வியாழன், 23 ஆகஸ்ட், 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -60

மெய்ப்பொருள் காண்பது அறிவு -60
சில…..சொல்…!
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.—திருக்குறள்.
மாசற்ற சில சொல்லல் தேற்றாதவர்; பல சொல்லக் காமுறுவர்.

கண்ணகியைச் ‘சின்மொழி அரிவை’ என்றார் இளங்கோவடிகள். ‘யார் கொலோ இச் சொல்லின் செல்வன்’ என்று அனுமனை வியந்து போற்றுவார் கம்பர்.

‘சில மொழிகளுள் பல அறிவு நலங்கள் தெளிவாக ஒளி வீசி எவ்வழியும் செவ்வையாய் மிளிர்கின்றன. ‘ Man of few words are the best men’ – சில சொல்வோரே சிறந்த மனிதர் என்கிறார் சேக்சுபியர்.’

‘சில்லெழுத்தினாலே பொருளடங்கக் காலத்தாற்
சொல்லுக செவ்வி யறிந்து.’

‘படிறும் பயனிலவும் பட்டி யுரையும்
வசையும் புறனும் உரையாரே யென்றும்
அசையாத உள்ளத்தவர்.’ –ஆசாரக்கோவை.
( படிறு- வஞ்சனை சொல்; பட்டி உரை – நாவடக்கம் இல்லாத சொல் ; வசை – பழிச்சொல் ; புறம் – புறங்கூறல்.)

” உயர்ந்த குறிக்கோள், உறுதியான திடச் சித்தம், தடுத்து நிறுத்த முடியாத மன வேகம் – நாவினால் பேசப்படுகிறது; கண்களின் வழி ஒளிர்கின்றது ; ஒவ்வொரு விவரத்தின் மீதும் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சி வேகத்துடன் முன்னேற உந்துகிறது ; குறிக்கோளை நோக்கி நேராக முன்னோக்கித் தள்ளுகிறது…இது இதுதான் வாய்மை; சரளம் . இதுவே செயல்; மாவீரம் நிறைந்த புடம் போட்ட தெய்வத்தன்மை வாய்ந்த செயல்.” – டேல் கார்னகி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக