வெள்ளி, 29 மே, 2015

இனியவை நாற்பது – பொன்மொழிகள்

இனியவை நாற்பது – பொன்மொழிகள்
பூதஞ்சேந்தனார் 
(நூற் குறிப்பு - 41 செவ்விலக்கிய நூல்கள்  - கட்டுரையில் காண்க.)


பிச்சை புக்காயினும் கற்றல் மிக இனிதே
                                                                                   1:1
பிச்சை எடுத்து உண்டாயினும்  கற்றல்  மிகவும் இனிது.

ஊனைத் தின்று ஊனைப் பெருக்காமை முன் இனிதே
                                                                                                  4:2
ஓர் உயிரின் தசையைத் தின்று தன்னுடைய  உடம்பை வளர்க்காமை மிகவும் நன்று.
                                                                                      
தந்தையே ஆயினும் தான் அடங்கான் ஆகு மேல்
கொண்டு  அடையான் ஆதல் இனிது
                                                                                      7: 3, 4
தந்தையே ஆனாலும் அடக்கமில்லாதவனாயின் அவன் சொல்லைக் கேட்டு நடவாமல் இருப்பது நன்று.

எள் துணையானும் இரவாது தான் ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது
                                                                                          16: 3, 4
எள் அளவாயினும் யாசிக்காது தான் பிறர்க்கு ஈதல் எல்லாவகையிலும் மிக இனிது.

எஞ்சா விழுச்சீர் இரு முது மக்களைக்
கண்டு எழுதல் காலை இனிது
                                                                                             18: 3, 4
குறையாத மிக்க சிறப்பினை உடைய தாய் தந்தையரைக் காலையில் கண்டு தொழுதல் இனிது.


நட்டார்ப் புறங்கூறான் வாழ்தல் நனி இனிதே
                                                                                       . 19: 1
 நண்பரைப் பற்றிப் புறங்கூறாது வாழ்தல் மிகவும் நன்று.


மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க்கு எல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது
                                                                                         20: 3, 4
அகன்ற இடத்தை  உடைய இவ்வுலகத்து வாழும் உயிர்கள் எல்லாம்  உரிமைப்பட வாழ்வது இனிது.

வருவாய் அறிந்து வழங்கல் இனிதே
                                                                                                   22: 1
தமக்கு வருகின்ற வருவாய் அளவினை அறிந்து பிறர்க்கு ஈதல் இனிதே.

வெல்வது வேண்டி வெகுளாதான் நோன்பு இனிதே
                                                                                              . 24: 1
வெற்றிபெற வேண்டின் எவரிடத்தும் சினம் கொள்ளா உறுதி மிக இனிது.

நில்லாத காட்சி நிறையில் மனிதரைப்
புல்லா விடுதல் இனிது
                                                                                                  25: 3, 4
தெளிவில்லாத அறிவினை உடையாரையும் நன்னடத்தை இல்லாதாரையும் சேராது விலகி இருத்தல் இனிது.

எளியர் இவர் என்று இகழ்ந்து உரையாராகி
 ஒளிபட வாழ்தல் இனிது
                                                                       29: 3, 4
   ஏழை எளியவர்களை இகழ்ந்து பேசாது புகழ் உண்டாகும்படி வாழ்வது இனிது.
                                                                                                           


அன்று அறிவார் யார் என்று அடைக்கலம் வெளவாத
நன்றியின் நன்கு இனியது இல்
                                                                                                   30: 3, 4
ஒருவருக்கும் தெரியாது என்று கருதி, அடைக்கலமாகப் பெற்ற பொருளைத் தனதாக்கிக் கொள்ள நினையாத நன்றியைப் போல இனியது ஒன்று இல்லை.

உற்ற பேராசை கருதி அறன் ஒரூஉம்
ஒற்கம் இலாமை இனிது
                                                                                               39: 3, 4
பேராசை கொண்டு அறவழியினின்று நீங்குதற்கு ஏதுவாகிய மனத்தளர்ச்சி இல்லாதிருத்தல் இனிது.

பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய
கற்றலில் காழ் இனியது இல்.
                                                                                                   40: 3, 4
பற்பல நாளும் வீணே கழியாது பயனுள்ள நூல்களைக் கற்பதைப்போல் இனிமை உடைய செயல் வேறு எதுவும் இல்லை.
முற்றும்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக