திங்கள், 11 மே, 2015

ஆளி-யாளி-சிங்கம்

ஆளி- யானையை வீழ்த்தும், ஆளி-யாளி-சிங்கம்
இடம்படுபு அறியா வலம்படு வேட்டத்து
வாள்வரி நடுங்கப் புகல் வந்து ஆளி
உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி
வெண்கோடு புய்க்கும் ....
                                           நக்கண்ணையார், அகம். 252 : 1-4
அடித்து வீழ்த்தும் விலங்குகள் இடப்பக்கத்தே விழுவதை ஒருபோதும் அறியாத வெற்றியை உடைய வேட்டைக்குச் செல்லும் வாள் போன்ற
வரிகளையுடைய புலியானது நடுங்குமாறு, ஆளியானது பாய்ந்து வந்து உயர்ந்த நெற்றியினையுடைய யானையின் புள்ளி பொருந்திய முகத்தைத் தாக்கி, அதன் வெண்ணிறத் தந்தத்தினைப் பறித்தெடுக்கும்.

 ஆளி நன்மான் அணங்குடை யொருத்தல்
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப
ஏந்தல் வெண்கோடு வாங்கிக் குருகு அருந்தும்
அஞ்சுவரத் தகுந ஆங்கண்......
                            மதுரை இளங்கெளசிகனார், அகநா. 381 : 1 – 4
ஆளியாகிய நல்ல விலங்கினது வருத்துதலையுடைய ஏறு, வலியுடைய யானையின் தலைவனான களிறு வருந்த, அதன் நிமிர்ந்த வெள்ளிய கோட்டினைப் பறித்து, குருத்தினைத் தின்னும் அச்சம் தரும் அச்சுரத்திடத்தே.
ஆளி- சிங்கத்தில் ஒருவகை. ஒருத்தல் – ஆண் ஆளி. “ ஆளியானது யானைக் கொம்பைப் பறித்து உண்ணும் என்பது “ முலை முதல் துறந்த அன்றே மூரித்தாள் ஆளி யானைத் தலை நிலம் புரள வேண்டுகோடு உண்டதே போன்று” சீவக.: 2554: 1-2.
அமரா=வெறுத்த, கமம்=நிறைவு, கணம்=கூட்டம். திலகம்=பொட்டு
வினைநவில் குதிரை = போர்த்தொழில் பயிற்சி பெற்ற குதிரை –அகம் 254
மாக விசும்பு =   அகம் 253. மாகமாவது பூமிக்கும் சுவர்க்கத்துக்கும் நடு (பரி 1: 4 ) பரிமேலழகர்

ஆளியென்பது சிங்கமன்று. ஆளி நன்மானைப் பற்றிச் சங்கப் பாடற் செய்தி வட நூலிலிருந்து வந்த செய்தியாகவே தெரிகின்றது. வடநூலில் இத்தகைய கற்பனையான புராணச் செய்திகள் மிகுந்து காணப்படுகின்றன. ஆளியை அத்தியாளி என்று பிற்கால நூல்கள் கூறும். நிகண்டுகளில் யானை யாளியென்றும் இதையே அறுகு, பூட்கை யென்றும் கூறப்பட்டுள்ளது. யானையினுடைய கையும் புலியினுடைய உடலும் அல்லது சிங்கத்தினுடைய உருவும் கலந்த விலங்காகக் கூறுவர். இத்தகைய விலங்கு இயற்கையில் கிடையாது. பி.எல். சாமி, சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம்,ப. 274.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக