திருக்குறள்
-சிறப்புரை
:1211
122 .கனவுநிலை உரைத்தல்
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து. ---- க௨கக
பிரிவுத்துயரால் வருந்தும் என் நிலைமை அறிந்து, காதலர் தூதாக விடுத்த கனவினுக்கு விருந்தாக யாம் எதனைச்
செய்யக் கூடும்.
”பசந்தவர் பைதல் நோய் பகை எனத் தணித்துத்
தம்
இன்னுயிர் செய்யும் மருந்தாகிப் பின்னிய
காதலர் எயிறு ஏய்க்கும் தண் அருவி நறுமுல்லைப்
போது ஆரக் கொள்ளும் கமழ் குரற்கு என்னும்
தூது வந்தன்றே தோழி
துயர் அறு கிளவியோடு அயர்ந்தீகம் விருந்தே.” ---கலித்தொகை.
தோழி..!
இள்வேனிற் காலத்தே குளிர்ந்த அருவியின் கரைகளிலே, மகளிர் எயிற்றை ஒக்கும் நறிய முல்லைப் பூக்கள், நும்முடைய
மணங்கமழ்கின்ற கூந்தலிலே எம்மைக் கொய்து சூடிக்கொள்ளுங்கள் என்று கூறுவன போல மலர்ந்துள்ளன;
அதுவல்லாமல் பசந்தவருடைய, வருத்தம் தரும் காமநோயைத்
தனக்குப் பகை என்று கருதிப் போக்கி, வெற்றி கொள்பவர் நம் காதலர்;
நம் இனிய உயிரை வாழ்விக்கும் மருந்தினைப் போல, நின் துயர் தீர்க்கும் இனிய மொழிகளைக் கூறிக்கொண்டே, முயங்கிய காதலருடைய
தூதராய் இளவேனில் வந்தது ; ஆதலின் இளவேனிற்கு விருந்தானவற்றைச்
செய்வோம் வா..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக