சனி, 20 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1209


திருக்குறள் -சிறப்புரை :1209

விளியுமென் இன்னுயிர் வேறல்லாம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.---- 0

அன்று, கூடி மகிழ்ந்திருந்தபொழுது  அன்பே, நமக்குள் வேறுபாடு இல்லை ; நாம் உடலால் இருவராயினும் உள்ளத்தால் ஒருவரேஎன்றெல்லாம் சொன்னவர், இன்று , அன்பில்லாமல் பிரிந்து சென்றதை நினைந்து , என் இனிய உயிர் அழிகின்றது.

புனவன் துடவைப் பொன்போல் சிறுதினை
கிளி குறைத்து உண்ட கூழை இருவி
பெரும் பெயல் உண்மையின் இலை ஒலித்தாங்கு என்
உரம் செத்தும் உளெனே தோழி என்
நலம் புதிது உண்ட புலம்பினானே.”—குறுந்தொகை.

தோழி..! தினைப்புனத்தை முயன்று ஆக்கியவன் தோட்டத்தில் விளைந்த 
முற்றிய கதிர்களைக் கிளிகள் கொய்து உண்டமையால் தாள்கள் குறுமையடைந்தன. அவை, பெரிய மழை பெய்தமையால் இலைகளோடு தழைத்தன. அதுபோல, தலைவர், எம் நலத்தைப் புதிதாகத் துய்த்து நீங்கிச் சென்றமையால் ஏற்பட்ட தனிமையால், என் வலிமை நீங்கிய போதிலும் சாகாமல் இன்னும் உயிரோடு இருக்கின்றேன், ( அவன் செய்த அன்பு தன் நெஞ்சில் நீங்காமல் இருத்தலால், தன் உடல் வலிமை கெட்டும் உயிர் வாழ்வதாகத் தலைவி கூறினாள்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக