திங்கள், 18 மே, 2015

மணிமேகலை – அற (றி)வுரைகள்

மணிமேகலை – அற (றி)வுரைகள்
பட்டி மண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின்
                                                                      மணி.1 : 61
சொற்போர் மண்டபத்தில் திறனறிந்து ஏறுங்கள்.

பற்றா மக்கள் தம்முடன் ஆயினும்
செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின்
                                                                       மணி.1 : 62, 63
பகைவரே ஆயினும் அவர்களுடன் பகையும் கலகமும் கொள்ளாது விலகுங்கள்.
                                                                                                  
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க
                                                                                    மணி.1 : 70, 71
 நாட்டில் பசியும் நோயும் பகையும் நீங்கி மழையும் வளமும் பெருகட்டும்.
                                                                                               
காணா உயிர்க்கும் கையற்று ஏங்கி
                                                                                         மணி. 3 : 89
 கண்ணில் தெரியாத உயிர்களின் துன்பத்திற்கும்  வருத்தமுற்று இரங்குக.
                                                                                                     
பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிழைத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்றது
                                                                             மணி. 16 : 86, 87
பிறத்தலும் இறத்தலும்  தூங்குதலும் விழித்தலும் போன்றது.
                                                                                                 
மண் திணிந்த ஞாலத்து மழை வளம் தரூஉம்
பெண்டிராயின் பிறர் நெஞ்சு புகாஅர்
                                                                           மணி. 22 : 45, 46
இந்நிலவுலகத்திலே மழை வளத்தினைத் தருகின்ற கற்புடைய மகளிராயின் அவர், பிறரது நெஞ்சில் புகுந்து இச்சை விளைவிக்க மாட்டார்.
                                                                                                    
                                                                               
பத்தினியில்லோர் பல அறம் செய்யினும்
புத்தேள் உலகம் புகாஅர் ...
                                                                            மணி. 22 : 117, 118
கற்பொழுக்கம் இல்லாதார் பலதிறப்பட்ட அறங்களைச் செய்தாலும் துறக்க உலகம் புகமாட்டார்.
                                                                                                   
இளமையும் நில்லா யாக்கையும் நில்லா
வளவிய வான் பெரும் செல்வமும் நில்லா
புத்தேள் உலகமும் புதல்வரும் தாரார்
மிக்க அறமே விழுத்துணையாவது
                                                                            மணி. 22 : 135 – 138
இளமையும் யாக்கையும் நிலையில்லாதது ; வள மிக்க பெருஞ்செல்வமும் நிலைத்து நிற்காது; துறக்க உலகினைப் புதல்வர்களும் கொண்டுவந்து தந்துவிட மாட்டார்கள்
ஆதலின் அறம் ஒன்றே உயிருக்குச் சிறந்ததோர் துணயாகும்.
                                                                                                        -

எவ்வுயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும்
                                                                                         மணி. 23 : 78
எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டல் வேண்டும்.

 கற்ற கல்வி அன்றால் காரிகை
செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர்
                                                                            மணி. 23 : 129, 130
காரிகையே ! கற்ற கல்வி ஒன்றே மெய்யுணர்வு ஆகாது ; உள்ளத்தில் வெகுளி தோன்றாமல் அடக்கியவர் எவரோ அவரே முற்றவும் அறிவுடையோர் ஆவர்.
                                                                                         
பொய்யாற்று ஒழுக்கும் பொருள் எனக் கொண்டோர்
கையாற்று அவலம் கடந்ததும் உண்டோ
                                                                 மணி. 23 : 124, 125
பொய்யான நெறிநின்று ஒழுகும் ஒழுக்கமே செயலாகக் கொண்டவர்கள்  வாழ்வில் துன்பத்தினின்றும் நீங்கி உய்ந்தனர் என்பதும் இவ்வுலகில் உண்டோ ?
                                                                                                
கள்ளும் பொய்யும் காமமும் கொலையும்
உள்ளக் களவும் என்று உரவோர் துறந்தவை
                                                                                மணி. 24 : 77, 78
கள் உண்ணல், பொய்யுரை, இழிகாமம், கொலை, களவு ஆகிய ஐவகைக் குற்றங்களும் அறிவுடையோரால் நீக்கப்பட்டவை.
                                                                                                           -
பிறந்தார் மூத்தார் பிணி நோய் உற்றார்
இறந்தார் என்கை இயல்பே
                                                                               மணி. 25 : 103, 104
இவ்வுலகில் பிறந்தார் அனைவரும் மூப்புற்றார், நோயுற்றார், இறந்தார் என்று சொல்லப்படுவது இயல்பே.
                                                                                           


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக