சனி, 23 மே, 2015

புறநானூறு - பொன்மொழிகள்---பகுதி -1

                         புறநானூறு - பொன்மொழிகள்
பகுதி -1
நிலம் பெயரினும் நின்சொல் பெயரல்
                                                                                      இரும்பிடர்த் தலையார், புறநா. 3 : 14  
நிலமே பிறழினும் நின்  ஆணையாகிய சொல் பிறழாது                                          

நின் நசை வேட்கையின் இரவலர் வருவர் அது
முன்னம் முகத்தின் உணர்ந்து அவர்
இன்மை தீர்த்தல் வன்மையானே
                                                                      இரும்பிடர்த் தலையார், புறநா.3 : 24 - 26 
 வேந்தே ! இரவலர்தம் மனக் கருத்தை முகக் குறிப்பினாலே உணர்ந்து  அவர்தம் வறுமையைத் தீர்க்கும் வல்லமை உடையவன்  என்பதால்  நின்னைக் காணும் விருப்பத்துடன் இரவலர் வருவர்.
                                                                              
பிறர் பழி கூறுவோர் மொழி தேறலையே
                                                                              ஊன்பொதி பசுங்குடையார்,புறநா. 10 :  2
 பிறரைக் குறை கூறுவார்தம் சொற்களை உண்மையெனக் கொள்ள மாட்டாய்.
                                                                                                
அமிழ்து அட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை
                                                              ஊன்பொதி பசுங்குடையார்,புறநா. 10 : 7,8
அமிழ்தினும் இனிய உணவை வரும் விருந்தினர்க்கு அளவின்றி வழங்கும் குற்றமற்ற மனை வாழ்க்கை.
                                                                                                                                                                                                             
நசை தர வந்தோர் நசை பிறக்கு ஒழிய
வசை பட வாழ்ந்தோர் பலர் கொல்
                                                                     நெட்டிமையார்,புறநா.15 : 15,16
பெரும ! ஆவலால் வெற்றி பெற விழைந்த பகைவர் நின்னை எதிர்த்துவெற்றி பெறமுடியாமல் பழிஎய்தி இகழ்ச்சியுடன் உயிர் வாழ்வாராயினர். அவ்வாறு உயிர் வாழ்பவர் பலரோ ?
                                                                                                             

உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே
                                                                       குடபுலவியனார்,புறநா.18 :  21 - 23
உணவு எனப்படுவது நிலத்துடன் நீரும் ஆகும். நிலத்தையும் நீரையும் ஒன்று சேர்த்தவர் இவ்வுலகில் உடலையும் உயிரையும் கூட்டிப் படைத்தவர் ஆவர்.
                                                                                                                           

நீரின்று  அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
                                                                     குடபுலவியனார்,புறநா.18 : 18,19
நீரின்றி அமையாத உடலுக்கு  உணவே முதன்மை ;  உடலுக்கு உணவு கொடுத்தோர் உயிரைக் கொத்தவராவர்.
                                                                                                                                
                             .

நிலம் நெளி மருங்கில் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம இவண் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே
                                                              குடபுலவியனார்,புறநா.18 : 28-30
நிலம் குழிந்த இடங்கள் தோறும் நீர் நிலை பெருகச் செய்தல் வேண்டும். அவ்வாறு நிலத்துடன் நீரைக் கூட்டியோர்  உலகம் உள்ளவரை தம் பெயரை நிறுத்திய புகழை அடைவர். அவ்வாறு செய்யாதவர் இவ்வுலகோடு தம்பெயரைச் சேர்த்த புகழை அடையார்.
                                                                                                                  
புதுப் புள் வரினும் பழம் புள் போகினும்
விதுப்புறவு அறியா ஏமக் காப்பினை
                                         குறுங்கோழியூர் கிழார்,புறநா.20 : 18,19
புதிய பறவை வந்தாலும் பழைய பறவை அவ்விடம் விட்டு அகன்றாலும் அத்தகைய தீய குறிகளால் மன நடுக்கமுறாத காவலை உடையவனே.
                                                                                                                           

திருவில் அல்லது கொலைவில் அறியார்
நாஞ்சில் அல்லது படையும் அறியார்
                                                       குறுங்கோழியூர் கிழார்,புறநா.20 : 10,11
மழைவளம் தரும் வானவில்லைத் தவிர கொலை செய்யும் போர்வில்லினைஅறியார்; உழுபடைக் கருவியாகிய கலப்பையைத் தவிர வேறு  கொலைப்படைக் கருவி ஒன்றனையும் அறியார்.
                                                                                                                 
நிற்பாடிய அலங்கு செந்நாப்
பிறர் இசை நுவலாமை
ஓம்பாது ஈயும் ஆற்றல் எம் கோ
                                                   குறுங்கோழியூர் கிழார்,புறநா.22 : 31- 33
நின்னைப் பாடிப் பரவிய செவ்விய நாக்கு, பின்னும் பிறருடைய புகழைப் பாடாதவாறு செல்வத்தை வழங்கும் எம் அரசனே.                                                                                                       

புலவர் பாடும் புகழ் உடையோர் விசும்பின்
வலவன் ஏவா வான ஊர்தி
எய்துப என்ப தம் செய்வினை முடித்து ...
                                          உறையூர் முதுகண்ணன் சாத்தனார்,புறநா.27 : 7 – 9
புலவரால் பாடப்பெறும் புகழுடையோர் வலவனால் இயக்கப்படாது இயங்கும் வானவூர்தியினைத் தாம் செய்யும் நல்ல செயல்களை முடித்தபின் அடைவர் என்பர் அறிவுடையோர்.
                                                                                                                         
நல்ல செயல்களைச் செய்து முடித்தோர் புலவரால் பாடப்பெறும் புகழுடையோர் ஆவர். அவர்கள் வலவனால் இயக்கப்படாத வானவூர்தியினை அடைவர் என்பர் அறிவுடையோர்.             

அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும் பெரும நின் செல்வம்
ஆற்றாமை நிற் போற்றாமையே
                                உறையூர் முதுகண்ணன் சாத்தனார்,புறநா.28 : 15 – 17
நீ வழங்கும் செல்வம் அறம், பொருள், இன்பம் என்ற மூன்றையும் ஆற்றுதற்கு உதவும். அவ்வாறு ஆற்றாதார் நின்னைப் போற்றாதாரே.
                                                                                                    

நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
இல்லை என்போர்க்கு இனன் ஆகிலியர்
                                     உறையூர் முதுகண்ணன் சாத்தனார்,புறநா.29 : 11,12
நல்வினையால் வரும்  நன்மையும் தீவினையால் வரும்  தீமையும் இல்லை என்போர்க்கு நட்புடையவன் ஆகாமல் விளங்குக.                                                                                                      

சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல
                                                               கோவூர் கிழார்,புறநா. 31 : 1, 2
சிறப்பினை உடைய பொருளும் இன்பமும் அறவழிப்பட்டுச் சிறப்புறுதல் போல.
                                                                                             
நிலம் புடை பெயர்வதாயினும் ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென
அறம் பாடிற்றே ஆயிழை கணவ
                                                         ஆலத்தூர் கிழார்,புறநா.34 : 5 – 7
நிலம் தலைகீழாகப் பெயர்ந்தாலும் ஒருவன் செய்த நன்றியை மறந்தவர்க்கு அத்தீவினையிலிருந்து உய்வதற்கு வழியில்லை என அற நூல் கூறும்.                                                                                        

மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்
காவலர்ப் பழிக்கும் இக்கண் அகன் ஞாலம்
                                                    வெள்ளைக்குடி நாகனார்,புறநா.35 : 27 – 29
மழை பெய்யாவிட்டாலும் விளைவு இல்லாவிட்டாலும் மக்களின் இயற்கைக்கு முரணானசெயற்பாடுகளால் சீரழிவுகள் தோன்றினாலும்  இவ்வுலகம் அரசரைப்  பழித்துரைக்கும்.
                                                                                                                        

முறை வேண்டு  பொழுதில் பதன் எளியோர் ஈண்டு
உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோரே  
                                                    வெள்ளைக்குடி நாகனார்,புறநா.35 : 15, 16
 நீதி  வேண்டிய காலத்துக் காட்சிக்கு எளியராய் வந்து நீதி வழங்கும் மன்னர், மழைத் துளியை  விரும்பியவர்க்குப் பெருமழை கிடைத்து போன்றவர்.                                                                                                             

ஒரு பிடி படியும் சீறிடம்
எழு களிறு புரக்கும் நாடு கிழவோயே
                                                               ஆவூர் மூலங்கிழார்,புறநா.40 : 10, 11
பெண் யானை ஒன்று தங்கும் அளவுடைய இடத்தில்  ஏழு ஆண்யானைகளைக் காக்கின்ற உணவு வளமுடைய நாட்டிற்கு உரியவனே.                                                                                                   
மலையின் இழிந்து மாக்கடல் நோக்கி
நிலவரை இழிதரும் பல் யாறு போல
புலவர் எல்லாம் நின் நோக்கினரே
                                                                 இடைக்காடனார்,புறநா.42 : 19 – 21
மலையினின்று கீழிறங்கிக் கடலை நோக்கிப் பாயும் ஆறுகள் போலப் புலவர்கள் நின்னையே நோக்கிக் கூடுவர்.
                                                                                                   
தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல்
                                                           தாமப்பல் கண்ணனார்,புறநா. 43 : 18
தமக்குத் தீமை  செய்தோரைப் பொறுத்தருளும் தலை                                                                                                 

பால் இல் குழவி அலறவும் மகளிர்
பூ இல் வறுந்தலை முடிப்பவும் நீர் இல்
வினை புனை நல் இல் இனைகூஉக் கேட்பவும்
இன்னாது அம்ம ஈங்கு இனிது இருத்தல்
                                                    கோவூர் கிழார், புறநா. 44 : 69
பால் இல்லாது குழந்தைகள் அழுகின்றன; மகளிர் பூவின்றி வெறுங் கூந்தலை முடிக்கின்றனர்; நல்ல வேலைப்பாடு அமைந்த வீட்டிலுள்ளோர் நீர் இல்லாது வருந்திக் கூவுகின்றனர். இனியும் இங்கே தங்கியிருத்தல் கொடுமையன்றோ?
                                                                                        
நின்ன கண்ணியும் ஆர்மிடைந்தன்றே நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந்தன்றே
ஒருவீர் தோற்பினும் தோற்ப நும் குடியே
                                                                 கோவூர் கிழார், புறநா. 45 : 3 – 5
சோழவேந்தே ! உன்னுடைய மாலையும் ஆத்தி மலர்களால் தொடுக்கப்பட்டது; உன்னுடன் போரிடுவோன் மாலையும் ஆத்தி மலர்களால் தொடுக்கப்பட்டது. உம்முள் எவர் ஒருவர் தோற்றாலும் தோற்பவர் உம் சோழர் குடியினரே.
                                                                                                                       
வரிசைக்கு வருந்தும் இப்  பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீது அறிந்தன்றோ இன்றே
                                                               கோவூர் கிழார், புறநா. 47 : 6, 7
தம்மை ஆதரிப்பாரை நோக்கி வருந்தி வாழும் பரிசில் வாழ்க்கை உடைய புலவர்கள், பிறருக்குத் தீங்கு செய்ய அறிவாரா எனில், அறியார்.

இவண் இசை உடையோர்க்கு அல்லது அவணது
உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
                                                                மோசிகீரனார், புறநா. 50 : 14,15
            இந்த அகன்ற உலகத்தில் பரந்த புகழுடையார்க்கு அல்லாது பிறர்க்கு உயர்நிலை உலகை அடைதல் இயலாது.
                                                                                                                       கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக