ஞாயிறு, 10 மே, 2015

பொற்குவியல்

– பொற்குவியல்
நன்னன் உதியன் அருங்கடிப் பாழி
தொல்முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த
பொன்னினும் அருமை நற்கு அறிந்தும் அன்னோள்
                 பரணர், அகம். 258 : 1 -3
நன்னனாகிய உதியனது அரிய காவலையுடைய பாழிச் சிலம்பில் தொன்மைமிக்க வேளிர்கள் பாதுகாத்து வைத்திருந்த பொன்னைக் காட்டிலும் நம் தலைவி அடைதற்கு அரியவள்.

புதைத்த செல்வம்
கொற்றச் சோழர் குடந்தை வைத்த
நாடுதரு நிதியினும் செறிய
அருங்கடிப் படுக்குவள் அறனில்யாயே
                                               குடவாயிற் கீரத்தனார், அகநா.60 : 13-15
வெற்றிபொருந்திய சோழர் குடவாயிற்கண் போற்றி வைத்த, பகைவர் நாடு திறையாகக் கொடுத்த நிதியைக் காட்டிலும் மிகவும் அரிய காவற்படுத்திவிடுவாள்.
புதைந்த செல்வம்127

265 கங்கையில் புதைந்த செல்வம்
பல் புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழீஇ கங்கை
நீர்முதல் கரந்த நிதியம் கொல்லோ
                            -மாமூலனார், அகநா.265 : 4 – 6
பலவகைப் புகழும் போர் வெல்லும் ஆற்றலும் உடைய நந்தர் என்பாரது சிறப்பு மிக்க பாடலிபுரத்திலே, ஈட்டித் திரட்டிக் குவித்து வைத்திருந்து பின்னர் கங்கையாற்றின் நீர் அடியில் மறைத்து வைத்து மறைந்தொழிந்த நிதியம் போன்ற பெரும் பொருளோ ...
நந்தர் தலைநகர் பாடலிபுத்திரம். பகைவர் கவந்தெடுத்துச் செல்லாதவாறு அன்னோர், கங்கையாற்றின் அடியில் சுருங்கை செய்து மறைத்து வைக்க, அப்பொருள் மறைந்து ஒழிந்தது என்பது வரலாறாகும்.

நந்தன் வெறுக்கை எய்தினும் மற்றுஅவண்
தங்கலர் ........................ அகம். 251: 5, 6  என்றும் மாமூலனார் முன்னர்க் கூறியுள்ளார்.
நீருக்கடியில் புதைத்து வைக்க முடியுமா?
 இச்செய்தியின் வரலாற்று உண்மையை ஆய்க..
372- மறைத்து வைத்த செல்வம்
 அருந்தெறன் மரபிற் கடவுள் காப்பப்
பெருந்தேன் தூங்கும் நாடுகாண் நனந்தலை
அணங்குடை வரைப்பிற் பாழி ஆங்கண்
வேண்முது மாக்கள் வியனகர்க் கரந்த
அருங்கல வெறுக்கையின் ………
                     பரணர், அகநா. 372 : 1 – 5
பிறரால் தெறுதற்கரிய முறைமையினையுடைய கடவுள் காத்தலின் பெரிய தேன் கூடுகள் தொங்குவதும் நாட்டின் எல்லையினைக் காண்டற்குரிய உயர்ச்சியினையும் அகன்ற இடத்தினையும் உடையதுமாகிய அச்சம் பொருந்திய பக்கமலையினையுடைய பாழி மலையிடத்தே பழைய வேள்குடி மக்கள் தமது அகன்ற ஊரின்கண் மறைத்துவைத்த அரிய அணிகலமாகிய செல்வத்தைப் போல …. – குறிஞ்சி.




149பொன்சுமந்த கலம்149
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ
அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய
நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்
        எருக்காட்டூர்த்  தாயங்கண்ணனார், அகநா.149 :  8-12
சுள்ளி என்னும் பெயருடைய பேரியாறு சேரர்க்குரியது- யவனர் மரக்கலம் பொன்னை விலையாகக் கொடுத்து மிளகை ஏற்றிச்செல்லும் – முசிறிப் பட்டினத்தை  பாண்டியன் வளைத்து- போரில் வென்று அங்கிருந்த பொற்பாவையைக் கவர்ந்து சென்றான். முசிறி – புறம்.343, அகம் 57.

பொன் சுமந்த கலம்
சினம் மிகு தானை வானவன் குட கடல்
பொலம் தரு நாவாய் ஓட்டிய அவ்வழி
பிற கலம் செல்கலாது அனையேம் அத்தை
                    மாறோக்கத்து நப்பசலையார், புறநா.126 : 14 – 16
சினம் மிக்க படையுடைய சேரன் மேலைக் கடலில் பொன்னைத் தரும் மரக்கலம் (கப்பலை) செலுத்துமிடத்து இடையில் வேறு சிலர் மரக்கலம் செலுத்த முடியுமோ?

காடு தந்த பொன்
மலை பயந்த மணியும் கடறு பயந்த பொன்னும்
கடல் பயந்த கதிர் முத்தமும்
உலோச்சனார், புறநா. 377 : 16, 17
மலையிடைப் பெற்ற மணிகளையும் காட்டிற் பெறப்பட்ட பொன்னையும். கடலிடத்தே பெறப்பட்ட ஒளி படைத்த முத்துக்களையும்..( காண்க. அகநா.)
வெள்ளி வெண்கலம்
 அமிழ்துஅன மரபின் ஊந்துவை அடிசில்
வெள்ளி வெண் கலத்து ஊட்டல் அன்றி
  ஒளவையார்,புறநா.390 : 17, 18
அமிழ்து போன்ற சுவை உடைய ஊந்துவையலோடு கூடிய சோற்றை, வெள்ளியால் ஆகிய வெண்மையான கலத்தே பெய்து உண்பித்தலோடு..
பொன்கலம்கரும்பு
தேள் கடுப்பு அன்ன நாட்படு தேறல்
கோள்மீன் அன்ன பொலங்கலத்து அளைஇ
ஊண்முறை ஈத்தல் அன்றியும் கோள்முறை
விருந்து இறை நல்கியோனே அந்தரத்து
அரும்பெறல் அமிழ்தம் அன்ன
கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங் கடையே
 ஒளவையார், புறநா.392 : 16 – 21
 தேளினது கடுப்புப் போல நாட்பட்ட புளிப்பேறிய கள்ளை, கோளாகிய விண்மீன் (நாள் மீனினும் கோள் மீன் பெரிது )போன்ற பொன் வள்ளத்திற் பெய்து, உண்ணும் முறைப்படி அளிப்பதன்றி, கொள்ளும் முறையில் விருந்தாக எம்மை இருத்தி உண்பித்தான். கடற்கு அப்பாலுள்ள தாய்நாட்டில் உள்ள பெறுதற்கரிய அமிழ்தம் போன்ற கரும்பை இந்நாட்டிற்குக் கொண்டு வந்தவனுடைய பெரிய வழித்தோன்றல்.
( அந்தரத்து = வேற்று நாடு )அதியமான் முன்னோர்கள் கரும்பினைக் கொண்டுவந்த செய்தி.)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக