செவ்வாய், 5 மே, 2015

ஆரியர்-பார்ப்பான் வடவர்

-பார்ப்பான் தூது
தூதுஒய் பார்ப்பான் மடிவெள் ஓலைப்
படயுடைக் கையர் வருதொடர் நோக்கி
உண்ணா மருங்குல் இன்னோன் கையது
பொன் ஆகுதலும் உண்டு என கொன்னே
தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்
திறனில் சிதாஅர் வறுமை நோக்கி
செங்கோல் அம்பினர் கைநொடியாப் பெயர
           பாலை பாடிய பெருங்கடுங்கோ, அகநா.337: 7 – 13
பாலைவழி- தூது செல்லும் பார்ப்பான் – வெண்ணிற ஓலை – பொன்னாகவும் இருக்கலாம்- கொன்று போட்டனர்- வறுமை – வாடிய உடல்- கிழிந்த ஆடை -  ஆண்நரி – அவன் குருதியுடன் – குடலைக் கிழித்து உண்ணும்.
பார்ப்பான் தூது
 வயலைக் கொடியின் வாடிய மருங்குல்
உயவல் ஊர்தி பயலைப் பார்ப்பான்
எல்லி வந்து நில்லாது புக்கு
சொல்லிய சொல்லோ சிலவே அதற்கே
ஏணியும் சீப்பும் மாற்றி
மாண்வினை யானையும் மணி களைந்தனவே
                     மதுரை வேளாசான், புறநா. 305
போரைத் தவிர்த்த செய்தி , பார்ப்பான் தோற்றம்,தூது போவான் இலக்கணம் யாது ? உரை விளக்கம் : அந்தணன் தூதாகச் சென்றமையும் அத்தூதின் பயனும் உணர்த்தப்பட்டுள்ளன, அந்தணன் உண்டி குறைதலால் மெலிந்த தோற்றம் உடையவனாகவும், சிற்றுயிர்க்கு அஞ்சும் தண்ணளியுடைமையால் தளர்ந்த நடையுடையவனாகவும் குறிக்கப்பட்டுள்ளான். ( ஆய்க)



ஆரியர் தோற்றோடியது
மாரியம்பின் மழைத்தோற் சோழர்
வில்லீண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளை
ஆரியர் படையின் உடைகவென்
நேரிறைமுன்கை வீங்கிய வளையே
                    பாவைக் கொட்டிலார், அகநா.336 :20 - 23
வெற்றி பொருந்திய வேலினையும் மழைபோன்ற அம்பினையும் மேகம் போன்ற தோற்கிடுகினையுமுடைய சோழரது விற்படை நெருங்கிய அரணையுடைய வல்லத்துப் புறத்தேயுள்ள காவற் காட்டின்கண் வந்தடைந்த  ஆரியரது படை போல எனது முன்கையில் திரண்ட வளையல்கள் சிதைந்து ஒழிவனவாக.( சோணாட்டின் கண்ணதாகிய வல்லத்தின் புறத்தே ஒருகால் ஆரியர் படையெடுத்து வந்து தோற்றோடினர் என்னும் வரலாறு பேசப்படுகின்றது.)
ஆரியர் தொழில்
……………. ஆரியர்
பிடிபயின்று தரூஉம் பெருங்களிறு போல
                                       -பரணர், அகநா. 276 9, 10
 ஆரியர் பழக்கி வைத்த பெண்யானை தானே கானகம் சென்று பழகிப் பற்றிக்கொண்டு வந்து தருகின்ற களிற்றியானையை அவ்வாரியர் பிடித்துச் சிறை வைத்தாற் போன்று….
 ஆரிய மன்னரை வென்றது
ஆரியர் அலறத்  தாக்கிப் பேரிசைத்
தொன்று முதிர் வடவரை வணங்கு விற் பொறித்து
வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்
வஞ்சியன்ன .........................
                  பரணர், அகநா.396 :  16-19
ஆரிய மன்னர்கள் அலற- இமய மலையி வளைந்த வில்லைப் பதித்து – பகை வேந்தரைப் பிணித்து வந்த – இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் – இதனை, ‘இமயம் விற் பொறித்து ‘ எனவும்’ பேரிசை மரபின் ஆரியர் வணக்கி ‘ எனவும் பத்திற்றுப்பத்தின் இரண்டாம் பத்துப் பதிகத்தில் நெடுஞ்சேரலாதன் கூறப்படுதலான் அறிக.
இந்நிகழ்ச்சிகள் அவன் மைந்தனாகிய செங்குட்டுவனாலும் நிகழ்ந்தமை சிலப்பதிகாரத்தால் அறியப்படுதலின், பிணித்தோன் என்றது செங்குட்டுவன் எனலும் பொருந்தும் – நாட்டார் உரை.


வடவர் தந்த....
வடவர் தந்த வான்கேழ் வட்டம்
குடபுல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய
வண்டு இமிர் நறுஞ் சாந்து அணிகுவம் ---
                    -நக்கீரர், அகநா. 340: 16 – 18
  வடவர் – வெண்ணிற வட்டக் கல் –குடமலை (பொதியமலை) சந்தனம்-பிற மணப் பொருள் – அரைத்தல். (பவத்திரி – திரையன் ஊர் )
.



ஆரியர் மலை – இமயம்
 ..................... ஆரியர்
பொன்படு நெடுவரை புரையும்....
 இம்மென்கீரனார் , அகநா.398: 18, 19
ஆரியரது பொன் பொருந்திய நீண்ட இமயமலையை ஒக்கும்.

வேதம்
ஞாலம் நாறும் நலம்கெழு நல் இசை
நான்மறை முதுநூல் முக்கட் செல்வன்
ஆலமுற்றம் கவின்பெறத் தைஇய
-                       பரணர், அகநா. 181:15 – 17

சோழ நாட்டில் ஆலமுற்றம் ( ஆலம் – ஆலமரம் ) என்னும் அழகிய இடம் புது வருவாயையுடைய ஊர்களைக் கொண்டது. சோழர்காக்கும் சிறப்புடையது. காவிரி புரக்கும் சிறப்பு, உலகம் யாவும் போற்றும் நல்ல புகழையுடைய நான்குவேதங்களைக் கொண்ட பழம்பெரும் நூலைத் தந்தருளிய மூன்று கண்களையுடைய சிவபெருமான் எழுந்தருளிய சிறப்பினைக் கொண்டது. ( வேதம் சிவபெருமானின் வாய்மொழியாம் என்பது நன்றாய்ந்த நீள் நிமிர் சடை முதுமுதல்வன் வாய்போகாது ஒன்றுபுரிந்த ஈரிரண்டின், ஆறுணர்ந்த ஒரு முதுநூல் – புறம் 166: 1-4 புலவர் சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கெளணியன் விண்ணந்தாயன் – பூஞ்சாற்றூர் தஞ்சை , மா.வ.  கெளணிய பார்ப்பார் அனைவரும் தமிழ்ப் பற்றுடையர்.  நீண்ட சடையினையுடைய முதிய இறைவனது வாக்கை விட்டு நீங்காது அறம் ஒன்றையே மேவிய நான்கு கூற்றையுடையதாய் ஆறு அங்கத்தாலும் உணரப்பட்ட ஒரு பழைய நூலாகிய வேத்த்துக்கு  மாறுபட்ட நூல்களைக் கண்டோராகிய புத்தர் முதலாயின புறச் சமயத்தோரது மிகுதியைச் சாய்க்க வேண்டி -   சங்கத் தொகை நூல்களில் புத்தர், சமணர் முதலிய சமயத்தவரைப் பற்றிய குறிப்புகள் இன்மையின், இதுபொருந்தாமை உணரப்படும்- ஒளவை சு.து. உரை.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக