ஞாயிறு, 31 மே, 2015

நாலடியார் நன்மொழிகள் – சமணமுனிவர்கள் – பகுதி -3

நாலடியார் நன்மொழிகள் – சமணமுனிவர்கள் – பகுதி -3


எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரம் காழ் தெங்கு ஆகா
தென்னாட்டவரும் சுவர்கம் புகுதலால்
தன் அற்றான் ஆகும் மறுமை வடதிசையும்
கொன் ஆளர்  சாலப் பலர்
                                                                சமண முனிவர்கள், நாலடி. 243
எந்த நிலத்திலே எந்த விதையைப் போட்டாலும் போட்ட விதை தான் முளைக்கும் காஞ்சிரத்தின் விதை தென்னங் கன்றாக முளைக்காது. தென்னாட்டில் உள்ளவர்களும்  தமது நற்செயல்களால் சுவர்க்கம் அடைகின்றனர்.ஒவ்வொருவருக்கும் தமது செய்கையினாலே மறுமைப் பயன் உண்டாகும். வட திசையிலும் வீணர்கள் மிகப் பலர் உள்ளனர்.

 மனத்து அனையர் மக்கள் என்பார்
                                                                                                  245: 4
 மக்கள் தங்கள் மனத்தின் இயல்புக்கேற்பவே இருப்பர்.

உணர உணரும் உணர்வு உடையாரைப்
புணரப் புணருமாம் இன்பம்
                                                                                                           247: 1, 2
நூலின் பொருளை உணரத்தக்க வகையிலே உணர்ந்துகொள்ளும் அறிவுள்ளவரை நண்பராகச் சேர்த்துக் கொள்வதனால்தான் இன்பம் உண்டாகும்

கருமமும்  உள்படாப் போகமும் துவ்வாத்
தருமமும் தக்கார்க்கே செய்யா – ஒரு நிலையே
முட்டின்றி மூன்றும் முடியுமேல் அஃது என்ப
பட்டினம் பெற்ற கலம்         
                                                                                                250
தொழில் செய்து ,பொருள் சேர்த்து, அதனால் இன்பம் துய்த்து, கல்வி அறிவு ஒழுக்கத்தால் சிறந்தவர்களுக்குத் தருமம் செய்து, ஒரே நிலையில் உறுதியாக நின்று இம்மூன்று செயல்களையும்இடைவிடாமல் செய்பவர் துறைமுகத்தை அடைந்த கப்பலைப் போலப் பிறவிப் பயனைப் பெற்றவராவார்.

பன்றிக் கூழ்ப் பத்தரில் தேமா வடித்து அற்றால்
நன்று அறியா மாந்தர்க்கு அறத்தாறு உரைக்குங்கால்
                                                                                                     257: 1, 2
நன்மை இன்னதென்று அறியாத மூடர்களுக்கு அறநெறிகளைப்பற்றி உரைப்பது பன்றிக்குக் கூழ்  ஊற்றும் தொட்டியில்  மாம்பழச்சாற்றை ஊற்றியது போல் ஆகும்.
                                                                                            
செல்வம் பெரிதுடையர் ஆயினும் கீழ்களை
நள்ளார் அறிவுடையார்
                                                       சமண முனிவர்கள், நாலடி. 262: 3, 4
கீழ் மக்கள் எவ்வளவு செல்வம் உடையவராயிருந்தாலும் அறிவுள்ளவர்கள் அவர்களுடன் நட்பு கொள்ளமாட்டார்கள்.

ஓதியும் ஓதார் உணர்விலார் ஓதாதும்
ஓதி அனையார் உணர்வுடையார் ...
                                                                                    270: 1, 2
பகுத்தறிவு இல்லாதவர் படித்திருந்தாலும் படிக்காதவர்களே; பகுத்தறிவு உள்ளவர்கள் படிக்காதிருந்தாலும் படித்தவர்களுக்கு ஒப்பாவர்.

எத்துணை யானும் இயைந்த அளவினால்
சிற்றறம் செய்தார் தலைப்படுவர் ...
                                                                                 272: 1, 2
எவ்வளவு சிறிதாயினும் தம்மால் முடிந்த அளவு  அறம் செய்தவர்கள் உயர்வடைவார்கள்.

மறுமை அறியாதார் ஆக்கத்தின் சான்றோர்
கழி நல்குரவே தலை
                                                                                     275: 3, 4
மறுமை இன்பம் பற்றி அறியாத கீழ் மக்களின் செல்வத்தைக் காட்டிலும் சான்றோர்களின் வறுமை உயர்ந்தது.

வழங்காத செல்வரின் நல்கூர்ந்தார் உய்ந்தார்
                                                                                . 277: 1
வறியோர்க்கு ஒன்றும் ஈயாத செல்வரைவிட வறியவர்களே துன்பமின்றி வாழ்கின்றவர்.

ஒத்த குடிப்பிறந்தக் கண்ணும் ஒன்று இல்லாதார்
செத்த பிணத்தின் கடை                                             
                                                                                                    281: 3, 4
அறநூல்களுக்கு ஒத்த ஒழுக்கமுள்ள உயர்ந்த குடியிலே பிறந்திருந்தபோதிலும் ஒரு பொருளும் இல்லாதவர்  செத்த பிணத்தைக் காட்டிலும் இழிவாக எண்ணப்படுவர்.

இலாஅஅர்க்கு இல்லைத் தமர்
                                                                                      283: 4
பொருள் இல்லாதவர்க்கு உறவினர்களும் இல்லை.

பாவமும் ஏனைப் பழியும் படவருவ
சாயினும் சான்றவர் செய்கலார் ...
                                                                                      295: 1, 2
மானமுள்ளவர்கள் செத்துப்போவதாயிருந்தாலும் மானம் கெடவரும் பழி, ,பாவச் செயல்களைச் செய்யமாட்டார்கள்.

மெல்லியர் ஆகித்தம் மேலாயர் செய்தது
சொல்லாதிருப்பது நாண்
                                                                                            299: 3, 4
வறுமையுற்று வாழ்ந்த காலத்துத் தமக்கு உதவி செய்தாரைப்பற்றிப் பிறருக்குச் சொல்லாமல் மறைப்பது நாணத்தகும் செயலாகும்.

வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்
மானம் அழுங்க வரின்
                                                                                        . 300: 3, 4
உள்ளத்தில் உறுதி படைத்தவர்கள்  வானுலகம் கிடைப்பதாயினும் மானம் கெடவரும் இழிவான செயல்களைச் செய்ய விரும்ப மாட்டார்கள்.

செய்யீரோ என்னானும் என்னும் சொற்கு இன்னாதே
பையத்தான் செல்லும் நெறி
                                                                                                     309: 3, 4
ஏதாவது உதவி செய்ய மாட்டீரோ என்று இரந்து கேட்கின்ற சொல்லைக் காட்டிலும்  வறுமையுடன் வாழ்வது அவ்வளவு துன்பம் உடையதாகுமோ? ஆகாது என்பதாம்.

கைஞ்ஞானம் கொண்டு ஒழுகும் கார் அறிவாளர்முன்
சொல் ஞானம் சோர விடல்
                                                                                                   311: 3, 4
அற்ப அறிவோடு இருள்நிறைந்த மனத்தினராய் வாழும் அறிவாளர் முன்னே நல்லது சொல்லவேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடுக .

போற்றும் புலவரும் வேறே பொருள் தெரிந்து
தேற்றும் புலவரும் வேற்
                                                                                                        . 318 3, 4
புத்தங்களைப் பாதுகாத்து வைக்கும் புலவர் வேறு; அவற்றைப் படித்துப் பொருள் உணர்ந்து உள்ளத்தைத் தெளிய வைத்துக்கொள்ளும் புலவர் வேறு.

நல் அறிவாளர் நவின்ற நூல் தேற்றாதார்
புல் அறிவு தாம் அறிவது இல்
                                                                                                320 3, 4
சிறந்த அறிவுள்ளவர்கள், பெரியோர்கள் சொல்லிய நூலின் பொருள்களைத் தெளிவாக அறியாதவர்களின் கீழ்த்தரமான அறிவைப் பொருட்படுத்த மாட்டார்கள்.

அவ்வியம் இல்லார் அறத்தாறு உரைக்குங்கால்
செவ்வியர் அல்லார் செவிகொடுத்தும் கேட்கலார்
                                                                                                          322: 1, 2
குற்றமற்றவர்கள்  அறநெறியைப்பற்றி உரைக்கும் பொழுது நற்பண்பில்லாத மூடர்கள் அவ்வுரையைக் காதுகொடுத்துக் கேட்க மாட்டார்கள்.

ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ்நாளைப்
போக்குவர் புல் அறிவினார்
                                                                               327: 3, 4
அறிவற்றவர்கள் செல்வத்திலே மயங்கித் தம் வாழ்நாளை வீணாகக் கழிப்பார்கள்.
      
கோத்து இன்னா கூறி உரையாக்கால் பேதைக்கு
நாத்தின்னும் நல்ல கனைத்து
                                                                                            335: 3, 4
பிறரைக் குறை கூறாவிட்டால் பேதையின் நாக்கில் தினவு ஏற்பட்டு  அரிப்பு எடுத்துவிடும்.

கற்றனவும் கண் அகன்று சாயலும் இற்பிறப்பும்
பக்கத்தார் பாராட்டப் பாடு எய்தும் ...
                                                                                    340: 1, 2
கற்ற கல்வி பற்றியும் சிறந்த ஒழுக்கம் பற்றியும் குடிப் பிறப்பின் பெருமை பற்றியும்  மற்றவர்கள் பாராட்டிப் பேசுவதே பெருமை உடையதாம்.

முந்திரி மேல் காணி மிகுவதேல் கீழ் தன்னை
இந்திரனாக எண்ணிவிடும்
                                                                                             346: 3, 4
முந்திரியின் அளவுக்கு மேல் காணி அளவு செல்வம் மிகுந்து விடுமாயின் கீழ்மைக் குணம் படைத்தவன் தன்னை இந்திரன் போன்று எல்லாச் செல்வங்களும் பெற்றவனாக நினைத்துக் கொள்வான்.                     

எய்திய செல்வத்தார் ஆயினும் கீழ்களைச்
செய் தொழிலால் காணப்படும்
                                                                                              350: 3, 4
எவ்வளவுதான் செல்வம் பெற்றவராயிருந்தாலும்  செய்யும் தொழில்களைக் கொண்டு  அவர்கள் கீழ் மக்களே என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
புதுப் பெருக்கம் போலத் தம் பெண் நீர்மை காட்டி
மதித்து இறப்பர் மற்றை யவர்
                                                                                                      354: 3, 4
விலை மாதர்கள் புது வெள்ளம் போலத் தமது பெண்ணழகைக் காட்டிப் பிறரை மயக்கி அவர்தம் செல்வத்தைக் கவர்ந்துகொண்டு பிரிந்து சென்றுவிடுவார்கள்.

செய்த நன்று உள்ளுவர் சான்றோர் கயம் தன்னை
வைதை உள்ளிவிடும்
                                                                                                   356: 3, 4
சான்றோர்கள் பிறர் செய்த நன்மையை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பார்கள் ; கயவர்கள் பிறர் தம்மை வைததை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பார்கள்.
                                                                                              
ஏட்டைப் பருவத்தும் இல்பிறந்தார் செய்வன
மோட்டு இடத்தும் செய்யார் முழுமக்கள்
                                                                                               358: 1, 2
நல்ல குடியில் பிறந்தவர்கள் வறுமையுற்ற காலத்திலும் நல்ல செயல்களையே செய்வார்கள் ; மூடர்களாகிய கயவர்கள் உயர்ந்த செல்வ நிலையில் இருக்கும் காலத்திலும் நல்ல செயல்களைச் செய்ய மாட்டார்கள்.

மாண்ட மனையாளை இல்லாதான் இல்லகம்
காண்டற்கு அரியது ஓர் காடு
                                                                                                    361: 3, 4
விரும்பத்தக்க பண்புகளை உடைய நல்ல மனைவியைப் பெற்றில்லாதவனுடைய வீடு கண்கொண்டு பார்க்க முடியாத ஒரு பாழும் காடாகும்.

கல்லாக் கழிப்பர் தலையாயார்
                                                                                                       366: 1
கல்வி கற்பதிலேயே காலத்தைக் கழிப்பவர்கள்  உயர்ந்தவர்கள்.

மகன் அறிவு தந்தை அறிவு
                                                                                                  . 367: 4
மகன் பெற்றிருக்கும் அறிவு  அவனுடைய தந்தைக்குள்ள அறிவாகும்

கடைக்கால் தலைக்கண்ணது ஆகிக் குடைக்கால் போல்
கீழ் மேலாய் நிற்கும் உலகு
                                                                                               368: 3, 4
விரித்துப்பிடித்திருக்கும் குடையின் காம்பைப் போல மேலோர்கள் கீழோர்   ஆவதும் கீழோர்கள் மேலோர் ஆவதும் இவ்வுலக இயற்கை.

மலங்கு அன்ன செய்கை மகளிர் தோள் சேர்வார்
விலங்கு அன்ன வெள் அறிவினர்
                                                                                              375: 3, 4
மலங்கு மீனைப் போல் ஏமாற்றும் செய்கை உடைய வேசை மகளிரின் தோள்களைத் தழுவுவோர் விலங்கு போல் அறிவற்றவராவர்.

பெறு நசையால் பின் நிற்பார் இன்மையே பேணும்
நறு நுதலாள் நன்மைத் துணை
                                                                                         . 381: 3, 4
.
இவளைக் காதலியாகப் பெற வேண்டும் என்னும் ஆசையால் தன் பின்னே சுற்றுகின்றவர்கள் இல்லாத முறையிலே தன்னைக் காத்துக்கொள்கின்ற  ஒருத்தியே நல்ல வாழ்க்கைத் துணைவியாவாள்.

பெற்றான் ஒருவன் பெரும் குதிரை அந்நிலையே
கற்றான் அஃது ஊரும் ஆறு
                                                                                         398: 3, 4
ஒருவன் ஒரு குதிரையைப் பெற்றானாயின் அப்பொழுதே அதில் ஏறிச் செல்லும் வழியையும் கற்றுக் கொண்டவனாவான்.



                    THE END

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக