வெள்ளி, 22 மே, 2015

பதினெண் கீழ்க்கணக்கு- ஓர் அறிமுகம்

41 -  செவ்விலக்கிய நூல்கள்
கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரையிலானவை

ஓர் அறிமுகம்
  தொல்காப்பியம்- எட்டுத்தொகை – பத்துப்பாட்டு – பதினெண்கீழ்க்கணக்கு – சிலப்பதிகாரம் – மணிமேகலை – முத்தொள்ளாயிரம் – இறையனார் களவியல்.
                                               பதினெண் கீழ்க்கணக்கு
நாலடியார்

            பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் முதலாவதாக அமைவது நாலடியார்.  இது அறநூல்.  சமண முனிவர்களால் இயற்றப்பெற்ற இந்நூல் 40 அதிகாரத்துக்கும்  பத்துப்பத்துப் பாடல்களைக் கொண்ட 40 அதிகாரங்களையும்  400 வெண்பாக்களையும் கொண்டுள்ளது.  நாலடி நானூறு என்ற பெயராலும் இது வழங்கப்பெறுகிறது.  இதற்கு வேளாண்வேதம் என்ற வேறொரு பெயரும் உள்ளது.

            'ஆலும் வேலும் பல்லுக் குறுதி
            நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி'

என்று வழங்கும் வழக்குமொழியில் நாலும் என்பது நாலடியாரைக் குறிக்கிறது.  மக்களிடம் பெற்றுள்ள செல்வாக்கையே இது வெளிப்படுத்துகிறது.  'பழகுதமிழ்ச் சொல்லழகு நாலிரண்டில்' என்ற தனிப்பாடலும் இதைப் பாராட்டுகிறது.

            நான்கு அடிகளையுடைய வெண்பாக்களால் ஆன நூலாதலால் நாலடி என்னும் பெயர் பெற்று ஆர் எனும் சிறப்பு விகுதியுடன் நாலடியார் என்று வழங்குகின்றது.

            நாலடியாரை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று முப்பாலாக வகுத்தவர் பதுமனார்.  அதிகாரங்களை ஒழுங்குபடுத்தி உரை எழுதியவர் தருமர்.

            இந்நூல் 1812ஆம் ஆண்டு மலையப்பப்பிள்ளை குமாரர் ஞானபிரகாசத்தால் பதிப்பிக்கப்பெற்றது.

நான்மணிக்கடிகை


பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் நாலடியார் அடி அளவால் பெயர் பெற்றதுபோல் நான்மணிக்கடிகை கூறப்பெறும் பொருள்களின் அளவால் பெயர் பெற்றுள்ளது.  கடிகை என்பது பல பொருளுடைய சொல்.  இங்குத் துண்டம் என்ற பொருளில் வந்தது.  நான்கு மணிகளால் ஆன அணிகலன் என்ற பொருளில் ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துகளைத் தொகுத்துப் பாடப்பட்டது.

இதனை இயற்றியவர் விளம்பிநாகனார்.  புலமைத் திறம் உடையவர்.   கடவுள் வாழ்த்துப் பாடல்கள் இரண்டும் மாயவனைப் பற்றி இருப்பதால் ஆசிரியர் வைணவச் சமயத்தவர் எனலாம்.  இவர் இளங்கோவடிகள் காலத்தை அடுத்து வாழ்ந்தவர் என்ற கருத்து உள்ளது.

கடவுள் வாழ்த்துப் பாடல்கள் நீங்கலாக 101 வெண்பாக்கள் இதில் உள்ளன.

இந்நூல் 1872ஆம் ஆண்டு ஊ. புஷ்பரத செட்டியாரால் பதிக்கப்பெற்றது

இன்னா நாற்பது


நாற்பது என்னும் தொகையால் குறிக்கப்பெறும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இது ஒன்று.  காலம் பற்றியும் இடம் பற்றியும் வருவதுபோலவே பொருள் பற்றி இந்நூல் அமைந்துள்ளது.  இன்னாவாகும் பொருள்களைப் பற்றிய 40 பாடல்களை கொண்டது.   எனவே இன்னா நாற்பது என்று அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு பாடலிலும் நான்மணிக்கடிகை போல் நான்கு கருத்துகள் கூறப்பட்டிருப்பினும் ஒவ்வொன்றையும் இன்னா என்று எடுத்துக் கூறுவதால் இது இன்னா நாற்பது என்னும் பெயர் பெற்றது.

இதன் ஆசிரியர் கபிலர்.  சங்க காலக் கபிலர் வேறு இவர் வேறு.   இந்நூலுக்குப் பழைய  உரை ஒன்றுள்ளது. 

இந்நூலை 1876ஆம் ஆண்டு சண்முகசுந்தர முதலியார் பரிசோதித்து, சபாபதி பிள்ளை பதிப்பித்துள்ளார்.இனியவை நாற்பது
            இனிய பொருள்களை நாற்பது பாடல்களில் தொகுத்துக் கூறுவதால் இஃது இனியவை நாற்பது என்று வழங்கப்படுகிறது.  பாடலுள் ஆசிரியர் தாம் கூறும் அறக்கருத்துகளை இனிது என்னும் சொல்லால் குறிப்பிடுகின்றார்.

            இந்நூலில் 4 பாடல்கள் தவிர்த்துப் பிற எல்லாம் பாடல்களிலும் மும்மூன்று இனிய பொருள்களைத் தொகுத்துக் கூறியுள்ளார். ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார்.

            இது பொருளமைப்பில் திரிகடுகத்தையும் நூல் அமைப்பில் இன்னா நாற்பதையும் ஒத்ததாக உள்ளது.  இஃது அற நூலாகும்.

            இந்நூல் 1844ஆம் ஆண்டு வீரநாமநல்லூர் அப்பாசி ஐயரால் பதிக்கப்பட்டுள்ளது.  நூல் முழுமைக்கும் பழைய உரை உள்ளது.கார் நாற்பது

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் கார்நாற்பது அகப்பொருள் பற்றியது.  பெரும்பொழுது பற்றித் தனித்தமைந்த நூல்.  கார் காலத்தின் தோற்றம் பற்றிய 40 பாடல்களைக் கொண்டுள்ளதால் இது கார் நாற்பது என்று அழைக்கப் பெறுகிறது.

கார்காலம் முல்லைத் திணைக்குரிய பெரும்பொழுது.  பொருள்திரட்டல் முதலிய காரணங்களால் தலைவியைப் பிரிந்துசென்ற தலைவன், தான் சொல்லிச் சென்ற கார்காலத்திலும் வாராமல் இருக்க, தலைவி பிரிவு ஆற்றாது உரைத்தலும், தோழி ஆற்றுவித்தலும், தலைவன் நெஞ்சிற்கும் பாகனுக்கும் உரைத்தலும் ஆகிய செய்திகள் இந்நூலில் பேசப்படுகின்றன.

      தோழி, தலைவி, தலைவன், பாங்கன் ஆகியோரை உறுப்பினராக அமைத்து நாடகப் பாங்கில் பாடியுள்ளார்.  இதன் ஆசிரியர் மதுரைக் கண்ணங்கூத்தனார்.  இவர் வைணவச்  சமயத்தாராவர்.

இந்நூல் 1875ஆம் ஆண்டு தி. சபாபதி பிள்ளையால் பதிக்கப்பெற்றது.  23 முதல் 38 வரையுள்ள பாடல்களுக்குப் பழைய உரை கிடைக்கவில்லை.  உரை கிடைத்த பாடல்களுக்குத் துறை பற்றிய பழங்குறிப்பு கிடைத்துள்ளது.


களவழி நாற்பது

கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் நிகழ்ச்சியாகிய போர்ச்செய்தி பற்றியது களவழி நாற்பது ஒன்றேயாகும்.  ஏர்க்களம் பற்றியும் போர்க்களம் பற்றியும் பாடப்பெறும் பாடல்கள் களவழி எனப்படும்.

இந்நூலின் பாடல்கள் எல்லாம் 'களத்து' என்ற சொல்லை இறுதியில் கொண்டுள்ளன.  போர்க்கள நிகழ்ச்சிகளைச் சிறப்பித்துப் பாடியுள்ளன.  களவழிப் பாடல்கள் நாற்பதைக் கொண்ட நூல் களவழி நாற்பது எனப்பட்டது.  இதன் ஆசிரியர் பொய்கையார்.

சோழன் செங்கணான் போர் என்னும் இடத்தில் கணைக்காலிரும் பொறையோடு போரிட்டான்; போரில் சோழன் வெற்றிபெற்றான்; சேரமானைச் சிறைப்படுத்தினான்; அப்பொழுது பொய்கையார் சோழனது வெற்றியைப் புகழ்ந்து பாடிச் சேரனைச் சிறையிலிருந்து விடுதலை செய்தார் என்ற செய்தி களவழி நாற்பதினுடைய இறுதியில் காணப்பெறும் குறிப்பால் தெரியவருகிறது.  பொய்கையார் களவழி நாற்பது பாடிச் சேரனைச் சிறையிலிருந்து விடுவித்தார் என்று கலிங்கத்துப் பரணி,  மூவருலா,  தமிழ்விடுதூது முதலிய நூல்களும் குறிப்பிடுகின்றன.

இந்நூல் முழுமைக்கும் பழைய உரை உள்ளது.  1875 ஆம் ஆண்டு தி.சபாபதி பிள்ளை களவழி நாற்பதைப் பதிப்பித்துள்ளார்

ஐந்திணை ஐம்பது

          ஐந்திணை ஐம்பது முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல்  என்ற முறையில் ஐந்திணைக்கும் பத்துப்பத்தாக 50 பாடல்களைப் பெற்றுள்ள நூல். இது அகப்பொருள் பற்றியது.  இதில் உள்ள ஐந்திணை வரிசை முறை, 'மாயோன் மேய காடுறை உலகமும்' எனத் தொடங்கும் தொல்காப்பிய நூற்பா அமைப்பை ஒத்துள்ளது.  இந்நூற்பாவில் காணப்பெறாத பாலை, நால்வகை நிலங்களுக்கும் பொதுவானதாலும் உரிப்பொருளில் பிரிதல் ஒழுக்கத்திற்கு உரித்தானதாலும் அதனையும் உடன்கொண்டு ஐந்திணையாகக் கூறுதலே மரபு.
            இந்நூலாசிரியர் மாறன் பொறையனார். இந்நூல் முழுமைக்கும் பழைய உரையும் துறைக் குறிப்புகளும் உள்ளன.

            "ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார்
            செந்தமிழ் சேரா தவர்"

என்று பாயிரம் கூறுவதால் செந்தமிழ்ப் புலமைக்கு இந்நூற் பயிற்சி இன்றியமையாதது என அறியலாம்.
            இது 1903ஆம் ஆண்டு ரா.  இராகவையங்காரால் பதிக்கப்பெற்றது.  இதற்கு நச்சினார்க்கினியர் உரை வகுத்துள்ளார்.


ஐந்திணை எழுபது

            ஒவ்வொரு திணைக்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு ஐந்திணைக்கும் எழுபது பாடல்களால் பாடப்பெற்றது ஐந்திணை எழுபது.  நான்கு திணைகளுக்கும் பொதுவாய் நடுவண் ஐந்திணை என்று சிறப்பிக்கப்படுவதால் பாலைத் திணையை நடுநாயகமாய் அமைத்துள்ளார்.

            இந்நூலாசிரியர் மூவாதியார்.  இந்நூலில் உள்ள எழுபது பாடல்களில் முல்லைத் திணையில் இரண்டு பாடல்களும் (25, 26) நெய்தல் திணையில் இரண்டு பாடல்களும் (69, 70) அழிந்து விட்டன.  அக்காலப் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் முதலியன இந்நூலில் விரவிக்கிடக்கின்றன.  பழைய உரையும் கிளவிக் குறிப்புகளும் முதல் 24 பாடல்களுக்கு மட்டும் கிடைத்துள்ளன.

            இந்நூல் 1906ஆம் ஆண்டு மு. இராகவையங்காரால் பதிப்பிக்கப் பெற்றுள்ளது.  இதற்கு நச்சினார்க்கினியர் உரை செய்துள்ளார்.திணைமொழி ஐம்பது

ஒவ்வொரு திணைக்கும் பத்துப்பத்துப் பாடல்களாக ஐந்திணைக்கும் ஐம்பது பாடல்களைக் கொண்டுள்ளது இந்நூல்.  குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற முறையில் ஐந்து திணைகளும் அமைந்துள்ளன.  இந்நூல் அகப்பொருள் பற்றியது.

இந்நூலை இயற்றியவர் கண்ணஞ்சேந்தனார். இந்நூலுக்குப் பழைய பொழிப்புரை ஒன்று உள்ளது.  பாடல்களுக்குத் துறைக்குறிப்புகளும் அமைந்துள்ளன.

நுண்ணிய கருத்துக்களைக் கொண்டு எண்ணரிய இன்பம் பயக்க வல்லது இந்நூல்.  அதனால்தான் நச்சினார்க்கினியர் போன்ற உரையாசிரியர்களும் இந்நூலின் பாக்களை மேற்கோள்களாக எடுத்தாண்டுள்ளனர்.

இந்நூல்  1918 ஆம்   ஆண்டு    திருவாரூர்த்     தமிழ்ச்    சங்கத்தாரால்    பதிப்பிக்கப்பட்டது.

             திணைமாலை நூற்றைம்பது

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில், அக நூல்களாக ஆறு நூல்கள் உள்ளன.  அவற்றில் நான்கு நூல்கள்  திணை என்ற தலைப்போடு அமைந்துள்ளன.  திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை எழுபது, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது.  அவற்றுள் மிகுதியான பாடல்களை உடையது திணைமாலை நூற்றைம்பது. அதனால் அதனை அகநூல்களில் முதலாவதாக வைத்துள்ளனர். இந்நூலாசிரியர் கணிமேதாவியார் ஆவார்.  இந்நூலுள் 153 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.  ஏலாதியும் இவரால் பாடப்பட்டதாகும்.

திணை என்பது நிலம், ஒழுக்கம் முதலிய பல பொருள் குறித்த சொல்.  இங்கே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து நிலம் பற்றி, அவ்வந்நிலத்திற்குரிய புணர்தல், பிரிதல் முதலிய ஒழுக்கங்கள் சிறப்பித்துப் பாடப் பெறுகின்றன.  ஐந்திணை ஒழுக்கங்களைக் கோவையாக அமைத்து மாலை போலத் தந்துள்ளமையின் திணைமாலை என்றும்  பாடல் அளவினால் திணைமாலை நூற்றைம்பது என்றும் இந்நூல் பெயர் பெற்றுள்ளது. 

இந்நூலுக்கு 127ஆம் பாடல் வரையே பழைய உரை உள்ளது.  இதில் துறைக் குறிப்புகளும் காணப்படுகின்றன.

இந்நூல் 1904ஆம் ஆண்டு ரா. இராகவையங்காரால் பதிப்பிக்கப்பட்டது.

பழமொழி

பழமொழி, தொல்காப்பியம் கூறும் இலக்கிய வகைகளுள் ஒன்று.  இது முதுசொல், முதுமொழி, தொன்றுபடு பழமொழி, சொல்வழக்கு என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.  நாலடியாரைப் போலவே நானூறு பாடல்களைக் கொண்டு விளங்குகிறது.  இதன் ஒவ்வொரு பாடலிலும் பழமொழியை அமைத்து அதற்கு விளக்கம் கூறும் வகையில் பாடியிருத்தலின் பழமொழி எனும் சிறப்புப் பெயர் பெற்றுள்ளது.

இந்நூல் பல பாடல்களில், பழமொழி பாடலின் இறுதியில் வர முன் இரண்டு அடிகளில் அதற்குரிய விளக்கம் அமைந்துள்ளது.  மூன்றாம் அடியில் பெரும்பாலும் ஆடூஉ, மகடூஉ முன்னிலைத் தொடர்  ஒன்று  இடம்  பெறுகின்றது.  இது அறநூலாகும்.

இந்நூலை இயற்றியவர் முன்றுறை அரையனார் ஆவார்.  கரிகாற்சோழன், பாரி, பேகன்  போன்ற அரசர்களைப் பற்றிய செய்திகளும் இதில் இடம் பெறுகின்றன.  பழமொழிகளின் அருமை பெருமைகளை உணர்ந்து தனிப்பட நூல் செய்த பெருமை புலவர் முன்றுறை அரையனார்க்கு உரியதாகும்.

இந்நூல் 1874ஆம் ஆண்டு சுப்பராய செட்டியரால் முதன் முதலாகப் பதிப்பிக்கப்பெற்றது.

                                              சிறுபஞ்சமூலம்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் சிறுபஞ்சமூலமும் ஒன்று.   சிறுபஞ்சமூலம் என்பதற்கு ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்.  சிறுவழுதுணைவேர், நெருஞ்சிவேர், சிறுமல்லிவேர், பெருமல்லிவேர், கண்டங்கத்திரி வேர் ஆகிய ஐந்துமாகும்.

வேர்களால் தயாரிக்கப்படும் சிறுபஞ்சமூலம் உடல்நலத்தைப் பேணுவது போல,  இந்நூலில் வரும் ஒவ்வொரு பாடலிலும் ஐந்து கருத்துகள் சொல்லப்படுகின்றன.  இவ்வைந்து கருத்துகளும் அறியாமையைப் போக்கி  மனித வாழ்க்கைக்குப் பெரிதும் பயன்படுகின்றன.  எனவே இந்நூல் சிறுபஞ்சமூலம் என்ற பெயர் பெற்றது.  இது அற நூலாகும்.  பாயிரச் செய்யுள் உள்பட 100 வெண்பாக்களைக் கொண்டது இது.

இதன் ஆசிரியர் காரியாசான் ஆவார்.  நான்கு வரிகளில் ஐந்து பொருள்களை அமைத்துப் பாடும் ஆசிரியர் திறன் போற்றத்தக்கது.

இந்நூலுக்குப் பழைய உரை உள்ளது.  அது பண்டை மரபுகளை நன்கறிந்து அமைத்த சிறந்த உரையாய் உள்ளது.

இந்நூல்  1875ஆம் ஆண்டு சபாபதி பிள்ளையால் பதிக்கப்பெற்றது.

                                   

                                        திருக்குறள்
தமிழ் இலக்கிய உலகில் தனிச் சிறப்புடன் விளங்குவது திருக்குறள்.  உலகப் பொதுமறை என்று போற்றப்படுவது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பாடல் அளவாலும் பொருள் நுட்பத்தாலும் தலைசிறந்து விளங்குவது.  பொது மக்களுக்கும் புல மக்களுக்கும் ஒருசேர உயர்வளிப்பது.  உலகம் போற்றும் ஒப்புயர்வற்ற பொது அறநூல் திருக்குறள்.

இது குறள் என்றும் திரு என்னும் அடைமொழி சேர்த்துத் திருக்குறள் என்றும் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருண்மைபற்றி முப்பால், முப்பால் நூல் என்றும் ஆசிரியரை நோக்கி வள்ளுவம், வள்ளுவ நூல், வள்ளுவப்பயன் என்றும் உண்மையுரைத்தல் பற்றிப் பொய்யாமொழி என்றும் மந்திரத்தன்மை பற்றி வாய்மொழி என்றும் மறைத்தன்மைபற்றி தமிழ்மறை, பொதுமறை என்றும் தெய்வத்தன்மைபற்றித் தெய்வ நூல் என்றும் வழங்கப்படுகிறது.

இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர்.  இவர் தெய்வப்புலவர், திருவள்ளுவ நாயனார், தேவர், செந்நாப்புலவர், செந்நாப்போதார், பெருநாவலர், முதற்பாவலர், மாதானுபங்கி, நான்முகனார் என்றும் அழைக்கப்படுகிறார்.
திருக்குறள், பால் என்னும் முப்பெரும் பிரிவுகளையும் இயல் என்னும் 8 சிறுபிரிவுகளையும் அதிகாரம் என்னும் 133 உட்பிரிவுகளையும் உடையது.  ஒவ்வோர் அதிகாரமும் பப்பத்துக்  குறள்களாக மொத்தம் 1330 குறள்களைக் கொண்டது
பால்                      இயல்                               அதிகாரம்                      குறள்

அறத்துப்பால்            பாயிரவியல்                                  4                                          40
                                    இல்லறவியல்                  20                                        200
                                    துறவறவியல்                              13                                        130
                                    ஊழியல்                             1                                          10

பொருட்பால்             அரசியல்                          25                                        250
                                    உறுப்பியல்                      45                                        450

காமத்துப்பால்           களவியல்                           7                                          70
                                    கற்பியல்                          18                                     
                                    மொத்தம்                       133                                     1330

"தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர்,
பரிமேலழகர், பருதி, திருமலையார்,
மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர், வள்ளுவர் நூற்கு
எல்லை உரைசெய்தார் இவர்"


என்ற தனிப்பாடல் பத்துப்பேர் திருக்குறளுக்கு உரை செய்ததாகத் தெரிவிக்கிறது. இப்போது முந்நூற்றுக்கும் மேற்பட்ட உரைகள் வெளிவந்துள்ளன.  பரிமேலழகர் உரை இன்றுவரை சிறந்த உரையாக விளங்குகிறது.

            திருக்குறள் அறுபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  ஆங்கிலத்தில் மட்டும் 32 மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளன.

            திருக்குறளையும் திருவள்ளுவரையும் சிறப்பித்துக் கூறும் 'திருவள்ளுவமாலை' என்னும் தனிப்பாடல் தொகுதி 53 பாடல்களைக் கொண்டுள்ளது.  இத்தகைய சிறப்பு வேறு எந்தப் புலவருக்கும் வாய்க்கவில்லை.

            திருக்குறள் 1812ஆம் ஆண்டு மலையப்பப்பிள்ளை குமாரன் ஞானப்பிரகாசனால் பதிப்பிக்கப்பெற்றது.

திரிகடுகம்
          திரிகடுகம் என்பது சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும்.  மூன்று மருந்துப் பண்டங்களால் ஆகிய திரிகடுகம் என்னும் மருந்து உடல் நலம் பேணுவதைப் போல இந்நூலின் செய்யுட்களில் மும்மூன்றாக உரைக்கப்பெற்ற அறங்களும் உயிர் நலம் பேணுவதாய் அமைந்துள்ளன.  இந்த  ஒற்றுமை கருதியே திரிகடுகம் என்று இந்நூல் பெயர் பெற்றுள்ளது.

            உலகில், கடுகம் உடலின் நோய் மாற்றும்;
            அலகுஇல் அகநோய் அகற்றும் – நிலைகொள்
            திரிகடுகம் என்னும் திகழ்தமிழ்ச் சங்கம்
            மருவி நல்லாதன் மருந்து

எனவரும் பாடல் உடல்நோயைப் போக்குவது திரிகடுகம் என்ற மருந்து,  உளநோயைப் போக்குவது திரிகடுகம் என்ற பதினெண் கீழ்க்கணக்கு நூல் என்று குறிப்பிடுகிறது.

            இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 100 செய்யுட்களைக் கொண்டுள்ளது.  இதனை இயற்றியவர் நல்லாதனார் ஆவார்.  இவரது ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருத்து என்னும் ஊராகும்.

            நூல் வழக்கிலும் உலக வழக்கிலும் பயின்ற பழமொழிகள் சிலவற்றை இந்நூல் எடுத்தாண்டுள்ளது.

            இந்நூல் 1868ஆம் ஆண்டு நல்லூர் சதாசிவப்பிள்ளையால் பதிப்பிக்கப்பெற்றது.

ஆசாரக்கோவை

            ஆசாரம் என்பது வடசொல்.  தமிழில்  ஒழுக்கம், நெறி, முறை, வழி என்ற சொற்கள் கூறும் பொருளை வடமொழி ஆசாரம் என்று கூறுகிறது.

            வழிமுறைகளைத் தொகுத்துத் தருவது கோவை என்று கூறப்பெறும். இந்நூலாசிரியர் கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் ஆவார்.

            ஆசாரக் கோவையை  ஒரு பொதுச் சுகாதார நூலாகக் கருதலாம்.  எல்லா மக்களும் நோயற்ற வாழ்வு வாழ்வது எப்படி? ஊரும், நாடும், பொது  இடங்களும்  சுகாதாரக் கேடின்றி இருப்பது எப்படி? என்பவற்றை இந்நூலிலே காணலாம்.  புறத்திலே தூய்மையுடன் வாழ்வதற்கு வழி கூறுவதோடு மட்டும் நின்று விடவில்லை.  அகத்திலே அழுக்கின்றி வாழ்வதற்கும் வழி காட்டுகின்றது இந்நூல்.

            இந்நூலுள், சிறப்புப் பாயிரம் நீங்கலாக நூறு வெண்பாக்கள் உள்ளன.  வெண்பாவின் வகையாகிய குறள்வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, சவலை வெண்பா எல்லாம் இதில் உள்ளன.

            காலையில் எழுந்தது முதல் இரவில் படுப்பது வரையில் என்னென்ன செய்ய வேண்டும் என்று இந்நூல் கட்டளையிடுகிறது.  பல் துலக்குவது எப்படி? குளிப்பது எப்படி?  உடுத்துவது எப்படி? உண்பது எப்படி? படிப்பது எப்படி?  யார் யாருக்கு  எவ்வெவ்விதம் மரியாதை காட்டுவது? யார் யாருக்கு உதவி செய்ய செய்ய வேண்டும்? யார் யாரிடம் எப்படி எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்பவையெல்லாம் இந்நூலில் தொகுத்துச் சொல்லப் பட்டிருக்கின்றன.

            இந்நூல் 1857ஆம் ஆண்டு சந்திரசேகர கவிராஜப் பண்டிதரால் பதிப்பிக்கப்பட்டது.

முதுமொழிக்காஞ்சி

முதுமொழி, முதுசொல் என்பன பழமொழியைக் குறிக்கும்.  காஞ்சி என்பது நிலையாமையைக் குறிக்கும்.  முதுமொழிக்காஞ்சி உலகியல் உண்மைகளைத் தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறுவதால், புறப்பொருள் வெண்பாமாலை கூறும் முதுமொழிக்காஞ்சித் துறைக்குரிய பொருள் தெளிவாக அமைந்துள்ளது.  உலகியல் உண்மைகளைப் புலவர் பெருமக்கள் எடுத்தியம்புவதால் இந்நூல், முதுமொழிக்காஞ்சி என்னும் பெயர் பெற்றது.

            பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைத் தொகுத்து உரைக்கும் வெண்பாவில், காஞ்சி என்னும் பெயரே காண்கிறது.  இதில் குறித்த காஞ்சி, முதுமொழிக் காஞ்சி என்பதே சான்றோர் கொள்கை.

            இந்நூலை ஆக்கியவர் மதுரைக் கூடலூர்கிழார் கூடலூர் இவர் பிறந்த மதுரையாக இருக்க்கூடும் வாழ்ந்த ஊராயும் இருத்தல் கூடும்.

            இந்நூலிலுள்ள, பத்துப் பத்துக்களும் ஒவ்வொரு பாடலிலும் முதுமொழிகளும் உள்ளன.  ஒவ்வொரு செய்யுளின் முதல் அடியும், ' ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்' என்றே தொடங்குகின்றமையால், இந்நூல் நூறு குறள் வெண் செந்துறையாலானது.  பாடல் அடிகளிலும் பயின்றுவரும் சொற்குறிப்பைக் கொண்டு ஒவ்வொன்றும் சிறந்த பத்து, அறிவுப்பத்து என்று பெயர் பெற்றுள்ளது.  பத்துப் பத்துகளைக் கொண்டமையால், இந்நூல் முதுமொழிக்காஞ்சி என்று பெயர் பெற்றுள்ளது.

இந்நூல் 1985ஆம் ஆண்டு திருபரங்குன்றம் நாராயண சரணரால் பதிப்பிக்கப்பட்டது.


ஏலாதி

            ஏலம் என்பது மருந்து, மணப்பொருள்களுள் ஒன்று.  ஏலம் ஆதியாக என்றால் ஏலம் முதலாக என்று பொருள்.  ஏலம் முதலாகப் பல மருந்துப் பொருட்களை இணைத்துச் செய்யப் பெறும் மருந்தின் பெயர் ஏலாதி.

            ஏலம் ஆதியான ஆறுபொருள்கள் சேர்ந்த ஒருவகைச் சூரணம் ஏலாதி என மருத்துவ நூல்களில் கூறப்படுகிறது.  அதுபோல ஏலாதி நூலும் ஒவ்வொரு பாடலிலும் ஆறு பொருள்களைப் பெற்று, உயிருக்கு உறுதுணையான அறநெறியை விளக்கி உரைக்கும் ஒப்புமை நீர்மையால் இப்பெயரைப் பெற்றுள்ளது.  இது இல்லற நூலாகவும் துறவற நூலாகவும் வீட்டுநெறி நூலாகவும் உள்ளது.

            இதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக 80 பாடல்கள் உள்ளன.  இந்நூலாசிரியர் கணித மேதாவியார் ஆவார்.  இந்நூலுள் சமண சமயத்தின் சிறப்பு அறங்கள் சுட்டப்பெறுவதால் இவரைச் சைன சமயத்தவர் என்று கொள்ளலாம்.

            தூதுவனுக்கு வள்ளுவர் கூறுகின்ற பண்புகள் அனைத்தையும் ஒரே பாடலில் தொகுத்துத் தருகிறார் ஏலாதி ஆசிரியர்.  இந்நூலுக்குப் பழைய உரை உள்ளது.

            இந்நூல் 1881ஆம் ஆண்டு ஏ. டி. சபாபதிப் பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது.

                            


                                             கைந்நிலை
            கைந்நிலை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.  இந்நூல் அகப்பொருள் துறையில் அமைந்துள்ளது.  இந்நூலாசிரியர் மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் ஆவார். 

இவர் தந்தையார் காவிதியார் எனப்படுவதால் அரசனால் 'காவிதி' பட்டம் வழங்கப்பெற்றவர் எனலாம்.  மாறோக்கம் என்பது கொற்கையைச் சூழ்ந்துள்ள பகுதியைக் குறிக்கும்.  எனவே இவர் கொற்கையை அடுத்த முள்ளி நாட்டு நல்லூரைச் சேர்ந்தவராவார்.

            கை என்பதற்கு 'ஒழுக்கம்' என்பது பொருள்.  ஐந்திணை ஒழுக்கத்தைப் பற்றிக் கூறுகின்ற நூல் ஆகையினால் இதற்குக் 'கைந்நிலை' என்று பெயர் வந்தது.  ஐந்திணை ஒழுக்கத்தில் நிலைபெறுதல் என்று பொருள் கொள்ளலாம்.  ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடல்கள் வீதம் மொத்தம் அறுபது பாடல்களை இந்நூல் கொண்டுள்ளது.  திணைமொழி ஐம்பது என்ற நூலைப் போலவே இந்நூலில் குறிஞ்சி. பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற வரிசையில் ஐந்திணைப் பாடல்கள் அடங்கியுள்ளன.

            களவுக்காதலர்கள் இரவில் சந்திப்பது வழக்கம்.  அதனால் எப்போதும், தலைவி பயந்துகொண்டேயிருப்பாள்.  இருட்டில் வரும் தலைவனுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ! என்ற உணர்வு அவள் உள்ளத்தில் இருந்து கொண்டேயிருக்கும்.    தூக்கமே வராது.

            இந்நூல் 1931ஆம் ஆண்டு இ. வை.  அனந்தராம ஐயரால் பதிப்பிக்கப்பட்டது.  இதற்கு இளம்பூரணர் உரை வகுத்துள்ளார்.                                                                                                                   THE END
2 கருத்துகள்:

  1. மிக அருமையாக ஒவ்வொரு நூலுக்கும் முன்னுரை கொடுத்துள்ளீர்கள். அருமை, அருமை.

    பதிலளிநீக்கு
  2. மிக அருமையாக ஒவ்வொரு நூலுக்கும் முன்னுரை கொடுத்துள்ளீர்கள். அருமை, அருமை.

    பதிலளிநீக்கு