செவ்வாய், 30 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1230


திருக்குறள் -சிறப்புரை :1230

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயுமென் மாயா உயிர். ----- ௨ ௩0

பொருள் தேடுவதையே குறியாக்கொண்டுள்ள என் காதலரை நினைத்து வருந்தி, இந்நாள்வரை மாயாதிருந்த என் உயிர், மயக்கம்தரும் இம்மாலைப்பொழுதில் மாயும்.

கிளிபுரை கிளவியாய் நின் அடிக்கு எளியவோ
தளிஉறுபு அறியாவே காடு எனக்கூறுவீர்
வளியினும் வரைநில்லா வாழுநாள் நும் ஆகத்து
அளியென உடையேன் யான் அவலம் கொண்டு அழிவலோ.” –கலித்தொகை.

கிளியின் பேச்சைப்போல் பேசும் மொழியினை உடையவளே ; மழையே பெய்தறியாத , வெம்மை உடையகாட்டிலே , நீ நடந்து போதற்கு நின் அடி எளியவாய் இருக்குமோ என்று கூறினீர்…!
வரையறுத்துக் கூறவியலாத, நிலையாமை உடைய காற்றைப்போன்று விளங்குவது வாழ்நாள் ; நாம் கூடிவாழும் இந்நாளிலே நின் மார்பிடத்தே முயக்கத்தைக்கண்டு, அதனையே விருப்பு எனக்கொண்டு வாழ்நாளாக உடையேன் ;ஆதலால் இனி உம்மைப் பிரிந்து அவலங்கொண்டு நெஞ்சழிவனோ .? இறந்துபடுவேனே….!

திருக்குறள் -சிறப்புரை :1229


திருக்குறள் -சிறப்புரை :1229

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து. ---- ௨௨ ௯

பிரிவால் வருந்தும் என் உள்ளம், அறிவு மயங்கவும் துன்பத்தை மிகுவிக்கும் மாலைக்காலம் பரவிவர, என்னொடு இவ்வூரினரும் துன்பப்படுவார்கள்.

மருள்கூர் பிணைபோல் மயங்க வெந்நோய் செய்யும்
மாலையும் வந்து மயங்கி எரிநுதி
யாமம் தலைவந்தன்று ஆயின் அதற்கு என் நோய்
பாடுவேன் பல்லாருள் சென்று
யான் உற்ற எவ்வம் உரைப்பின் பலர்த் துயிற்றும்
யாமம் நீ துஞ்சலை மன்.” ---கலித்தொகை.

மருட்சி மிக்க பெண்மானைப்போல, யான் மயங்கும்படி வெவ்விய காமநோயை உண்டாக்கும் மாலைக்காலமும் வந்தது ; அதனொடு மயங்கித் தீங்கொழுந்துபோல் சுடுகின்ற இரவும் வந்தது ; மாலைக்காலத்தே யான்பட்ட வருத்தத்தை என் போல் வருந்தும் மகளிர் பலரிடத்தும் சென்று கூறுவேன். நினக்கு முறைப்பட்டுக் கூறின் பலரையும் துயிலச் செய்யும் இராக்காலமே நீயும் மிகவும் வருந்தி துயில் கொள்ளாதிருப்பாயாக.

திங்கள், 29 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1228


திருக்குறள் -சிறப்புரை :1228

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை. --- ௨௨௮

 இனிமை உடையதாயிருந்த  மாலை நேரஆயர் குழலோசை, இப்போது என் காதுகளில் அனலாய்ச் சுடுவதாயும்  மாலைக் காலம் வந்ததை உணர்த்தும் தூதாகியும் என்னைக் கொல்லும் படையாகவும் இருக்கின்றதே.

நினையும் என் உள்ளம் போல் நெடுங்ழி மலர் கூம்ப
இனையும் என் நெஞ்சம் போல் இனம் காப்பார் குழல் தோன்ற
சாய என் கிளவி போல் செவ்வழி யாழ் இசை நிற்ப
போய என் ஒளியே போல் ஒரு நிலையே பகல் மாய
காலன் போல் வந்த கலக்கத்தோடு என்தலை
மாலையும் வந்தன்று…..” ---கலித்தொகை.

காதலரை நினையும் என் உள்ளத்தைப்போல் நெடிய கழியில் மலர்கள் குவிந்துள்ளன; வருந்தும் என் நெஞ்சைப்போல் ஆயர்தம் குழலோசை தோன்றுகின்றது ; குலைவுபெற்ற என் சொற்கள் போலச் செவ்வழியாழ் இசையும் சீர் கெட்டுள்ளது ; அழிந்த என் அழகுபோல் பகல் பொழுதின் ஒளி மங்கிற்று ; கலக்கத்தோடு வந்த காலனைப்போல என் மேல் மாலைக் காலமும் வந்தது ; இனி எங்ஙனம் ஆற்றுவேன்…?

திருக்குறள் -சிறப்புரை :1227


திருக்குறள் -சிறப்புரை :1227

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய். ---- ௨௨ ௭

காமமாகிய நோய், காலைப்பொழுதில்  அரும்பாகத்தோன்றிப் பகற்பொழுது முழுதும் பூக்கும் பருவம் எய்தி, மாலைப் பொழுதில் மலரும்.

தளவின் பைங்கொடி தழீஇ பையென
நிலவின் அன்ன நேர் அரும்பு பேணி
கார் நயந்து எய்தும் முல்லை அவர்
தேர் நயந்து உறையும் என் மாமைக் கவினே.” ---ஐங்குறுநூறு.

வெண்முல்லைக் கொடிகள் செம்முல்லையின் பசுங்கொடிகளைச் சூழ்ந்து. நிலவொளி போலும் நேரிய அரும்புகளைத் தோற்றுவித்துக் கார்காலம் வந்ததும் அதனை நயந்து மெல்ல மலரும் ; அதுபோல் பிரிந்து சென்ற காதலரின் தேர் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது என் மாமைக் கவின்; தேர் வரின் என் கவினும் சிறப்புறும்.

ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1226


திருக்குறள் -சிறப்புரை :1226

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்தது இலேன். ---- ௨௨௬

மாலைப் பொழுது மிகவும் துன்பம் தரவல்லது என்பதை, என் காதலர் என்னைவிட்டு அகலாது இருந்தகாலத்தில் நான் அறிந்தேன் இல்லை.

வெண்மணல் விரிந்த வீததை கானல்
நண்ணந் துறைவன் தணவா ஊங்கே
வாலிழை மகளிர் விழவு அணிக்கூட்டும்
மாலையோ அறிவேன் மன்னே மாலை
நிலம் புரந்தன்ன புன்கணொடு
புலம்பு உடைத்து ஆகுதல் அறியேன் யானே.” ----குறுந்தொகை.

வெள்ளிய மணல் பரந்த, பூக்கள் நெருங்கிய கடற்கரைச் சோலையின் தலைவன் என்னைப் பிரிவதற்கு முன், தூய மங்கல அணியை உடைய மகளிர் கூடும் விழாவின்கண் தங்கள் கணவருடன் சேர்க்கும் மாலைக் காலத்தை அறிவேன். தலைவன் பிரிந்த பின், அது கழிந்தது, என் மட்டிலின்றி, உலகம் முழுவதும் பரந்தது போன்ற ஒளியின்றித் தனிமைத் துன்பம் உடையதாக அம்மாலைப் பொழுது இருத்தலை யான் அப்பொழுது அறியேன்.

திருக்குறள் -சிறப்புரை :1225


திருக்குறள் -சிறப்புரை :1225

காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை. ----- ௨௨௫

எதிர்நோக்கும் ஆவலைத்தூண்டும் காலைப் பொழுதிற்கு நான் செய்த நன்மைதான் என்ன ;  காதலர்வரவைக் காணாது ஏமாற்றம் அளிக்கும் மாலைப் பொழுதிற்கு நான் செய்த தீமைதான் என்ன..?

எல்லை கழிய முல்லை மலர
கதிர் சினம் தணிந்த கையறு மாலை
உயிர் வரம்பாக நீந்தினம் ஆயின்
எவன் கொல் வாழி தோழி
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே.” ----குறுந்தொகை

பகற்பொழுது கழிந்தது, முல்லை அரும்புகள் மலர்ந்தன ; ஞாயிறும் தம் வெம்மை தணிதற்குக் காரணமான மயக்கத்தைத் தோற்றுவிக்கும் மாலைப்பொழுதும் வந்தது. மாலைப் பொழுது, இரவினை எல்லையாகக் கொண்டு சிறிது பொழுது நிற்பதால், அக்காலத்தில் ஒருவாறு ஆற்றியிருத்தலும் கூடும் ஆனால் அம்மாலைப் பொழுதோ, கடலைவிடப் பெரிய எல்லையற்ற கங்குல் வெள்ளத்தை உடையதால், அதனை எவ்வாறு யான் நீந்துதல் கூடும், மாலைப்பொழுது இரவினும் கொடியதாகும்.

சனி, 27 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1224


திருக்குறள் -சிறப்புரை :1224

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும். ----- ௨௨௪

அன்று இனிமை செய்த மாலைப்பொழுது, இன்று காதலர் உடன் இல்லாத காலத்தில், இம்மாலைப் பொழுது  கொடுவாளினை ஏந்திய  கொலைக்களத்துக் கொலையாளிகள் போல என்னைச் சூழ்ந்து உயிர் உண்ண வருகிறதே.

இகல்மிகு நேமியன் நிறம்போல இருளிவர
நிலவுக் காண்பதுபோல அணிமது ஏர் தர
………………………………………………
செந்தீச் செவ்வழல் தொடங்க வந்ததை
வால் இழை மகளிர் உயிர்பொதி அவிழ்க்கும்
காலை ஆவது அறியார்
மாலை என்மனார் மயங்கியோரே.”--- கலித்தொகை.

 போரில் வால்ல சக்கரப்படையைக் கொண்ட திருமாலின் நிறம் போல, இருள் பரவி வந்தது ; இருளைத் தன் ஒளியாலேபுறங்கண்டாற் போல, அழகிய மதியும் தோன்றி அழகு செய்தது.
 அந்திப்பொழுது வந்ததை, மகளிர் செந்தீயால் விளக்குகளை ஏற்றினர் ;  ஒளி பொருந்திய அணிகலன்கள் அணிந்த மகளிர் மாலைப்பொழுது விளக்கம் கொள்ள  வந்ததை, உயிரை அவர்தம் உடம்பினின்று பிரிக்கும் கொடுமையான காலம் என்பதை அறியாராய், அறிவு மயங்கி மாலை என்று கூறுகின்றனர்.

திருக்குறள் -சிறப்புரை :1223


திருக்குறள் -சிறப்புரை :1223

பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித்
துன்பம் வளர வரும். ---- ௨௨ ௩

காதலர் பிரிந்தமையால் முன்பு நடுக்கத்தைத் தோற்றுவித்த மாலைக் காலம் இப்பொழுது உயிர் வாழ்வதில் வெறுப்பை உண்டாக்கித் துன்பம் வளர வளர மாலைப்பொழுதும் வளர்ந்து வருதைப்போல் தோன்றுகிறது.

இம்மாலை
இருங்கழி மாமலர் கூம்ப அரோ என்
அரும்படர் நெஞ்சம் அழிவொடு கூம்பும்
இம்மாலை
கோவலர் தீம்குழல் இனைய அரோ என்
பூ எழில் உண்கண் புலம்பு கொண்டு இனையும்.” –கலித்தொகை.

இம் மாலைப் பொழுதிலே…!
கரிய கழியில் உள்ள பெரிய மலர்கள் எல்லாம் கூம்பின ; அருந்துயர் படர்ந்த என் நெஞ்சமும் அழிதலோடு தன் நினைவு இன்றிக் குவியும் இம் மாலைப் பொழுதிலே…!
கோவலர் தம் இனிய குழல்களில் துன்ப ஓசையை எழுப்புவர் ; என், பூப் போல் மையுண்ட கண்கள் தனிமைகொண்டு வருந்தும்.

வெள்ளி, 26 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1222


திருக்குறள் -சிறப்புரை :1222

புன்கண்ணை வாழி மருள்மாலை என்கேள்போல்                     
வன்கண்ண தோநின் துணை. ----- ௨௨௨

மயங்கிய மாலைப் பொழுதே வாழி..!  நீயும் என்னைப்போல் ஒளி இழந்து தோன்றுகின்றாயே ;  உன் துணைவரும் என்னை மணந்து பிரிந்து சென்ற என் கணவரைப்போல  இரக்கமற்றவரோ..?

மாலை நீ  ஈரமில் காதலர் இகந்து அருளா இடம் நோக்கிப்
 போர் தொலைந்து இருந்தாரைப் பாடு எள்ளி நகுவார் போல்
ஆரஞர் உற்றாரை அணங்கிய வந்தாயோ..!” -----கலித்தொகை.

மாலைப் பொழுதே…! நீ, அன்பு இல்லாத காதலர் விட்டு நீங்கி, அருள் செய்யாத காலம் பார்த்துப் போரிலே தோல்வி உற்றாரைப் பார்த்து, அவர்பட்ட தோல்வியை இகழந்து சிரிப்பாரைப் போலப் பொறுத்தற்கரிய வருத்தமுற்ற என்னை, வருத்துதற்கு வந்தனையோ..? நீ, கொடிய மாலைப் பொழுதாக இருந்தனையே..!.

திருக்குறள் -சிறப்புரை :1221


திருக்குறள் -சிறப்புரை :1221

123. பொழுதுகண்டு இரங்கல்

மாலையோ அல்லை  மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது. ------ ௨௨க

ஓ மாலைப் பொழுதே நீ வாழ்வாயாக…! மனத்திற்கு மகிழ்ச்சிதரும் மாலைப் பொழுதாக நீ, இருக்கவில்லை ; மணமுடித்தவரைப் பிரிந்து வாடும் மகளிரின் உயிரைப் பறிக்கும்   கொடிய  காலமாக வந்தனையே…!

எள்ளற இயற்றிய நிழல்காண் மண்டிலத்
துள்ளூ தாவியற் பையப்பய நுணுகி
மதுகை மாய்தல் வேண்டும் பெரிதழிந்து
இதுகொல் தோழி என்னுயிர்
விலங்கு வெங் கடுவளி எடுப்பத்
துளங்குமரப் புள்ளில் துறக்கும் பொழுதே.” –அகநானூறு.

 தோழி….!செம்மையாக இயற்றப் பெற்ற உருவங் காணும் கண்ணாடியின் முன்னே, ஊதிய ஆவி முன் பரந்து, பின் சுருங்கினாற் போல, என் வலிமை சிறிது சிறிதாகக் குறைந்து  மாய்தல் வேண்டி நிற்க,  கடிய சூறைக்காற்று அலைப்ப , அசையும் மரத்திலுள்ள பறவை போல, யானும் மிகவும் அழிவுற்று , என் உயிர் இவ்வுடலைத் துறந்து செல்லும்  காலம் இதுவே போலும்.


திருக்குறள் -சிறப்புரை :1220

நனவினால் நம்நீந்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர். ----- ௨௨0

 எம் காதலர் நனவில்வந்து நமக்கு அன்பு செய்யாது பிரிந்தார்  என்று இவ்வூரார் பழித்துரைப்பர் ; ஆனால் அவர் நாளும் என் கனவில் தோன்றி மகிழ்விப்பதை அவர்கள் அறியார்.

வேனிற் பாதிரிக் கண்மலர் அன்ன
மயிரேர்பு ஒழுகிய அம்கலுழ் மாமை
நுண்பூண் மடந்தையைத் தந்தோய் போல
இன் துயில் எடுப்புதி கனவே
எள்ளார் அம்ம துணைப் பிரிந்தோரே.” ---குறுந்தொகை

கனவே….! வேனிற் காலத்தில் மலரும் பாதிரி மரத்தின் இதழ்கள் உட்புறம் வளைந்த பூவில் உள்ள மயிரினைப் போன்று, மயிர் எழுந்து படர்ந்த அழகு ஒழுகும் மாமை நிறத்தினையும் நுண்ணிய  வேலைப்பாடுகளை உடைய அணிகலன்களையும் உடைய தலைவியைக் கொண்டுவந்து தந்ததுபோல, இனிய உறக்கத்தினின்றும் எழுப்புகின்றாய்..கனவே, தன் துணையைப் பிரிந்தோர் நின்னை இகழ்ந்து கூறார்.