சனி, 30 மே, 2015

ஐந்திணை ஐம்பது – மாறன் பொறையனார்.

 ஐந்திணை ஐம்பது – மாறன் பொறையனார்.
 ( நூற்குறிப்பு – 41 செவ்விலக்கிய நூலகள் கட்டுரையில் காண்க )
கார் நீர்மை கொண்ட கலிவானம் காண் தொறும்
பீர் நீர்மை கொண்டன தோள்                                      
                                                                            1: 3, 4
 தோழீ ! மழைக் காலத்தில் நீர் நிரம்பிய மேகக் கூட்டத்தை யான் காணும் பொழுதெல்லாம் என் தோள்கள் பீர்க்கம் பூவைப் போல் பசலைபெற்று விளங்கின.

மாமலை நாட மடமொழி தன் கேண்மை
நீ மறவல்  நெஞ்சத்துக் கொண்டு
                                                                              18: 3, 4
மலை நாட்டிற்குத் தலைவனே ! இனிய மொழி பேசும் தலைவியின் நட்பை நின் மனத்தில்கொண்டு  அவளை மறவாது வாழ்வாயாக.

பாண பரிந்துரைக்க வேண்டுமோ – மாண
அறிவது அறியும் அறிவினார் கேண்மை
நெறியே உரையாதோ மற்று
                                                                                23:  2 – 4
பாணனே ! அறிய வேண்டியதை அறியும் அறிவினை உடையார் கொள்ளும் நட்பினை  அவர்தம் அன்புடைமையே தெரிவிக்காதோ ? தெரிவிக்கும் என்பதாம்.

விம்மி உயிர்க்கும் விளங்கிழையாள் ஆற்றுமோ
நம்மிற் பிரிந்த விடத்து
                                                                                      39: 3 – 4
நெஞ்சே ! பொருள் தேடிப் பிரிந்த நம்மை நினைத்துத் துன்பமிகுதியால் வருந்தி நெட்டுயிர்க்கும் தலைவி ஆற்றியிருப்பாளோ ? அதனை , நீ சிறிதும் நினைந்தாய் இல்லை.
மிக்க மிகுபுகழ் தாங்குபவோ தற்சேர்ந்தார்
ஒற்கம் கடைப்பிடியாதார்
                                                                                              48: 3 – 4
தமக்கு நெருங்கிய நட்புடையோர்தம் துன்பத்தினை நீக்க முன்வராதார் புகழ் பெற்றுச் சிறந்து விளங்கவல்லவராவரோ? ஆகார் என்பதாம்.
முற்றும்

ஐந்திணை எழுபது – மூவாதியார்
( நூற்குறிப்பு – 41 செவ்விலக்கிய நூலகள் கட்டுரையில் காண்க )
வரையக நாடனும் வந்தான் மற்று அன்னை
அலையும் அலை போயிற்று இன்று
                                                                                               3: 3, 4
தலைவியே !  மலை நாட்டிற்குரிய தலைவன்  உன்னை மணம் முடிக்க வந்தான்  அதனால், அன்னை மணம் புரிய வேண்டி வருத்துகின்ற வருத்தமானது இன்றே நீங்கியது.

சான்றவர் கேண்மை சிதைவின்றாய் ஊன்றி
வலியாகிப் பின்னும் பயக்கும் ...
                                                                                             5: 1, 2
நற்பண்புகள் நிறைந்த பெரியோர் நட்பானது  என்றும் நிலைபெற்று அமைவதோடு, அடைந்தவர்க்கு வன்மைமிக்க துணையாகி, மேலும் பல நன்மைகளை உண்டாக்கும்.

மெல்லியல் கண்ணோட்டம் இன்றிப் பொருட்கு இவர்ந்து
நில்லாத உள்ளத்தவர்
                                                                                                    . 28: 3, 4
 தோழீ ! கருணையாகிய இரக்கப் பண்பு இன்றித் தலைவன் பொருள் தேடுவதில் விருப்புற்றுச் சென்றாராயின், நம்மிடத்தில் நிலையான  அன்பு இல்லாதவரேயாவார்.

பேதையான் என்று உணரும் நெஞ்சம் இனிது உண்மை
ஊதியம் அன்றோ உயிர்க்கு
                                                                                                       55: 3, 4

தோழீ ! வஞ்சகம் அறியா மனத்தினை, நன்றாக நாம் கொண்டிருத்தல் நம் வாழ்க்கைக்கு நன்மையை உண்டாக்கும் நல்வழியன்றோ?

நெறி நீர் இருங்கழிச் சேர்ப்பன் அகன்ற
நெறி அறிதி மீன்தபு நீ
                                                                                                       66: 3, 4
நாரையே ! கடற்கரைத் தலைவன்  என்னைவிட்டுப் பிரிந்து சென்றதை  நீ நன்கு அறிவாய் ஆதலின் நீயே  எனக்குற்ற சான்றாய் இருக்கிறாய்.
                        முற்றும்


திணைமொழி ஐம்பது – கண்ணன் சேந்தனார்
( நூற்குறிப்பு – 41 செவ்விலக்கிய நூலகள் கட்டுரையில் காண்க )
மணிமலை நாடன் வருவான்கொல் தோழி
கணி நிறை வேங்கை மலர்ந்து வண்டு ஆர்க்கும்
அணி நிற மாலைப் பொழுது
                                                                                            . 9: 2 – 4
கணியனைப் போல் நாள் சொல்லும்   வேங்கை மலர்கள் பூத்துக் குலுங்கவும் ;  அம் மலர்களில் வண்டுகள் ஒலிக்கவும் நீல மணி போலும் நிறததை உடைய அழகிய மாலைப் பொழுதில் நம்மை மகிழ்விக்கத் தலைவன் வருவானோ தோழி?   

பொருள் நசை உள்ளம் துரப்பத் துறந்தார்
வருநசை பார்க்கும் என் நெஞ்சு        
                                                                                                      .14: 3,  4
தோழீ ! பொருள் மீது கொண்ட விருப்பினாலே நம்மைத் துறந்து சென்ற தலைவர், காதலோடு கூடிய விருப்புடன் நம்மை  நாடி வருவார் என்று எதிர்பார்த்து நிற்கின்றது என் நெஞ்சு.  

காடு எலாம் கார் செய்து முல்லை அரும்பு ஈன
ஆறு எலாம் நுண் அறல் வார  அணி இழாய்
போதராய் காண்பாம் புறவு
                  கண்ணன் சேந்தனார், திணை.ஐம்.29: 2 – 4

தந்தாயும் நீயே தரவந்த நன்னலம்
கொண்டாயும் நீ ஆயக்கால்
                                                                                                     36 : 3,  4
தலைவனே !  நின் பிரிவால் வருந்தும் தலைவிக்குக் களவுக் காலத்தில் இன்பம் நல்கிப் பேரழகினைத் தந்தவனும் நீயே ; அவ்வாறு தநத நல்ல அழகினை இபொழுது எடுத்துக் கொண்டவனும் நீயே .
முற்றும்
திணைமாலை நூற்றைம்பது – கணிமேதாவியார்
 ( நூற்குறிப்பு – 41 செவ்விலக்கிய நூலகள் கட்டுரையில் காண்க )
கடாஅமால் யானை கடிந்தானை அல்லால்
தொடாஅவால் என் தோழி தோள்
                                                                                   . 14 : 3,  4
                                    
தாயே ! மதங்கொண்ட யானையிடமிருந்து காப்பாற்றிய  காளை போன்ற அத் தலைவனேயன்றி வேறு எவரையும் என்னுடைய தலைவியின் தோள்கள் தீண்டமாட்டா.

குறியா வரவு ஒழிந்து கோலநீர்ச் சேர்ப்ப
நெறியால் நீ கொள்வது நேர்
                                                                                                      50 : 3,  4
 
 தலைவ ! களவின்கண் முறையின்றி வருகின்ற நினது வருகையை ஒழித்து,  மணச் சடங்கு முறைப்படி,  தலைவியை மணந்துகொள்வதுதான் நினக்குத் தகுதியானதாகும்.

மாயவனும் தம்முனும்போல மறிகடலும்
கானலும் சேர் வெண்மணலும் காணாயோகானல்
இடையெலாம் ஞாழலும்  தாழையும் ஆர்ந்த
புடையெலாம் புன்னை புகன்று
                                 கணிமேதாவியார், திணை. நூற். 58
ஒருகை இரு மருப்பின் மும்மதமால் யானை
பருகு நீர் பைஞ்சுனையில் காணாது – அருகல்
வழி விலங்கி வீழும் வரை அத்தம் சென்றார்
அழிவிலர் ஆக அவர்
                                                        கணிமேதாவியார், திணை. நூற். 78
ஒரு கையினையும்  இரண்டு கொம்புகளையும் மூன்று மதங்களையும் கொண்ட பெரிய யானைகள் பசிய சுனையிடத்துக் குடிப்பதற்குத் தண்ணீர் காணாது  மேலும் நடக்க இயலாமல் தளர்ந்து வீழ்ந்து கிடக்கும் மலைகளை உடையது பாலை நிலம். அவ்வழியில் சென்ற தலைவன் எவ்வகை இடையூறுமின்றித் திரும்புவாராக.

ஆண் கடன் ஆம் ஆற்றை ஆயுங்கால் ஆடவர்க்குப்
பூண் கடனாப் போற்றிப் புரிந்தமையால் – பூண்கடனாச்
செய்பொருட்குச் செல்வரால் சின்மொழி ...
                                                                                            . 82 : 1 – 3
த்லைவியே ! ஆண் மக்களுக்குரிய கடமைகளை  ஆராயுங்கால்  நல்லோர் பலரும்  கூறியவாறு பொருள் தேடுதலே ஆண்மைக்கு அழகாம், அவ்வினையை ஆற்றுதற் பொருட்டே நும் காதலரும் செல்லவேண்டியவராவார், அவர் பிரிவால் நீ வருந்தாது இருப்பாயாக.

அருள் பொருள் ஆகாமை ஆக – அருளால்
வளமை கொணரும் வகையினான் மற்றோர்
இளமை கொணர இசை
                                                                                      85 : 2 – 4
 தலைவ !  அருளுடைமை பொருளாகாமை  ஆவதாயினும் ஆகட்டும் ; பொருளைக் கொணரும் வகைமை போல நின் அருளினாலே  தலைவிக்கு, வேறோர் இளமை கொணர்தற்கு  உடன்படுவாயாக.

பெரியார் பெருமை பெரிதே ...
                                                                                            110 : 1
சான்றோர்தம் பெருமைக் குணம் உண்மையில்  கொண்டாடத் தகுந்ததாகவே காணப்படும்.

இம்மையால் செய்ததை இம்மையே ஆம் போலும்
உம்மையே ஆம் என்பார் ஓரார் ...
                                                                                                      123 : 1,  2
ஒருவன்,  இப்பிறப்பின்கண் செய்த தீவினை இப்பிறப்பிலேயே அவனை அடைந்து பயன் கொடுக்கும் போலும் ;  இவற்றை நன்கு ஆராயாத அறிவிலிகளே மறுபிறப்பில்தான் அத்தீவினை பயன் கொடுக்கும் எனக் கூறுவார்கள்.

எண்ணுங்கால் மற்று இன்றி இவளொடு நேர் – எண்ணில்
கடல் வட்டத்து இல்லையால் கல் பெயர் சேராள்
அடல் வட்டத்து  ஆர் உளரேல் ஆம்
                                                                                           . 150 : 2 – 4
எண்ணிப்பார்த்தால் இவளுக்கு ஒப்பாக ஒருத்தியைக் கடலால் சூழப்பட்ட  இம்மண்ணுலகில் காண்பதற்கு  இல்லை. நடுகல்லினிடத்தே பெயர் சேரப் பெறாதவளாய் வெற்றி மிக்க மேலுலகத்தில் யாரேனும் இருப்பாராயின் இவளுக்கு நிகராவர்.
முற்றும்

சிறுபஞ்ச மூலம் – காரியாசான்
( நூற்குறிப்பு – 41 செவ்விலக்கிய நூலகள் கட்டுரையில் காண்க )
பொருளுடையான் கண்ணதே போகம் அறனும்
அருளுடையான் கண்ணதே ஆகும் ...
                                                                                     3 : 1, 2
உலக இன்பம், பொருள் உடையவர்களிடத்து உண்டாகும் ; நல்லொழுக்கம், இரக்கம் உள்ளவர்களிடத்து உள்ளதாகும்.

கற்புடைய பெண் அமிர்து கற்று அடங்கினான் அமிர்து
                                                                                                     4 : 1
 கற்புடைய பெண் தன் கணவனுக்கும் அமிர்தம் போல்வாள் ; அறிவு நூல்களைக் கற்று அவற்றின் வழி அடங்கி நிற்பவன் உலகத்தார்க்கு அமிர்தம் போல்வான்.

காத்துண்பான் காணான் பிணி
                                                                                         . 8 : 4
உடலுக்குப் பொருந்தாத உணவுகளை மறுத்து, நல்லன தெரிந்து உண்பவன் நோய்வாய்ப்படான்.                                                                       

பிழைத்தல் பொறுத்தல் பெருமை சிறுமை
                                                                                                16 : 1
பிறர் செய்த தவற்றைப் பொறுத்தல் பெருமை ; பிறர் செய்த தீமையை எண்ணிக்கொண்டிருத்தல் சிறுமை.

தேவரே கற்றவர் கல்லாதார் தேருங்கால்
பூதரே முன் பொருள் செய்யாதார் – ஆதரே
                                                                                      20 : 1, 2
கற்றவர் உயர்ந்தோர் ; கல்லாதார் பூதபசாசுகள் ;  இளமையிலேயே பொருள் தேடாதவர் அறிவிலார்.

விதையாமை நாறுவ வித்துள மேதைக்கு
உரையாமை செல்லும் உணர்வு
                                                                                          22 : 3, 4
பாத்தி கட்டி விதைக்காமலே முளைக்கிற விதைபோலப் பிறர் அறிவிக்காமலே அறிவுடையார்க்கு அறிவு தோன்றும்.

கொல்லாமை நன்று கொலை தீது எழுத்தினைக்
கல்லாமை தீது கதம் தீது ...
                                                                                     51 : 1, 2
ஓர் உயிரையும் கொல்லாமை நன்று ; கொலை தீது ; எழுத்தைக் கற்றுக்கொள்ளாமை தீது ;  பிறரை வெகுளல் தீது.

ஒன்றுபோல் உள்நெகிழ்ந்து ஈயின் சிறிது எனினும்
குன்றுபோல் கூடும் பயன்
                                                                                            65 : 3, 4
இரவலர்க்கு மனம் இரங்கிக் கொடுக்கும் பொருள் சிறிதாயினும்  அதனால் வரும் பயன் குன்று போல் மிகப் பெரிதாம்.

குளம் தொட்டுக் கோடு பதித்து வழிசீத்து
உளம் தொட்டு உழுவயல் ஆக்கி – வளம் தொட்டுப்
பாகுபடும்  கிணற்றோடு  என்று இவ்வைம்பால் படுத்தான்
ஏகும் சுவர்க்கத்து இனிது.
                                                                                                       . 66
குளத்தைத் தோண்டிச் சுற்றிலும் மரங்களை நட்டு, மக்கள் நடக்கும் வழிகளைச் சீர்படுத்தி, தரிசு நிலத்தினைச் செப்பம் செய்து உழு வயலாக்கி, கிணறு உண்டாக்கி ஆகிய இவ்வைந்தினையும் உண்டாக்கியவன் சுவர்க்கத்திற்கு இனிதாகச் செல்வான். 

இனத்தினான் ஆகும் பழியும் புகழும்
மனத்தினான் ஆகும் மதி
                                                                                               81 : 3, 4
தீய சேர்க்கையால் பழியும் நற்சேர்க்கையால் புகழும் தத்தம் மனத்தின் இயல்புக்கேற்ப அறிவும்  மக்களுக்கு உண்டாகும்.

இன் சொலன் ஆகும் கிளைமை இயல்பில்லா
வன்சொல்லின் ஆகும் பகைமை ...
                                                                                                     90 : 1, 2
இனிய சொற்களால் உறவு உண்டாகும் ; கடும் சொற்களால் பகைமை உண்டாகும்.

புல் அறத்தின் நன்று மனை வாழ்க்கை போற்றுடைத்தே
நல் அறத்தாரோடு நடக்கலாம் ...
                                                                                           93 : 1, 2
மனவியோடு கூடி வாழும் இல்வாழ்க்கை , புல்லறத்தின் நன்றாம் அதுவும் நன்கு பாராட்டப்படுமானால் நல்ல துறவறத்தாரோடும்  வைத்து எண்ணப்படலாம்.
                                                           THE END                                                                           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக