புறநானூறு –பொன்மொழிகள் – பகுதி
-2
உடையோர் போல இடையின்று குறுகி
செம்மல் நாள் அவை அண்ணாந்து புகுதல்
எம் அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே
கோனாட்டு எறிச்சிலூர்
மாடலன் மதுரைக் குமரன், புறநா. 54 : 2 – 4
எம் மன்னனின்
ஊருக்கு உரியோர் போலக் காலம் பாராது, பலமுறை அணுகி, அவனுடைய அவைக் களத்தே தலை நிமிர்ந்து புகுதல் எம்போன்ற இரவலர்க்கு எளிது
ஞாயிற்று அன்ன
வெந்திறல் ஆண்மையும்
திங்கள் அன்ன தன்
பெருஞ் சாயலும்
வானத்து அன்ன வண்மையும்
மூன்றும்
உடையை ஆகி …
மதுரை மருதன் இளநாகனார், புறநா. 55 : 13 –16
ஞாயிற்றைப்
போல வெம்மையான ஆற்றலுடைய வீரமும் திங்களைப் போலக் குளிர்ந்த மென்மையும் வான் மழையைப்
போலக் கொடைச் சிறப்பும் உடையவனாகுக.
காதல் நெஞ்சின்
நும் இடை புகற்கு அலமரும்
ஏதில் மாக்கள்
பொதுமொழி கொள்ளாது
இன்றே போல்க நும்
புணர்ச்சி …
காவிரிப் பூம்பட்டினத்துக்
காரிக் கண்ணனார்,புறநா.58 : 26 – 28
அன்பு
பொருந்திய மனங்களுடைய உம்மிடையே புகுந்து உம்மைப் பிரிப்பதற்கு அயலார்
திரிவர்; அவர்தம் பொய்ம்மொழிகளைக் கேளாமல்
இன்று போல் உங்கள் நட்பு என்றும் நிலைப்பதாகுக.
ஞாயிறு அனையை நின்
பகைவர்க்கு
திங்கள் அனையை
எம்மனோர்க்கே
மதுரைக்
கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், புறநா.59 : 6, 7
உன்
பகைவர்க்கு வெப்பம் நீங்காது தோன்றும் ஞாயிறு போன்றவன்; எம் போன்று நின் அருள்
பெற்றோர்க்குத் திங்களைப் போன்றவன்.
இரு மருந்து விளைக்கும்
நல் நாட்டுப் பொருநன்
கோவூர் கிழார், புறநா. 70 : 9
தண்ணீரும் உணவுமாகிய இருமருந்தைப் பசிப்பணிக்குத் தரும்
நல்ல நாட்டிற்குத் தலைவனாகிய கிள்ளிவளவன்.
செல்வை ஆயின் செல்வை
ஆகுவை
விறகு ஒய் மாக்கள்
பொன் பெற்றன்ன
கோவூர் கிழார், புறநா. 70 : 16,
17
விறகு வெட்டச்
சென்றோர் பொன் பெற்றார் போல
நீ கிள்ளிவளவனிடம்
செல்வாயானால் செல்வம் உடையவன் ஆவாய்
ஓங்கிய சிறப்பின்
உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன்
தலைவனாக
உலகமொடு நிலைஇய
பலர் புகழ் சிறப்பின்
புலவர் பாடாது
வரைக என் நிலவரை
தலையலங்கானத்துச் செருவென்ற
நெடுஞ்செழியன், புறநா.72 : 13 – 16
பகையை அழித்து என் மக்களை நான் காக்காவிடில்
சிறந்த தலைமையும் மேம்பட்ட புலமையும் உடைய மாங்குடி மருதன் தலைவனாக, உலகத்தில்
வாழும் தகுதி உடையோர் பலராலும் பாராட்டப்பட்ட சிறப்பினை உடைய புலவர் பலரும் என்
நிலத்தைப் பாடாது நீங்கும் நிலை அடைவேனாகுக.
துஞ்சு புலி இடறிய
சிதடன் போல
உய்ந்தனன் பெயர்தலோ
அரிதே …
தலையலங்கானத்துச்
செருவென்ற நெடுஞ்செழியன், புறநா. 73 : 7, 8
“ என்னை எதிர்ப்போர் உறங்கும் புலியைக் காலால்
இடறிய பார்வையற்றவன் போல உயிர் பிழைத்தல் அரிது.”
குழவி இறப்பினும்
ஊன் தடி பிறப்பினும்
ஆள் அன்று என்று
வாளின் தப்பார்
கணைக்கால் இரும்பொறை, புறநா.74
: 1, 2
குழந்தை
இறந்து பிறந்தாலும் தசைப்பிண்டமாகப் பிறந்தாலும் அவற்றை ஆள் அன்று என்று கருதார்;
அவற்றையும் வாளால் வடுப்படுத்தி அடக்கம் செய்யும் முறைமையில் தவறார்.
குடி புரவு இரக்கும்
கூர் இல் ஆண்மைச்
சிறியோன் பெறின்
அது சிறந்தன்று மன்னே
சோழன் நலங்கிள்ளி, புறநா. 75 :
4, 5
குடிமக்களிடம்
வரிவேண்டி இரக்கும் சிறுமை படைத்த உள்ளம் உடையவனும் மேம்பாடில்லாத ஆண்மை உடையவனுமான ஒருவனுக்கு அரசு உரிமை கிடைத்தால்
அது அவனுக்குத் தாங்க இயலாத சுமையாக விளங்கும்.
ஒருவனை ஒருவன்
அடுதலும் தொலைதலும்
புதுவது அன்று
இவ்வுலகத்து இயற்கை
இடைக்குன்றூர் கிழார், புறநா.76 : 1, 2
ஒருவனை ஒருவன்
பகைகொண்டு கொல்லுதலும் ஒருவனிடம் ஒருவன் தோற்றுப் போதலும் புதிதாக நடப்பதன்று அது
இவ்வுலகத்து இயல்பாகும்.
புலி சேர்ந்து
போகிய கல்லளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ
போர்க்களத்தானே
காவற் பெண்டு, புறநா.86 : 4 – 6
புலி இருந்து
பின் பெயர்ந்து சென்ற கற்குகை போல அவனைப் பெற்ற வயிறு இதுவே, அவனைப்
போர்க்களத்திலே காணலாம்.
சிறியிலை நெல்லித்
தீங்கனி குறியாது
ஆதல் நின் அகத்து
அடக்கி
சாதல் நீங்க எமக்கு
ஈந்தனையோ
ஒளவையார்,புறநா.
91 : 9 -11
அதியமான், பெறுவதற்கு அரிதான சிறிய இலையை உடைய நெல்லிக்கனியை அதன்
அரும் பயனை என்னிடம் கூறாமல் தன் மனத்து அடக்கி
எனக்கு இறப்பு வாராதிருக்க அளித்தனனே.
யாழொடும்
கொள்ளா பொழுதொடும் புணரா
பொருள்
அறிவாரா ஆயினிம் தந்தையர்க்கு
அருள் வந்தனவால்
புதல்வர்தம் மழலை
ஒளவையார்,புறநா. 92 : 1 – 3
மழலை மொழி, யாழோசை போல இசை இன்பம் தருவதில்லை; காலத்துடன்
பொருந்தி வருவதில்லை; பொருளும் அறிய இயலாது ஆயினும், தந்தையர்க்குத் தம் புதல்வர்
மழலையிடம் அருள் இருக்கும் ஆகவே இன்பமுடன் ஏற்பர்.
ஒரு நாள் செல்லலம்
இரு நாள் செல்லலம்
பல நாள் பயின்று
பலரொடு செல்லினும்
தலை நாள் போன்ற
விருப்பினன் மாதோ
ஒளவையார்,புறநா.101 : 1-3
ஒருநாள் அல்ல
இரண்டுநாள் அல்ல பல நாளும் பலரொடும் மீண்டும் மீண்டும் சென்றாலும் முதல் நாள்
போலவே அன்பு காட்டும் பண்புடையவன்.
அலத்தல் காலை ஆயினும்
புரத்தல் வல்லன்
வாழ்க அவன் தாளே
ஒளவையார்,புறநா. 103 : 10,11
உலகமே
வறுமையுற்ற காலமாயினும் உயிர்களைப் பாதுகாக்கும் வல்லமை உடையவன் அவன். அவன் தாள்
வாழ்க.
நல்லவும்
தீயவும் அல்ல குவி இணர்ப்
புல் இலை
எருக்கம் ஆயினும் உடையவை
கடவுள் பேணேம்
என்னா ...
கபிலர், புறநா. 106 : 1-3
நல்லனவென்றும்
தீயனவென்றும் அல்லாத குவிந்த பூங்கொத்தினையும் புல்லிய இலையினையும் உடைய எருக்கம்
பூவாயினும் ஒருவன் சூட்டுவதைக் கடவுள் ஏற்க மாட்டோம் என்று கூறுவதில்லை.
பாரி ஒருவனும்
அல்லன்
மாரியும்
உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே
கபிலர், புறநா. 107 : 3,4
இவ்வுலகைப்
பாதுகாப்பதற்குப் பாரி ஒருவன் மட்டுமல்லன்; மழையும் உண்டு.
பொது நோக்கு
ஒழிமதி புலவர் மாட்டே
கபிலர், புறநா. 121 : 7
புலவர்தம்
புலமைத் திறம் கருதாது எல்லாரையும் பொதுவாக நோக்குதலைத் தவிர்ப்பாயாக.
வடமீன்
புரையும் கற்பின் மடமொழி
அரிவை தோள்
அளவு அல்லதை
நினது என இலை
நீ பெருமிதத்தையே
கபிலர், புறநா. 122 : 8-10
வட திசைக்கண் தோன்றும் விண்மீனை( நட்சத்திரம் ) ஒக்கும்
கற்பினையும் மென்மொழியினையும் உடைய நின் மனைவியின் தோள் மட்டுமே நினக்கு உரியது.
நின் உரிமைப் பொருள் என்று சொல்ல வேறு ஒன்றும் இல்லை என்ற போதும் நீ பெருஞ்
செருக்குடன் விளங்குகின்றாயே.
இம்மை செய்தது
மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை வணிகன்
ஆஅய் அல்லன்
ஏணிச்சேரி
முடமோசியார்,புறநா.134 : 1,2
ஆய் என்னும் மன்னன் இப்பிறப்பில் செய்தது
மறுப்பிறப்புக்கு உதவும் என்று கருதி அறச் செயல் செய்யும் வாணிகன் அல்லன்.
எமக்கு ஈவோர்
பிறர்க்கு ஈவோர்
பிறர்க்கு
ஈவோர் தமக்கு ஈப ...
துறையூர் ஓடைக்கிழார்,புறநா. 136 : 20,21
வறுமையுற்ற
எங்களுக்குக் கொடுப்போர் பயன் கருதாது பிறர்க்குக் கொடுத்தலாகிய தன்மையால் வள்ளல்
ஆவர். வறுமை உற்றார்க்குக் கொடுக்காமல் பிறர்க்குக் கொடுப்போர் பயன் கருதி
வழங்குதலால் அவர் தமக்கே வழங்கிக் கொண்டவராவர்.
வாழ்தல்
வேண்டிப்
பொய் கூறேன்
மெய் கூறுவல்
மருதன் இளநாகனார்,புறநா.139 : 5,6
உயிர் வாழ்தலை
விரும்பிப் பொய் சொல்லேன்; உண்மையே
கூறுவேன்.
பீடு இல்
மன்னர்ப் புகழ்ச்சி வேண்டி
செய்யா கூறிக்
கிளத்தல்
எய்யாதாகின்று
எம் சிறு செந்நாவே
வன்பரணர், புறநா. 148 : 5-7
பெருமை இல்லாத மன்னரைப்பாடி,
அவர் செய்யாதனவற்றைச் செய்ததாகப் புகழ்ந்து கூறுதலை அறியாதது எம்முடைய சிறிய
செவ்விய நாக்கு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக