செவ்வாய், 26 மே, 2015

ஐங்குறுநூறு – பொன்மொழிகள் – பகுதி - 2

ஐங்குறுநூறு – பொன்மொழிகள் – பகுதி - 2


தட்டைத் தீயின் ஊர் அலர் எழவே
                                                                      ஓதலாந்தையார், ஐங்குறு. 340 : 4
மூங்கில் காட்டில் பற்றிய தீயைப் போல ஊரில் அலர் எழுந்தது.                                                                                          

நீட விடுமோ மற்றே நீடு நினைந்து
துடைத்தொறும் துடைத்தொறும் கலங்கி
உடைதெழு வெள்ளம் ஆகிய கண்ணே
                                                                    ஓதலாந்தையார், ஐங்குறு. 358 : 3, 4
தலைவியே! நீ துடைக்கத் துடைக்க நில்லாது அணையை உடைத்துக் கொண்டு பெருகும் வெள்ளம் போலக் கண்ணீர் பெருகிற்றே, நின் கண்ணீர் அவரை மேலும் அவர் சென்ற நாட்டில் தங்கவிடுமோ ?  (விரைந்துவருவார் )

அற நெறி இதுவெனத் தெளிந்த என்
பிறை நுதல் குறுமகள் போகிய சுரனே
                                                                   ஓதலாந்தையார், ஐங்குறு. 371 : 4, 5
 காதலனுடன் உடன்போய்க்  கற்பு நெறி நிற்றலே அறநெறி எனத் தெளிந்து, அழகும் இளமையும் உடைய என் மகள் இக் காட்டு வழியே சென்றனளே.
ஒண்சுடர்ப் பாண்டில் செஞ்சுடர் போல
மனைக்கு விளக்கு ஆயினள் ...
                                                                      பேயனார், ஐங்குறு. 405 : 1, 2
 நம் மகள், ஒளிவிட்டு மின்னும் பாண்டில் விளக்கில் ஏற்றப்பட்ட செந்நிறம் கொண்ட சுடர் போலத் தலைவன் வீட்டுக்கு விளக்காக விளங்குகிறாள்.


உயிர் கலந்து ஒன்றிய செயிர்தீர் கேண்மை
                                                                           பேயனார், ஐங்குறு  419 : 1
உயிரோடு உயிர் கலந்தால் ஒத்த குற்றமற்ற நட்பு
                                                                                 
கார் நயந்து எய்தும் முல்லை அவர்
தேர் நயந்து உறையும் என் மாமைக் கவினே
                                                                         பேயனார், ஐங்குறு  454 : 3, 4
தோழீ ! கார்காலம் நயந்து மலரும் முல்லை அதுபோல் பிரிந்து சென்ற காதலரின் தேர் வரவு, என் மாந்தளிர் மேனியழகை மலரச் செய்யும்.
                                                       
துறந்து அமைகல்லார் காதலர்
மறந்து அமைகல்லாது என் மடம்கெழு நெஞ்சே
                                                                           பேயனார், ஐங்குறு  457 : 3, 4
  தோழீ  ! காதலர் நம்மைப் பிரிந்து இருத்தலை ஆற்றார்; என் மட நெஞ்சம் அவரை மறந்து ஒருபோதும் வாழாது.
                                                                                                

கொடியன் ஆயினும் ஆக
அவனே தோழி என் உயிர் காவலனே
                                                                             மிகைப் பாட்டு, ஐங்குறு.
தோழீ ! என் துணைவன் கொடியனே ஆனாலும்  அவனே என் உயிர்க் காவலன் ஆவான் .
                                          முற்றும்                                         


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக