வியாழன், 7 மே, 2015

தமிழர் மருத்துவம்

தமிழர் மருத்துவம்
 -  தீங்கனிவீட்டில் வேப்பிலை செருகல்மருத்துவம்
 போரில் பெரும் புண்பட்டு வீழ்ந்த மறவர்க்கு மருத்துவம் செய்வோர் மனையைத் தூய்மைசெய்து ஒப்பனை செய்வதும் இனிய இசை பாடுதலும் நறிய மணப்பொருள்களைப் புகைத்து எங்கும் நறுமணம் கமழுமாறு செய்வதும் பண்டைய தமிழ் மக்கள் மரபு .ஒளவை -உரை புறநா. 281.
தீங்கனி இரவமொடு வேம்பு மனைச் செரீஇ
வாங்கு மருப்பு யாழொடு பல்லியம் கறங்க
கை பயப் பெயர்த்து மை இழுது இழுகி
ஐயவி சிதறி ஆம்பல் ஊதி இசைமணி எறிந்து காஞ்சி பாடி
நெடுநகர் வரைப்பில் கடிநறை புகைஇ
காக்கம் வம்மோ ........
                                            அரிசில்கிழார், புறநா.281 :1 – 7

வேப்பந் தழை செருகுதல்
வேம்பு சினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும்
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்
எல்லாமனையும் கல்லென்றவ்வே
 வெள்ளைமாளர்



உணவு-மருந்து
விளம்பழம் கமழும் கமஞ்சூல் குழிசிப்
பாசந் தின்ற தேய்கான் மத்த
               கயமனார், நற். 12 : 1,2
முடைதீர விளம் பழம் இட்டுவைத்தலானே அதன் மணம் கமழ்கின்ற நிறைந்த தயிர்த் தாழியில் கயிறாடித் தேய்த்ததாலே தேய்ந்த தண்டினை உடைய மத்திட்டு...
இம்முறை இன்றும் உண்டோ ? சித்த மருத்துவ முறை என்பர்- ஆய்க.

தாவரவியல்
தத்தக் குமிழின் கொடுமூக்கு விளைகனி
எறிமட மாற்கு வல்சி யாகும்
                பரணர், நற். 6 : 7, 8
சுரத்தில் உள்ள குமிழ மரத்தின் வளைந்த மூக்கினை உடைய முற்றிய கனிகள் கீழே உதிர்ந்து அங்கே குதித்து விளையாடும் இளமானுக்கும் வெறுப்பில்லா உணவாகும்.( குமிழம் பழம்)

தமிழர்தாவரஅறிவியல்176
  கடல் கண்டன்ன கண் அகன் பரப்பின்
நிலம்பக வீழ்ந்த வேர்முதிர் கிழங்கின்
கழைகண் டன்ன தூம்புடைத் திரள்கால்
களிற்றுச் செவி அன்ன பாசடை மருங்கில்
கழுநிவந் தன்ன கொழுமுகை இடையிடை
முறுவல் முகத்தின் பல்மலர் தயங்க
பூத்த தாமரைப் புள் இமிழ் பழனத்து
    மருதம் பாடிய இளங்கோ, அகநா.176 : 1-7
கடலைக் கண்டாற்போல பரந்த நீர் பரப்பு – நிலம் பிளக்குமாறு கீழ் இறங்கிய வேர்- முதிர்ந்த கிழங்கு – மூங்கிலைப் போன்ற துளையுடைய திரண்ட தண்டு – ஆண் யானையின் காதுபோல் பசுமை நிற இலை – கழுமரம் உயர்ந்து நிற்பதுபோல் அரும்புகள் – அவற்றிடையே புன்முறுவல் பூத்த முகம்போல் பல மலர்கள்.



புளிக்கறி
வேட்டம் மறந்து துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி
ஆம்பல் அகல் இலை அமலை வெஞ்சோறு
தீம்புளிப் பிரம்பின் திரள்கனி பெய்து
விடியல் வைகறை இடூஉம் …..
             பரணர், அகநா. 196: 4 – 7
பாணர்கள் கள்ளுண்டு களித்து வேட்டைக்குச் செல்லாமல் மறந்து உறங்கினர், உறங்கிய கணவன்மார்க்கு அவரவர் மனைவியராகிய பாண் மகளிர், இருள் புலரும் விடியற்காலத்தே, ஆம்பலது அகன்ற இலையில் சுடுகின்ற சோற்றுத் திரளோடு பிரம்பின் புளிப்பும் இனிப்பும்கலந்த திரட்சியான பழத்தினைக் கொண்டு ஆக்கிய புளியங் கறியை இட்டு உண்பிப்பர். ( பாட்டிபாண்மகளிர்பிரம்பின் திரள் கனிபிரப்பங்கொடி ;   இக்கொடி ஒன்றோடொன்று பிணங்குதலை உடையது, இதன் கனி புறத்தே வரிகளைக் கொண்டது, இதனை : அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனி, குறுந். 19;1 என்று கூறும். கள் விற்கும் அங்காடியில் கொடி நடுதல். 372-374, பாணர்கள் மீன் பிடித் தொழிலர் 269.- . காஞ்சி.)

- மயில் உணவு
பைங்கொடிப் பாகற் செங்கனி நசைஇ
கானமஞ்ஞைக் கமஞ்சூல் மாப்பெடை
அயிர்யாற்று அடைகரை வயிரின் நரலும்
                                   செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார், அகநா.177: 9-11

பச்சை நிறப் பாகற் கொடியின் செந்நிறப் பழத்தினை விரும்பிச் சூல் கொண்ட கான மயிலின் கரிய பெடையானது அயிரியாற்றின் கரையின்கண் நின்றுகொண்டு ஊது கொம்பைப் போல் ஒலிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக