புதன், 13 மே, 2015

சுடுகாடு


சுடுகாடு  *  - வென்றார் உண்டோ ?
களரி பரந்து கள்ளி போகி
பகலும் கூவும் கூகையொடு பிறழ்பல்
ஈமவிளக்கின் பேஎய் மகளிரொடு
அஞ்சுவந் தன்று  இம்மஞ்சுபடு முதுகாடு
நெஞ்சுஅமர் காதலர் அழுத கண்ணீர்
என்புபடு கடலை வெண் நீறு அவிப்ப
எல்லார் புறனும் தான்கண்டு உலகத்து
மன்பதைக்கு எல்லாம் தானாய்
தன்புறம் காண்போர்க் காண்புழி அறியாதே
                                         தாயங்கண்ணனார், புறநா. 356
காடு படர்ந்து, கள்ளி மிகுந்து, பகல் பொழுதிலும் கூவும் கூகையாலும் பிணஞ்சுடும் தீயின் அழலானும் அகன்ற வாயையுடைய பேய் மகளிரானும் இந்தப் புகை தவழும் சுடுகாடு – காண்பார்க்கு  அச்சம் வரச்செய்வதாயிற்று. உள்ளத்தே அமர்ந்த, விரும்பிய காதலை உடைய மகளிர் அழுதலால் பெருகும் கண்ணீர், எலும்பு கிடக்கும் சுடலையிடத்துள்ள வெண்ணிய சாம்பலை அவித்து நின்றது. இம்முதுகாடு, எல்லோர் முதுகையும் தான்கண்டு, உலகத்து மக்கட்தொகுதிக்கெல்லாம் தானே இருப்பிடமாயிற்று, மன்பதையுள் தன்னைப் புறங்காண வல்லவர்களைக் கண்டறியாதாயிற்று இம்முதுகாடு.

கள்ளி போகிய களரி மருங்கின்
வெள்ளில் நிறுத்த பின்றை கள்ளொடு
புல்லகத்து இட்டசில் அவிழ் வல்சி
புலையன் ஏவ புல்மேல் அமர்ந்து உண்டு
அழல்வாய்ப் புக்க பின்னும்
பலர்வாய்த்து இராஅர் பருத்து உண்டோரே
     நந்து மாறனைச் சங்க வருணர் என்னும் நாகரியர், புறநா. 360 : 16 - 21

 பாழிடமாகிய சுடுகாட்டில் கள்ளி ஓங்கி வளர்ந்துள்ள களர் நிலத்தின் பக்கத்தே, பாடையை நிறுத்திய பின்னர், பிணத்தைப் புல் மீது கிடத்தி,  கள்ளுடனே சில சோறாகிய உணவைப் புலையன் படைப்பான். புலையன் ஏவலுக்குப் புல்மேல் கிடத்திய பிணத்தைச் சுடலைத்தீயில்  சுட்டெரித்து கண்ட பின்னரும் உண்டு பருத்தோர் பலரும் புகழ் வாய்த்து இருந்தார் இலர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக