ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

திருக்குறள் -சிறப்புரை :969


திருக்குறள் -சிறப்புரை :969
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.--- ௯௬௯
கடுங்குளிர் நிலத்தில் வாழும் கவரிமா என்னும் விலங்கு, உறைபனியில் உறைந்துபோகாமல் உடல்முழுதும் நிறைந்த மயிர், உயிர் காக்கும். அவ்விலங்கின் மயிர் நீங்குமேயானால் பனியில் உறைந்து உயிர் போகும் அதுபோல் மானத்தை உயிராகப் போற்றி வாழ்பவர்கள் மானம்கெடும் நிலைவந்தால்  உயிரை மாய்த்துக்கொள்வர்.
(கவரி மா--- ”யாக்” என்னும் எருமை இனத்தைச் சார்ந்த ஒருவகை விலங்கு)
“ கடமா தொலைச்சிய கானுறை வேங்கை
இடம் வீழ்ந்தது உண்ணாது இறக்கும் – இடமுடைய
வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்
மானம் அழுங்க வரின்.” ---நாலடியார்.
காட்டில் இருக்கின்ற புலியானது தான் வேட்டையாடிய காட்டுப் பசு இடப்பக்கம் வீழ்ந்தால் அதனை உண்ணாது இறந்துவிடும். அதுபோல் மானமுள்ளவர்கள் அகன்ற இடத்தையுடைய  வானுலகமே (சுவர்க்கம்) கைவரப்பெறினும் மானம் கெடும் நிலைவந்தால் அந்த உயர்ந்தோர் உலகத்தையும் விரும்பமாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக