சனி, 30 மே, 2015

நான்மணிக் கடிகை – பொன்மொழிகள்

நான்மணிக் கடிகை – பொன்மொழிகள்
விளம்பிநாகனார்
சீறற்க சிற்றில் பிறந்தாரை …                  3: 3                                                                                                          
வறுமை மிக்க குடியில் பிறந்தவர்தம் செய்கை, நமது உள்ளத்தை வருத்துவதாயினும் அவர்கள் மீது சினம் கொள்ளக் கூடாது. ( தகாதன செய்தாலும் ஏழை எளியோரைச் சீறாதே )
சுட்டு அறிப பொன்னின் நலம் காண்பார் கெட்டு அறிப
கேளிரான் ஆய பயன்
                                                       .                                             5: 3, 4
பொன்னின் தரம் அறிய அதனை உருக்கி அறிவார்கள் ; உறவினரால் உண்டாகும் பயனைத் தம்முடைய செல்வம் எல்லாம் அழிந்து வறுமையுற்ற போதுதான் அறிவார்கள்.
அருளில் பிறக்கும் அறநெறி எல்லாம்
பொருளில் பிறந்து விடும்
                                                                                                           7: 3, 4                  
அருளினால் பிறக்கும் அறத்தோடு பொருந்திய இன்பம் எல்லாம் செல்வ வளத்தால் உண்டாகும்.                                                                                                     
திரு ஒக்கும் தீதில் ஒழுக்கம்
                                                                                                           8: 1
தீமை இல்லாத நல் ஒழுக்கம்  நிறைந்த செல்வத்தைப் போன்றது.  

கற்றார் முன் தோன்றா கழிவிரக்கம்
                                                                                              10: 1
  கற்றுணர்ந்த பெரியோர் இழந்த பொருள்களை எண்ணிக் கலங்கார்.

குளத்துக்கு அணி என்ப தாமரை பெண்மை
நலத்துக்கு அணி என்ப நாணம் தனக்கு அணியாம்
தான் செல் உலகத்து அறம்
                                                                                                          11: 2 – 4
குளத்துக்கு அழகு தாமரை ; பெண்மைக்கு அழகு நாணம் ; ஒருவன் மறுமைக்கு ஆற்றும் அறங்கள்  ஆண்மைக்கு அழகாம்.

கன்றாமை வேண்டும் கடிய பிறர் செய்த
நன்றியை நன்றாக்க் கொளல் வேண்டும்
                                                                                                  13: 1, 2
பிறர் செய்த தீமைகளை மறத்தல் வேண்டும் ; பிறர் செய்த நன்மைகளைப் பெரிதும் நினைத்தல் வேண்டும்.

இன்னாமை வேண்டின் இரவு எழுக இந்நிலத்து
மன்னுதல் வேண்டின் இசை நடுக
                                                                                                    17: 1, 2
இழிவை விரும்பினால் பிச்சை எடுத்தலைச் செய்க ; இவ்வுலகில் என்றும் நிலைத்திருக்க விரும்பினால் புகழ் புரிக.

அவைக்குப் பாழ் மூத்தோரை இன்மை தனக்குப் பாழ்
கற்றறிவு இல்லா உடம்பு
                                                                                                      22: 3, 4
 சான்றோர் இல்லாத அவை பாழ் ; கல்விஅறிவு இல்லாத உடம்பு பாழ்.

இன்மையின் இன்னாதது இல்லை இல் என்னாத
வன்மையின் வன்பாட்டது இல்
                                                                                                           32: 3, 4
வறுமையைப் போல் துன்பம் தருவது வேறு எதுவும் இல்லை ; வறுமை உற்றார்க்கு இல்லை என்னாது ஈதலைப் போல் திட்பமானது வேறு  இல்லை.

நன்றி சாம் நன்றி அறியாதார் முன்னர் ...
                                                                                                           47: 1
பிறர் செய்த நன்மையை நன்மை என அறியாதவர்களிடத்துச் செய்ந்நன்றி கெடும்.

இரை சுடும் இன்புறா யாக்கையுள் பட்டால்
உரை சுடும் ஒண்மை இலாரை ...
                                                                                           52: 1, 2      
நோயுள்ள உடம்பில் சேரும் உணவு, செரிக்காமல் துன்புறுத்தும் ; அறிவு இல்லாதவரை அவர்தம் வாய்மொழியே  துன்புறுத்தும்.
                                                                                        
…தொன் மரபின்
வேதம் உறுவன பாட்டுள வேளாண்மை
வேள்வியோடு ஒப்ப உள
                                                                                                           54: 2 – 4
வேதக் கருத்துக்களை உடைய பழைய தனிப் பாடல்களும் உள்ளன ; வேள்விகளுக்கு நிகரான ஈகைகளும் உள்ளன.

கொடுப்பாரும் கொள்வாரும் அன்னர் பிறப்பாரும்
சாவாரும் என்றும் உளர்
                                                                                                   60: 3, 4
கொடுப்பாரும் ஏற்பாரும் என்றும் உள்ளனர் ; பிறப்பாரும் இறப்பாரும் என்றும் உள்ளனர்.

தனியன் எனப்படுவான் செய்த நன்றி இல்லான்
இனியன் எனபடுவான் யார் யார்க்கே யானும்
முனியா ஒழுக்கத்தவன்
                                                                                          61: 3 - 5  

பிறர்க்கு ஒரு நன்மையும் செய்யாதவன் மக்கட் சமுதாயத்தில் தனித்து விடப்பட்டவனாவான் ; எவராலும் வெறுக்கப்படாத ஒழுக்கத்தை உடையவன் இனியவனாவான்.

… ஒரு குடியில்
கல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான்
இளமை பாராட்டும் உலகு
                                                                                          66: 2 – 4
ஒரு குடும்பத்தில், கல்வி கற்காதவன்   மூத்தவனாயினும் எவரும் மதிக்கமாட்டார் ; கல்வி கற்றவன் இளைஞனாயினும் அவனை எல்லோரும் மதித்துப் போற்றுவர்.

மகன் உரைக்கும்  தந்தை நலத்தை ஒருவன்
முகன் உரைக்கும் உள் நின்ற வேட்கை …                                                 
                                                                                71: 1, 2
தந்தையின் நல் இயல்புகளை மகனின் நடத்தை வெளிப்படுத்தும் ; மனத்தில் உள்ள எண்ணங்களை முகமே வெளிப்படுத்தும்.
கற்றான் தளரின் எழுந்திருக்கும் கல்லாத
பேதையான் வீழ்வானேல் கால் முரியும் ..
                                                                                       75: 1, 2
கல்வி அறிவு உடையோன் தளர்வானேல் எப்படியேனும் உய்வான் ; கல்லாத பேதை தளர்வானேல் முயற்சி கெட்டு அழிவான்.

நலனும் இளமையும் நல்குரவின் கீழ்ச் சாம்
குலனும் குடிமையும் கல்லாமைக் கீழ்ச் சாம்
                                                                                         83: 1, 2
அழகும் இளமையும் வறுமையால் கெடும் ; குலத்து உயர்வும் குடிப் பெருமையும் கல்லாமையால் கெடும்.
     
அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம் கூற்றமே
இல்லத்துத் தீங்கு ஒழுகுவாள்
                                                                                                85: 3, 4
தீமைகள் செய்வார்க்கும் அறக் கடவுளே கூற்றுவனாகும். வீட்டில் இருந்துகொண்டே கள்ளத்தனமாய்க் கற்புக் கெடுபவள் கணவனுக்குக் கூற்றுவன் ஆவாள்.

அருக்குக யார்மாட்டும் உண்டி சுருக்குக
செல்லா இடத்துச் சினம்
                                                                                             89: 3, 4
 அடுத்தவர் வீட்டில் உண்ணுதலைக் குறைத்துக் கொள்க ; செல்லத் தகுதி இல்லாவிடத்துச் சினத்தைத் தணித்துக் கொள்க.

எல்லா விடத்தும் கொலை தீது மக்களைக்
கல்லா வளர விடல் தீது ...
                                                                                              95: 1, 2
எவ்வகையிலும் ஓர் உயிரைக் கொல்லுதல் தீது ; பிள்ளைகளுக்குக் கல்வி கொடுக்காமல் வளர்த்தல் தீது.


யாழொக்கும் நட்டார் கழறும் சொல் ...
                                                                                                   101: 3
 நட்புடையார் இடித்துரைக்கும் வன்சொல்  யாழோசையைப் போலும் இனிமை உடையதாகும்.
                                                                                                
கணன் அடங்கக் கற்றானும் இல்
                                                                                                     104: 3
அறியாமை சிறிதும் இலதாக முற்றும் கற்றறிந்தாரும் இல்லை.





                                                          முற்றும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக