புதன், 8 ஆகஸ்ட், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -45

மெய்ப்பொருள் காண்பது அறிவு -45
ஆன்மீக வாதம் அல்லது கருத்துமுதல் வாதத்தின் தோற்றம்.
 எங்கல்ஸ் எழுதினார்…!
                           ” இனக்குழுக்களிலிருந்து நாடுகளும் அரசுகளும் தோன்றின. சட்டமும் அரசியலும் தோன்றின. இவற்றோடு மனிதர் மனத்தில் மனிதரைப்பற்றிய விகாரமான பிரதிபலிப்பு (Fantastic reflection) தோன்றியது. இதுதான் சமயம் என்பது. மாறிய சமுதாய அமைப்பில் மனித மனத்தின் இப்படைப்புகள் மனித சமுதாயத்தை ஆட்டிப்படைப்பதாகத் தோன்றின. அதே சமயம் கையினால் (உழைப்பினால்) படைக்கப்பட்டவை மனித மனத்தில் மதிப்பை இழந்தன. ஏனெனில் உழைப்பைத் திட்டமிடும் மனம், உழைப்பை நிறைவேற்றும் கையையும் உறுப்புகளையும்விட உயர்ந்ததாக எண்ணப்பட்டது. வர்க்க சமுதாயத்தில் மூளையால் உழைப்பவர்கள் தங்களது வேலைகளைத் தங்கள் கைகளால் அல்லாமல் பிறர் கைகளால் செய்து கொள்ள முடிந்தது. தமக்காக அல்லது பிறர்க்காக உழைக்கக் கைகள் இருந்தன.
                 பழைய சமுதாயத்தில் தம் கைகளால் தமக்கே உழைத்துக்கொண்ட நிலைமையே இருந்தது. புதிய நாகரிகத்தின் முன்னேற்றத்திற்குக் காரணம் ‘மனம்’ என்றே புதிய சமுதாயத்தின் அறிவாளிகள் கருதினர். உழைப்பிற்குப் பழைய சமுதாயத்தில் இருந்த சிறப்பு மக்கள் மனத்தில் இல்லாது ஒழிந்தது. தங்களது தேவைகளிலிருந்து அல்லாமல், தங்களது சிந்தனைகளிலிருந்து தங்கள் செயல்களுக்கு விளக்கம் காணத் தொடங்கினர். தொன்மைச் சமுதாயம் அழிந்த பின்னர் சிந்தனைகளிலிருந்து செயல்களை விளக்கும் ஆண்மீகவாத கருத்துமுதல்வாதக் கண்ணோட்டம் வலுப்பெற்றது, மனிதன் மனத்தை இதுவே ஆக்கிரமித்தது.
                      உழைப்புப் பிரிவினை என்பது அவ்வாறு உண்மையாகவே தோன்றியது, மன உழைப்பு, செயல் உழைப்பு என்ற பிரிவினை த்ப்ப்ன்றிய பின்னர்தான்.
                                 உண்மையானதொன்றை நினைக்காமலே தான் நிலைகொண்டிருத்தல் இயலும் என்ற நிலை , உணர்வு அல்லது பிரக்ஞைக்கு ஏற்பட்டது. உலகிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, பிரக்ஞை அல்லது உணர்வு சுத்தமான கொள்கை, சமயம் தத்துவம், நீதி முதலியவற்றைப் படைக்கத் தொடங்கியது.” – நா. வானமாமலை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக