ஞாயிறு, 17 மே, 2015

சிலப்பதிகாரச் சிந்தனைகள் – பகுதி - 2

From – kalappal.blogspot.com

   சிலப்பதிகாரச் சிந்தனைகள் – பகுதி - 2

ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்வினை
இட்ட வித்தின் எதிர்ந்துவந்து எய்தி
ஒட்டுங்காலை ஒழிக்கவும் ஒண்ணா
                                                                            சிலப். 10: 171 – 173
 ஒழிக என வேண்டினும்  ஒழியாது வல்வினை; தானே வந்து தன் பயனை ஊட்ட வல்லது; இட்ட வித்தினைப் போல ஒன்றுக்குப் பத்தாகப் பெருகித் வந்து பொருந்தும்;  வல்வினையை எவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.
                                                                                             
நெறியின் நீங்கியோர் நீரல கூறினும்
அறியாமை என்று அறியல் வேண்டும்
                                                                                சிலப்.10: 237, 238
நெறி தவறி நடப்போர்  தகாதன கூறினும்  அறியாமையால் அவ்வாறு கூறினர் என்று அறிந்து கொள்ள வேண்டும்.
பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தெந்திசை ஆண்ட தென்னவன் வாழி
                                                                              சிலப்.11: 19, 20
கொடிய கடலானது பஃறுளி ஆற்றுடனே பல மலை அடுக்குகளையும் உடைய குமரி மலைத் தொடரினையும்  தன்னகத்தே இழுத்து விழுங்கிக்கொண்டது.கடல் கோளால் இழந்த அவ்விடத்திற்கு ஈடாகப் புதிதாக  வடதிசைக் கங்கையையும் இமயத்தையும் வென்று கைக்கொண்டு தென்திசை முழுவதையும் ஒரு குடைக்கீழ் ஆண்டவன் அத் தென்னவன், அவன் புகழ் வாழ்க.                                                                                         

வாய்மையின் வழாஅது மன்னுயிர் ஓம்புநர்க்கு
யாவதும் உண்டோ எய்தா அரும் பொருள்
                                                                        சிலப்.11: 158, 159
வாய்மையினின்று வழுவாது உயிர்கள் அனைத்தையும் காப்பவர்களுக்குக் கிட்டாத அரும்பொருள் என்று ஏதேனும் உண்டோ?
                                                                                            
கொடுங்கோல் வேந்தன் குடிகள் போலப்
படுங்கதிர் அமையம் பார்த்திருந்தோர்க்கு
                                                                                     சிலப்.13: 15, 16
கொடுங்கோல் வேந்தன் ஆட்சியின் கீழ் வாழும் குடிமக்கள் அவன் மறைவை ஆவலுடன்  எதிர்பார்த்திருப்பதைப் போல, வெம்மையான கதிரவன் மறையும் பொழுதை  அவர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தனர்
உலகு புரந்து ஊட்டும் உயர்பேர் ஒழுக்கத்துப்
புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி
வையை என்ற பொய்யாக் குலக்கொடி
                                                                   சிலப்.13: 168 – 170     
உலகினைக் காத்து உணவுதரும்  உயர்ந்த கொள்கை உடையவள் ; புலவர் நாவிலே பொருந்தியிருக்கும் பூங்கொடியாள்; வையை என்னும் பொய்யாக் குலக்கொடி.
ஒய்யா வினைப் பயன் உண்ணுங்காலைக்
கையாறு கொள்ளார் கற்றறி மாக்கள்
                                                                                      சிலப்.14: 33, 34
அறிவுடையோர், போக்கவியலாத வினையின் பயனைத் துய்க்கும் காலத்தில் ஒருபோதும் செயலிழந்து வருந்த மாட்டார்கள்.
பெண்டிரும் உண்டியும் இன்பம் என்று உலகின்
கொண்டோர் உறூஉம் கொள்ளாத் துன்பம்
                                                                         சிலப்.14: 39, 40
இவ்வுலகில் பெண்டிரும் உணவுமே இன்பம்  என்று வாழ்வோர் முடிவில் அளவற்ற துன்பத்தினையே காண்பார்கள்.
                                                                                         
வானம் பொய்யாது வளம் பிழைப்பு அறியாது
நீள்நில வேந்தர் கொற்றம் சிதையாது
பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு ...
                                                                  சிலப்.15: 145 – 147

              பத்தினிப் பெண்டிர் இருந்த நாட்டின்கண் வானம் பொய்க்காது  மழை பொழியும் வளம் பிழையாது விளைவு பெருகும் அரசர் கொற்றம் சிதையாது நாடு சிறக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக