ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1212


திருக்குறள் -சிறப்புரை :1212

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.-----௨க௨

பிரிவாற்றாமையான் வருந்துகின்ற கயல் போன்ற மையுண்ட கண்கள் யான் கெஞ்சி வேண்டிக்கொள்ள உறக்கம் கொள்ளுமாயின், காணும் கனவில்  காதலரைக் காண்பேன், கண்டு அவருக்காக யான் ஆற்றியிருந்த உண்மையை விரிவாக எடுத்துரைப்பேன்.

கேடிசின் வாழி தோழி அல்கல்
பொய்வலாளன் மெய்யுற மரீஇய
வாய்த்தகைப் பொய்க் கனா மருட்ட ஏற்று எழுந்து
அமளி தைவந்தனனே குவளை
வண்டுபடு மலரின் சாஅய்த்
தமியென் மன்ற அளியன் யானே” –குறுந்தொகை.

தோழி.... கேட்பாயாக..!  பொய்யை மெய்போலக் கூறுவதில் வல்லவன், என்னுடைய உடம்பின் ஊற்றின்பத்தைப் பெறுவதற்காக, இரவில் பொய்யாகிய கனவில் வந்து மயக்கியதை உண்மை நிகழ்ச்சிபோல் நினைத்தேன். என் மயக்கம் நீங்கித் துயிலெழுந்து, படுக்கையில் அவன் இருப்பதைக் கையால் தடவிப் பார்த்தேன், வண்டுகளால் உழக்கப்பட்ட குவளை மலரைப்போல நிலைகுலைந்த யான், அவரைக் காணாது தனித்தவளாய் ஆயினேன், உறுதியாக யான் ஒருத்தியே இரங்கத்தக்கவள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக