீராத பெரு மகிழ்ச்சியைத் தரவல்ல காமம் இனியதாயிருக்கின்றது,

துறைகெழு மரந்தை அன்ன இவள் நலம்
பண்டும் இற்றே கண்டிசின் தெய்ய
உழையின் போகாது அளிப்பினும் சிறிய
ஞெகிழ்ந்த கவின் நலம் கொல்லோ மகிழ்ந்தோர்
கட்களி செருக்கத்து அன்ன
காமம்கொல் இவள் கண் பசந்ததுவே.” ----நற்றிணை

கடல்துறை விளங்கும் மரந்தை நகர் போன்ற இவளது நலம் முன்பும் இத்தன்மையுடையதே. நீ, காண்பாயாக, இவளிடத்துக் களவுக் காலத்தில் நீ, விலகாமல் இருந்து அன்பு செய்தாலும், இவள் கண் பசப்புற்றது ; அது சிறிதளவு முயக்கம் கைநெகிழ்ந்ததால் கெட்ட அழகின் மிகுதியோ? கள் உண்பார்க்குக் கள் இல்லாமற் போகும் காலத்து உண்டாகும் வேறுபாடு போன்ற காம வேறுபாடோ? அவ்விரண்டும் அல்லவே. தலைவியைச் சிறிதும் பிரியாமல் இருப்பாயாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக