புதன், 27 மே, 2015

மன வளக்கலை – மூச்சுப் பயிற்சி ---- தொடர்ச்சி

மன வளக்கலை – மூச்சுப் பயிற்சி ---- தொடர்ச்சி
              ….. அசைந்து வருகின்றது. அதற்கு ஏது என்னென்றால் தூய உயிர்க் காற்று நிறைந்து நிற்கும் இடங்களில் நாம் அக்காற்றை மிகுதியாக உள்ளிழுக்க நுரையீரலானது அவ்வளவு காற்றுக்கும் இடங்கொடுத்து அகன்று முழுமையும் அசைகின்றது. (ப.26)
                   இதனால் காற்றுப் பையே கடவுளாக எண்ணத் தோன்றிகிறதல்லவா ? விதியை மதியால் வெல்வார்க்குக் காலன் கயிற்றோடு வருவதில்லை ; எமன் எருமை மீதேறி வருவதும் இல்லை.
நூறாண்டுகள் வாழ உதவும் மூச்சுப் பயிற்சி  - அரிய அறிவியல் கருவூலமாகத்  
திகழும் திருமந்திரத்தில் –

தலைவன் இடம்வலம் சாதிப்பார் இல்லை
தலைவன் இடம்வலம் ஆயிடில் தையல்
தலைவன் இடம்வலம் தன்வழி அஞ்சில்
தலைவன் இடம்வலம் தன்வழி நூறே –( 773)
                “ உயிர்த்தலைவன் பிராணன் இடமாகவும் வலமாகவும் சென்று வரச் செய்பவர்கள் ; பிராணனை இடப்பக்கம் வலப்பக்கமாக உள்ளிழுத்து நிறுத்தி வெளியிடும் மூச்சுப் பயிற்சியைச் செய்பவர்கள் அதிகம் பேர் இல்லை. மூச்சுக் காற்றை இடமாக இழுத்து வலமாக விடப் பழகிக் கொண்டால் சக்தி ஞானஒளி வெளிப்படும். இடம் வலமாகப் பிராணாயாமப் பயிற்சி செய்பவருக்கு ஐம்புலன்களும் தம் இச்சை ஒடுங்கித் தன் இயல்பு அடங்கி இருக்கும். இப்படிப் பிராணாயாமப் பயிற்சி செய்வோர் ஆயுள் நூறாகும் .“
                  ஐயா அவர்கள் உயிர்க் காற்றை “ஜீவ ஒளி “ என்று குறிப்பிடுகிறார்கள்.
                 “ நான் உயிர்களின் உடலில் மூச்சை விடுவது மூச்சை இழுப்பதில் காற்றாயிருந்து; நீ கடித்து உறிஞ்சி முழுங்கி உண்ணும் நான்கு வித உணவுகளை வயிற்றில் தீயாயிருந்து செரிக்க உதவுகிறேன். மூச்சை ஒழுங்காக இழுத்துவிடக் கற்றுக்கொள்; நோய் உன்னை நாடாது; பலன் உன் உடம்பு பேசும் “ கீதையில் பகவான் கூறிய விஞ்ஞானப் பூர்வ உண்மை “ - ---                                    --                                                 -கி. து. வாண்டையார்- இன்பவாழ்வு –ப.87
                 மறைமலையடிகளார் – “ நல்ல உடம்போடிருப்பவனுக்கு இரவின் பிற்பாகமாகிய இந்தக் காலத்திலே அவ்வக் கிழமைகளுக்கு இசைந்த  வகையாக மூச்சு நடக்கும். செம்மையாக இருப்பவனுக்குத் திங்கள் புதன் வெள்ளி என்னும் மூன்று நாட்களிலும் மூச்சானது இடது மூக்கிலேநடக்கும்; செவ்வாய் சனி ஞாயிறு என்னும் மூன்று நாட்களிலும் மூச்சானது வலது மூக்கிலே நடக்கும். வளர்பிறை வியாழக் கிழமையில் இடது மூக்கிலும் தேய்பிறை வியாழக் கிழமையில் வலது மூக்கிலுமாக மூச்சு நடக்கும். இவ்வாறு குறிப்பிட்ட கிழமைகளின் இரவின் பிற்பாகத்தில் மேற்சொல்லிய வண்ணம் மூச்சு நடக்கின்றதா என்பதை ஒவ்வொருவரும் உன்னித்துப் பார்த்தல் வேண்டும். உடம்பு நல்ல செம்மையான நிலையிலே இருக்குமளவும் மூச்சு ஓட்டமானது மேலே குறிப்பிட்ட வண்ணந் தவறாமல் நடக்கும்.” (ப.40)
                       மேலும் மூச்சுக் காற்றின் கணக்கை அறிவியல் கண்கொண்டு ஆராய்வார் கூறுவதாவது –
                         “ சராசரியாக நாளொன்றுக்கு 21600 முறை மூச்சுக் காற்றை உள்வாங்கி வெளியிட வேண்டியிருக்கிறது. நாம் உள்ளிழுக்கும் மூச்சுக் காற்றானது பன்னிரண்டு அங்குலம் அளவு கொண்டிருக்கும் வெளிவிடும்போது நான்கு அங்குலமாகக் குறைந்துவிடும். மீதமுள்ள இரண்டு மடங்கு உடம்பில் தங்கிவிடும். நாளொன்றுக்குப் பாழாகும் காற்றின் அளவு 7200 அங்குலமாகும். வீணாகும் காற்றும் உடம்பில் தங்குவதற்குரிய பயிற்சியை மேற்கொண்டால் மரண பயமில்லை.”

“ ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
   உய்யக் கொண்டேறுங் குதிரை மற்றொன்றுண்டு
   மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாது போய்ப்
   பொய்யரைத் துள்ளி விழுத்திடும் தானே – ( 546)
ஐவர்க்கு நாயகன் – ஐம்பொறிகட்குத் தலைவன் – உயிர்
ஐவர் வாழும் ஊர் – ஐம்பொறிகள் இருப்பிடம் – உடல்
அவ்வூர்க்குத் தலைமகன் – ஆள்பவன் – மனம்
குதிரை – உயிர்ப்பு - மூச்சு
                      
            அகத்தவப் பயிற்சி உடையார்க்கு மனமாகிய குதிரை அடங்கிப் பற்றுக்கொடுத்து ஒழுகும். முறையான பயிற்சி இல்லாத பொய்யர்க்குப் பற்றுக் கொடாது துள்ளி எழுந்து அவரைக் கீழே வீழ்த்தித் தான் வேண்டியவாறு சென்றுவிடும்.
               தூய நெறி காட்டும் வாழ்வியல் நூலாகத் திருமந்திரம் விளங்குகிறது. ஐயா அவர்களைப் போன்ற ஞானிகள் வாழ்வியல் நெறிமுறைகளை ஓதியும் உணர்த்தியும் வாழ்ந்துகாட்டியும்  வருகின்றனர். அழியா இவ்வறிவியல் கலையின் மூல முதல்வர்களைச் சித்தர்கள் எனப் போற்றுவர் சான்றோர்.
               சித்தி பெற்றவர்கள் சித்தர்கள். சித்தத்தைச் சிவன்பால் வைத்தவர்கள்; பேறு பெற்றவர்கள்; வீட்டின்பம் அடைந்தவர்கள் என்பதாம்.
அணிமா முதல் ஈசத்துவம் ஈறாக எட்டுவகையான பெரும் பேறுகளை அஷ்டமாசித்தி என்பர். இதன் விளக்கத்தைத் திருவிளையாடற் புராணம் அஷ்டமாசித்தி அருளிய படலத்தில் கண்டு தெளிக.
             “ வாசி என்ற மூச்சினை அடக்கி ஆண்டு யோக சக்தியினால் உடலில் உள்ள மூலாதாரம்- கொப்பூழ்- இதயம்- இரைப்பையின் நடு – கழுத்து – தலைமுடி – என்ற ஆறு இடங்களிலும் மனத்தை முறையாக நாட்டிக் குண்டலினியை எழுப்பிப் பலபல அனுபவமும் வெற்றியும் கண்டு அப்பால் உள்ள எல்லாம் ஆன பொருளில் நிலைத்துச் சித்தி பெறுபவரே சித்தர் “ – கலைக்களஞ்சியம்
                 உயிரும் உடம்பும் ஒன்றே. இரண்டும் தனித் தனியாக இயங்குவதில்லை உடம்பாலே உயிர் வாழ்கிறது –
 உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனெ – என்கிறார் திருமூலர்.
 அகத்தியர் திருவள்ளுவர் திருமூலர் போன்ர சித்தர்களின் வாழ்க்கை முறைகளைப் பார்த்தவரில்லை. நாம் வாழுங்காலத்தில் ஐயா அவர்களின் வாழ்வியலைப் பார்க்கவும் படிக்கவும் பின்பற்றவும் நமக்கு வாய்த்தது நற்பேறு. ஒலியாய் அறிவுறுத்தல் – ஒளியாய் வழிகாட்டல் – அறிவாய் மெய்ப் பொருள் உணர்த்தல் ஆற்றலாய் ஞானம் நிறைத்தல் இவற்றால் உயிர்கள் யாவும் உவந்து போற்றுமே ஐயா அவர்களின் நற்றவப் பெருமையை—

என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்று ளார் அடியாரவர் வான்புகழ்
நின்றது எங்கும் நிலவி உலகெலாம்
                     என்று சேக்கிழார்  - கற்பவர்க்கு என்றும் இன்பம் பெருகவும் கற்பவர் உள்ளம் ஒரு பொருளையே காதலித்து ஓங்கிடவும். சிவனடியார்களின் புகழ் உலகெலாம் பரவி எங்கும் நிலைபெற்றது போல ஐயா அவர்களையும் உலகம் அறிந்து கொண்டது என்பதைச் சேக்கிழார் வாய்மொழி வைத்துப் போற்றுதல் பொருத்தமுடையதே.

                           முற்றும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக