மெய்ப்பொருள் காண்பது அறிவு -46
உலகாயதம்
அல்லது பொருள்முதல் வாதம்
உலகத் தத்துவங்கள் அனைத்தையும் இருவகையாகப்
பிரிக்கலாம். ஒன்று – பொருள்முதல் வாதம் ; மற்றொன்று கருத்துமுதல் வாதம். இவற்றையே
உலகாயதம் ஆன்மீகவாதம் என்றும் கூறலாம். இவையிரண்டும் நேர் முரணான கண்ணோட்டங்கள்.
எது முதலில் தோன்றியது..? எது பிரபஞ்ச
இயக்கத்திற்கு அடிப்படையாகவுள்ளது..?
பொருள்தான் என்று கூறும் தத்துவம் பொருள்முதல்
வாதம் ; பொருள் அல்லாத ஆன்மா போன்ற சக்திகளென்று கூறும் தத்துவங்கள் கருத்துமுதல் வாதம்.
தென்னாட்டில் வழங்கிவந்த தத்துவங்களில் மிகவும் தொன்மை வாய்ந்தது உலகாயதம் என்று தென்னாட்டுத் தத்துவங்களை ஆராய்ந்த தட்சிண நாராயண சாஸ்திரி கூறுகிறார். சக்கரவர்த்தி நயினாரும் அவ்வாறே கூறுகிறார். அவர்கள் அத்தகைய முடிவிற்கு வருவதற்குரிய சான்றுகள் சமஸ்கிருத நூற் சான்றுகளே. தமிழ் இலக்கியச் சான்றுகளை அவர்கள் ஆராயவில்லை. தென்னிந்திய இலக்கியங்களில் தமிழைத் தவிரப் பிறமொழி இலக்கியங்களின் தொன்மை கி.பி. 10 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதில்லை. தமிழ் இலக்கியங்களில் ‘சங்க இலக்கியங்கள்’ கி.மு. 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு முடியவுள்ள காலத்தில் எழுதப்பட்டவை. எனவே அந்நூல்களிலும் அதைத் தொடர்ந்து கி.பி. 5ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட சில நூற்றாண்டுகளில் தோன்றிய சமண பெளத்த நூல்களிலும் உலகாயதத் தத்துவ கருத்துகளைத் தேடிக் கண்டுபிடிக்கலாம். – நா. வானமாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக