வியாழன், 18 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1206


திருக்குறள் -சிறப்புரை :1206

மற்றுயான் என்னுளேன் மன்னோ அவரொடுயான்
உற்றநாள் உள்ள உளேன். ----0

 முன்பொருகால் யான் அவரைப் புணர்ந்து மகிழ்ந்த இன்பத்தை நினைத்தே, இப்பிரிவென்னும் துன்ப வெள்ளத்தைக்கடந்து உயிர் வாழ்கிறேன் அந்நினைப்பின்றேல் யான் எதனை எண்ணி உயிர் வாழ்வேன்..?

நிலம் பூத்த மரமிசை நிமிர்பு ஆலும் குயில் எள்ள
நலம் பூத்த நிறம் சாய நம்மையோ மறந்தைக்க
கலம் பூத்த அணியவர் காரிகை மகிழ் செய்ய
புலம் பூத்துப் புகழ்பு ஆனாக் கூடலும் உள்ளார் கொல்.” –கலித்தொகை,

நிலம் பொலிவதற்குக் காரணமாகிய மரங்களின் மேலிருந்து எள்ளல் செய்து குயில்கள் ஆரவாரித்தன ; அது நம்மை இகழும்படியாக இருந்தது ; நலம்தரும் பொலிவுடன் விளங்கிய நம் அழகு, நிறம் கெடும்படியாகத் தாம் விரும்பாத நம்மையே மறப்பாராக ; அழகிய அணிகலன்களை அணிந்த மங்கையரின் அழகு, அவருக்கு மன மகிழ்ச்சியை ஊட்டும் போதாவது, தன் அறிவு தெளிவுபெற்று, எம்மிடம் பெற்ற இனிமை மிகுந்த புணர்ச்சியை அவர் நினையாரோ..? நினைக்கில் அவர் வருவாரன்றோ…?

1 கருத்து: