திங்கள், 20 ஆகஸ்ட், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -57

மெய்ப்பொருள் காண்பது அறிவு -57

“மக்கள்தாமே ஆறறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.” தொல்காப்பியம்.

முப்பத்திரண்டு அவயவத்தான் அளவிற்பட்டு அறிவொடு புணர்ந்த ஆடூஉ மகடூஉ மக்கள் எனப்படும். அவ்வாறு உணர்விலும் குறைவுபட்டாரைக் குறைந்தவகை அறிந்து முற்கூறிய சூத்திரங்களானே அவ்வப்பிறப்பினுள் சேர்த்திக் கொள்ளவைத்தான் என்பது அவை ஊமும் செவிடும் குருடும் போல்வன. கிளையெனப்படுவார் தேவரும் தானவரும் முதலாயினார், பிறப்பு என்றதனால் குரங்கு முதலாகிய விலங்கினுள் அறிவுடையன எனப்படும் மன உணர்வு உடையன உளவாயின் அவையும் ஈண்டு ஆற்றிவுயிராய் அடங்கும் என்பது தாமே எனப்பிரித்துக் கூறினமையான் நல்லறிவுடையாரென்றற்குச் சிறந்தார் என்பதும் கொள்க.—பேராசிரியர்.

“ ஒருசார் விலங்கும் உளவென மொழிப.”—தொல்காப்பியம்.
விலங்கினுள் ஒருசாரனவும் ஆறறிவுயிராமென்றவாறு. அவையாவன கிளியுங் குரங்கும் யானையும் முதலாயின.”—இளம்பூரணர்.

உயிர்

அணு முதல் மனிதன் வரையுள்ள உடல் வளர்ச்சியையும் உயிரியல் அறிவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் விளக்கமுடியும். மூளையின் செயற்பாட்டை அறியாத காரணத்தால் சீவன், புத்தி, மனம், நினைவு முதலிய கற்பனைகளை நமது பண்டைய தத்துவவாதிகள் படைத்தனர்.

இன்று உயிர் என்றால் ஏதோ புரியாத ஒன்றாக இருக்கவில்லை. இது உடல் என்ற மிகச்சிக்கலான பொருளமைப்பின் ஒரு பண்பு. இது உடலினுள் நடைபெறும் உயிரியல் இரசாயன மற்றங்களின் ஒரு தொகுப்பு (Totality) . இம்மாறுதல் வரிசைத்தொடர் மாறி, திசைமாறிச் சென்றுவிட்டால் மாறுதல்  நின்றுபோய்விடும் போய்விட்டால்  அணுக்கள் (செல்கள்) வாழமாட்டா. அவை பிரிந்து வேறு எளிய பொருள்கள் தோன்றத் தொடங்கும் இதுதான் சாவு.
 செல்லிலிருந்து மனிதன்வரை ஏற்பட்ட வளர்ச்சியை டார்வின் முதல் ஃகால்டேன் வரை விளக்கியுள்ளார்கள். இம்மாறுதல்களின் அடிப்படைப் பொதுவிதிகளை டார்வின் நிறுவியுள்ளார்.” எங்கெல்சு. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக