சனி, 13 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1197


திருக்குறள் -சிறப்புரை :1197

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுக வான். ---- கக௯௭

காமவேட்கை,  இன்பம் நுகரும் ஆண், பெண் இருவரிடத்தும் ஒத்து நிகழ்தலின்றி, ஒருவர்மாட்டு மட்டுமே மிகக்கூட்டும் காமன், இன்பம் துய்த்தலின்றி வாடுவார் மேனியில் பசப்பூர்தலையும் வருத்தத்தையும் அறியான் போலும்.

காமம் தாங்குமதி என்போர் தாம் அஃது
அறியலர் கொல்லோ அனைமதுகையர் கொல்
யாம் எம் காதலர்க் காணேம் ஆயின்
செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க்
கல்பொரு சிறுநுரை போல
மெல்ல மெல்ல இல்லாகுதுமே.” ----குறுந்தொகை.

தலைவர் நெடுங்காலம் பிரிந்திருப்பதாகவும் நின் காம நோயைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று என்னைத் தெருட்டுவோர், தாம் அதனைப் பொறுத்துக் கொள்வதற்குரிய வழிவகைகளை அறிவார்களோ..? அவ்வழி அவர்கள் காமநோயைப் பொறுத்துக்கொள்ளும்  அத்துணை மனவலிமை ஊடையவரோ..? யாம் எம்முடைய காதலரை உரிய காலத்தில் வரக் காணேம் ஆயின், கல்லில் மோதிய கடலின் சிறிய நுரையைப் போலத் துன்பம் பெருகிய நெஞ்சுடன், சிறுக சிறுக இல்லையாய்ப் போய்விடுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக