பழமொழி நானூறு
– பொன்மொழிகள்
முன்றுறை அரையனார் - - PAZAMOZINAANURU
ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை அந்நாடு
வேற்று நாடு ஆகா தமவேயாம் ...
4
: 1 – 3
ஆன்ற கல்வி அறிவுடையார்
தம் சொல் செல்லாத நாடு நான்கு திசைகளிலும் இல்லை. அந்நாடுகள் வேற்று நாடுகள் ஆகா ; தம்முடைய
நாடுகளேயாம்.
புலமிக்கவரைப் புலமை தெரிதல்
புலமிக்கவர்க்கே புலனாம் …
7
: 1, 2
அறிவு மிக்கவரது அறிவினை ஆராய்ந்தறிதல் அறிவுமிக்கவர்க்கே உளதாம்.
கல்வியான் ஆய
கழிநுட்பம் கல்லார்முன்
சொல்லிய நல்லவும் தீயவாம் ...
14 : 1, 2
கல்வியறிவு மிக்கோர் கல்லாதாரிடத்துச் சொல்லிய நல்லனவும்
தீயனவாம்.
இழுக்கத்தின் மிக்க இழிவில்லை இல்லை
ஒழுக்கத்தின் மிக்க உயர்வு
15 : 3, 4
இழுக்கத்தைவிட மிக்கதோர் இழிவும் இல்லை ; ஒழுக்கத்தைவிட மிக்கதோர் உயர்வும் இல்லை.
அறிவினால் மாட்சி ஒன்றில்லா ஒருவன்
பிறிதினால் மாண்டது எவனாம் …
26 : 1, 2
அறிவினால் பெருமை பெறாத ஒருவன் பிற செல்வம், குலம் முதலானவற்றால் பெருமை பெறுதல் இல்லை.
எள்ளற்க யார் வாயின் நல்லுரையை ...
35
: 3
கீழானவர் சொன்னாலும் நல்லுரையாயின் அதனை இகழாதே.
நீர்த் தகவு இல்லார் நிரம்பாமைத் தம் நலியின்
கூர்த்து அவரைத் தாம் நலிதல் கோள் அன்றால் சான்றவர்க்கு
49
: 1, 2
நற்குணமும் நல்லறிவும் இல்லார் தம்மை வருத்தினாராயின் அங்ஙனமே தாமும் அவரை வருத்துதல் சான்றோர்க்குக்
கோட்பாடன்று.
ஆறாச் சினத்தன் அறிவிலன் மற்றவனை
மாறி ஒழுகல் தலை என்ப ...
52 : 1, 2
ஆறாத கோபத்தை உடையவன் அறிவுகெட்டவன் ஆவான் , அவனோடு சேராது
விலகி இருத்தல் நல்லது என்று நல்லார் சொல்வர்.
கறுத்தாற்றித் தம்மைக் கடிய செய்தாரைப்
பொறுத்தாற்றிச் சேறல் புகழ் ...
59
: 1, 2
தமக்குத் தீமை
செய்தாரையும் பொறுத்து அவருக்கு நன்மை செய்தல் புகழுக்கு உரிய செயலாம்.
மடங்கிப் பசிப்பினும் மாண்புடையாளர்
தொடங்கிப் பிறர் உடைமை மேவார் ...
78
: 1, 2
சான்றோர், தம்முடைய உடம்பு ஒடுங்கும்படி பசியால் வாடினும் பிறர் பொருளைக் கொள்ள விரும்பார்.
ஒன்றாய் விடினும் உயர்ந்தார் படும் குற்றம்
குன்றின் மேல் இட்ட விளக்கு
முன்றுறை
அரையனார், பழ. 80 : 3, 4
உயர்ந்தோர் ஒரே ஒரு குற்றம் புரியினும் அது குன்றின் மேல்
இட்ட விளக்குப் போல் பல்லோர் பார்வையில் படும்.
இனநலம் நன்குடையவாயினும் என்றும்
மனநலம் ஆகாவாம் கீழ்
90
: 3, 4
கீழ் மக்கள்,
இனத்தின் நன்மை நன்கு உடையவராயினும்
மனத்தால் நல்லராக மாட்டார்.
கரப்புடை உள்ளம் கனற்றுபவரே
செருப்பிடைப்பட்ட பரல்
120
: 3, 4
பிறரை வருத்தும் வஞ்சக மனம்கொண்டோர் செருப்பில்
அகப்பட்ட பருக்கைக் கல் ஒப்பர்.
தாம் நட்டு ஒழுகுதற்குத் தக்கார் எனல் வேண்டா
யார் நட்பே ஆயினும் நட்புக்கொளல் வேண்டும்
128 : 1, 2
தாம் பிறரோடு நட்புக் கொள்வதற்கு ஒருவர் தக்கவரா என்று
ஆராயவேண்டுவதில்லை ; எவராயினும் அவரோடு நட்புக் கொள்ளுதல் வேண்டும்.
ஒருவர் பொறை இருவர் நட்பு
132
: 4
ஒருவர் பொறுமை
இருவர்க்கும் நட்பாம்
கெட்டார்க்கு நட்டாரோ இல்
134 : 4
வாழ்ந்து கெட்டவர்க்கு நட்புடையார் என்று ஒருவரும் இல்லை.
கணையிலும் கூரியவாம் கண்
143
: 4
மனத்துள் மறைத்தவற்றைக் கண்கள் அம்பினும் கூர்மையாய்
உட்புகுந்து காணவல்லனவாம்.
மகன் அறிவு தந்தை அறிவு
145 : 4
மகன் அறிவு அவன்
தந்தை அறிவு போன்றிருக்கும்.
முயலவோ வேண்டா முனிவரை யானும்
இயல்பினர் என்பது இனத்தால் அறிக
148
: 1, 2
முனிவரேயானாலும் அவர் இத்தகையவர் என்பதை அவர் கூடிய
இனத்தாலே அறிந்து கொள்ளலாம்.
கற்றது ஒன்று இன்றி விடினும் கருமத்தை
அற்றி முடிப்பான் அறிவுடையான் ...
150 : 1, 2
சிறிதும் கல்வியறிவு இல்லாவிட்டாலும் செயல்திறனில் சிறந்து
விளங்குவான் அறிவுடையான்.
எங்கண் ஒன்று இல்லை எமர் இல்லை என்று ஒருவர்
தம் கண் அழிவு தாம் செய்யற்க ...
156
: 1, 2
என்னிடத்தில் ஒரு பொருளும் இல்லை; எனக்கென்று உறவினர்களும்
இல்லை; என்று ஒருவர் மனம் தளர்ந்து
தனக்குத்தானே அழிவைத் தேடிக்கொள்ளும் செயலைச் செய்யாதிருக்க
முழுதுடன் முன்னே வகுத்தவன் என்று
தொழுது இருந்த கண்ணே ஒழியுமோ அல்லல்
160
: 1, 2
முதுலகத்தையும் முன்னே படைத்தவன் நாம் அடைகின்ற
துன்பத்தையும் படைத்தான் என்று எண்ணி அவனைத் தொழுது முயற்சி இன்றி இருந்தால்
அல்லல் நீங்குமோ ?
ஓடுக ஊர் ஓடும் ஆறு
195 : 4
ஊரோடு ஒத்து வாழ்.
அருள் உடையாரும் மற்று அல்லாதவரும்
பொருள் உடையாரைப் புகழாதார் இல்லை
199
: 1, 2
அருளுடைய நல்லார் முதல்
அருள் அல்லாதார் வரை பொருள் உடையோரைப் புகழ்ந்து போற்றாதார் இல்லை.
வருவாய் சிறிது எனினும் வைகலும் ஈண்டின்
பெருவாய்த்தாய் நிற்கும் பெரிதும் ...
201 : 1, 2
வருமானம் கொஞ்சமானாலும் நாள்தோறும் சிறிதளவே
சேர்த்துவந்தால் செல்வம் பெரிதாய் மிகும்.
அல்லது செய்வார் அரும் பொருள் ஆக்கத்தை
நல்லது செய்வார் நயப்பவோ ...
213
: 1, 2
அடாதுசெய்வார் ஈட்டிய பொருள் பெரிதாயினும் அப்பொருளை நல்லறம் செய்வோர் விரும்புவாரோ ?
விரும்பமாட்டார்.
அறிவினை ஊழே அடும்
228
: 4
நல்லறிவினை முன்செய்த வினயே கெடுக்கும்
நனி அஞ்சத்தக்க அவை வந்தால் தம்கண்
துனி அஞ்சார் செய்வது உணர்வார் ...
240
: 1, 2
செய்யத்தக்கதைச் செய்யும் துணிவு உடையார் அஞ்சத்தக்க வினைகள் வந்தாலும் அஞ்சார்.
ஒள்ளியன் அல்லான்மேல் வைத்தல் குரங்கின் கைக்
கொள்ளி கொடுத்து விடல்
255
: 3, 4
ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்ந்த முதன்மைப் பதவியைக்
கொடுத்தல் குரங்கின் கையில் கொள்ளிக் கட்டையைக் கொடுத்தலோடு ஒக்கும்.
கல்வி அகலமும் கட்டுரை வாய்பாடும்
கொல்சின வேந்தன் அவை காட்டும் ...
258 : 1, 2
பகைவரைக் கொன்றொழிக்கும் ஆற்றல் வாய்ந்த அரசனது கல்வியின்
பெருமையையும் சொல்வன்மையையும் அவன் வீற்றிருக்கும் அவையே காட்டும்.
சீர்த்தகு மன்னர் சிறந்த அனைத்தும் கெட்டாலும்
நேர்த்து உரைத்து எள்ளார் நிலைநோக்கி ...
277
: 1, 2
சீர் மிகுந்த அரசர் தம் சீர்மைகள் எல்லாம்
கெட்டவிடத்தும் அவரை இகழ்ந்துரையார்.
ஆற்றப் பெரியார் பகை வேண்டிக் கொள்ளற்க
291
: 1
வலிமையால் தருக்கிச் சான்றோரைப் பகைத்துக்கொள்ள விரும்பாமல்
இருப்பாயாக..
நாணின்றி ஆகாது பெண்மை நயமிகு
ஊணின்றி ஆகாது உயிர் வாழ்க்கை ...
327
: 1, 2
பெண்மை நாணம் என்னும் குணமின்றிச் சிறவாது ; உயிர் வாழ்க்கை
சுவைமிக்க உணவின்றி அமையாது.
மிக்க சிறப்பினர் ஆயினும் தாயர்க்கு
மக்களுள் பக்கமோ வேறு
332
: 3, 4
தம் புதல்வர்கள் எல்லாரும் சிறந்தவர் என்றாலும்
அவர்களிடத்துக் காட்டும் தாயின் அன்பில் வேறுபாடு உளதாம்.
மையார் இருங்கூந்தல் பைந்தொடி எக்காலும்
செய்யார் எனினும் தமர் செய்வர் பெய்யுமாம்
பெய்யாது எனினும் மழை
351 : 2 –
4
கரிய அடர்ந்த கூந்தலையும் பொன் வளையலையும் உடையாய் ! மழை,
பருவத்தில் பெய்யவில்லையானாலும் பிறகேனும் பெய்யும் அதுபோல எப்பொழுதும்
எதுவும் செய்யார் என்று எண்ணியிருந்தாலும் உறவினரே தமக்குச் செய்ய வல்லார்.
தோற்றம் அரிதாய மக்கள் பிறப்பினால்
ஆற்றும் துணையும் அறம் செய்க ...
365 : 1, 2
அரிதாகிய மக்கள் பிறப்பைப் பெற்றதனால் இயன்றவரை அறம் செய்க.
ஏற்றார்கட்கு எல்லாம் இசை நிற்பத் தாமுடைய
மாற்றார் கொடுத்திருப்ப வள்ளன்மை ...
. 382
: 1, 2
தமது புகழ் உலகத்தில் நிலைத்திருக்கும்படி தம்மிடத்து உள்ள
பொருள்களைஎல்லாம் இரந்து வந்தவர்க்கு இல்லையென்று கூறாமல் வழங்குவதே
வள்ளன்மையாகும்.
முற்றும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக