ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -63

மெய்ப்பொருள் காண்பது அறிவு -63
புலவர் குழந்தை….
”தமிழர் கொள்கையல்லாத வடவர் கொள்கையையே பரிமேலழகர் தம் இயல்புப்படி வலிந்து புகுத்தியுள்ளாரென்க. ‘ அறம் பொருள் இன்பம் அடைதல் நூற்பயன்’ என்பதையே வடமொழிக்கு அடிமையான பிற்காலத் தமிழர்கள், ‘ அறம் பொருளின்பம் வீடடைதல் நூற்பயன்’ என்று திரித்துவிட்டனர். வீடும் உறுதிப் பொருளில் ஒன்றென்பது பழந்தமிழர் கொள்கையெனில், வள்ளுவர் திருக்குறளை நாற்பாலாகச் செய்யாமல் முப்பாலாகச் செய்திருப்பாரா? ‘ குன்றக் கூறல்’ என்னும் குற்றமுடைத்தாகும் என்பதை வள்ளுவர் அறியாரா என்ன? ஆசிரியர் முப்பால் கூறியிருக்க, நாற்பால் எனக் கூறுவது ஆசிரியர் கருத்தறியாமையோடு, ஆசிரியர் கருத்தைத் திரித்துக் கூறித் தமிழரை மயங்க வைத்தலுமாகும்.”
 “அறமாவது மனு முதலிய நூல்களில் வித்தன செய்தலும் விலக்கியன ஒழித்தலுமாம்” என்னும் (பரிமேலழகரின்) கூற்றே பொருந்தாப் போலிக்கூற்றாகும். ஆரியக் கொள்கைகளை எப்படியாவது தமிழர் நம்பும்படி செய்துவிட வேண்டும் என்னும் உட்கருத்துடன் கூறப்பட்டதேயாகும் இவ்வுரைப்பாயிரம். மனுவறம் தமிழர்க்கு எவ்வகையினும் பொருந்தாது. இக்கருத்துடன் உரையிற் புகுத்தப்படும் மனுவறங்களைக் களைந்து குறட் கருத்தைக் கொள்ளுதல் வேண்டும்.” 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக